அட்டவணை
- 1. ஆன்மீகம் ஓர் அறிமுகம்
- 2. ஆன்மீகத்தின் வரைவிலக்கணம்
- 3. ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும் உள்ள வேறுபாடு
- 4. ஆன்மீகம் ஏன் நமக்கு இன்றியமையாதது?
- 5. ஆன்மீகம் மற்றும் வாழ்வின் நோக்கம்
- 6. ஆன்மீகம் என்பது ஒரு நடைமுறை அறிவியல்
- 7. ஆன்மீகத்தில் உன்னத நிலையை அடைந்த வழிகாட்டியின் (குரு) முக்கியத்துவம்
- 8. ஆன்மீகப் பாதைகள்
- 9. ஆன்மீகத்தில் தடைகள்
- 10. ஆன்மீக பயிற்சி
- 11. முடிவுரை
1. ஆன்மீகம் ஓர் அறிமுகம்
நம்மில் பலர் ஆன்மீகத்தை அவரவர் சொந்த வழிகளில் ஆராய்ந்திருக்கிறோம். இந்த தேடல் தனிப்பட்டதாக இருந்தாலும் (அதாவது, ஆன்மீகம் பற்றிய தனிப்பட்ட கருத்தை நாம் அனைவரும் கொண்டுள்ளோம்), ஆன்மாவில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உள்ளோம். ஏனெனில்,மக்களின் மனதில் உள்ள ஆன்மீகம் என்பது வாழ்க்கையின் அர்த்தம், நோக்கம் மற்றும் அதன் பாதைக்கான தேடலுடன் ஒத்ததாக இருக்கிறது.
மக்கள் பல்வேறு காரணங்களால் ஆன்மீகத்தில் ஈர்க்கப்பட்டு அவர்களின் ஆன்மீக பயணத்தைத் தொடங்குகின்றனர். பொதுவாக, இதற்கு ஒரு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
- ஆன்மீக பரிமாணத்தைப் பற்றிய ஆர்வம் : வாழ்க்கையின் நோக்கம் என்ன, நான் எங்கிருந்து வந்தேன், மரணத்திற்குப் பிறகு நாம் எங்கு செல்வோம்? போன்ற வாழ்க்கையின் மிகவும் ஆழமான கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவது இதில் அடங்கும்.
- வாழ்க்கையில் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் போது : நவீன அறிவியலின் எல்லைக்கு அப்பாற்பட்ட தங்களின் வாழ்க்கையில் உள்ள தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கான பதிலைத் தேடுவதற்கு மக்களுக்கு பெரும்பாலும் இது ஒரு ஊக்கியாகவே உள்ளது. ஆகவே அவர்கள் ஒரு ஜோதிடர், ஒரு உளவியலாளர் அல்லது ஒரு மகானை அணுகுகின்றனர்.
- ஆன்மீக நிவாரணத்தில் ஆர்வம் : சூட்சும ஆற்றலைச் செலுத்துவதன் மூலம் நிவாரணப்படுத்தும் திறனானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு கலையாகும்.
- ஆளுமை மேம்பாட்டில் ஆர்வம் : சிறந்த நபராக இருக்க விரும்பும் எண்ணம் ஒருவரை ஆன்மீகத்திலும் மேலும் ஆன்மீக வாழ்க்கைக்கும் இட்டுச் செல்கிறது.
- ஆன்மீக ரீதியாக வளர விரும்புவது : நம்மில் சிலருக்கு ஆன்மீகத்தில் வளர வேண்டும் என்ற உள்ளார்ந்த எண்ணம் இருக்கும் போது ஆன்மீகப் பாதையை அடைவதற்கு எந்த ஒரு வினையூக்கியும் தேவையில்லை.
ஆன்மீகத்தின் அர்த்தத்தைத் இணையத்தில் தேடுபவர்களுக்கு நிறைய இலக்கியங்கள் கிடைக்கின்றன. இருப்பினும், இது மற்றொரு சிக்கலை முன்வைக்கிறது, ஏனெனில் ஒருவர் மிகச் சரியான வரைவிலக்கணத்தை தேர்வு செய்வதில் குழப்பமடையலாம். இந்த கட்டுரையில், ஆன்மீகத்தின் வரைவிலக்கணத்தையும் மற்றும் அதன் நடைமுறை நுண்ணுறிவையும் வழங்குகிறோம்.
2. ஆன்மீகத்தின் வரைவிலக்கணம்
சமஸ்கிருதத்தில், ஆன்மீகத்தை அத்யாத்ம என்று அழைக்கிறோம். இது ஆதி மற்றும் ஆத்மன் (ஆத்மனஹ) ஆகிய இரண்டு வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது. ஆதி என்றால் ஆரம்பம் அல்லது தொடக்கம் பற்றியது, ஆத்மன் என்றால் ஆன்மா என்று பொருள். ஆன்மா என்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள இறை தத்துவம் மற்றும் நமது உண்மையான இயல்பு ஆகும். இது சூட்சும உடலின் முக்கிய அங்கமாகும், மற்றும் பரபிரம்ம இறை தத்துவத்தின் ஒரு பகுதியளவாகும். பரிபூரண உண்மை (சத்), பரிபூரண உணர்வு (சித்) மற்றும் ஆனந்தம் (ஆனந்த்) ஆகியவை இவற்றின் பண்புகளாகும். ஆன்மா எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் ஒருவர் அனுபவிக்கும் ஏற்ற தாழ்வுகளால் (மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை) அவை பாதிக்கப்படுவதில்லை.
நமது இயல்பு நிலையான ஆனந்த நிலையில்(ஆன்மாவின் இயல்பு) நாம் அனைவரும் இயற்கையாகவே இருக்க விரும்புகிறோம். நாம் அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தேடுவதற்கும், நம்மை மகிழ்விக்கும் என்று எண்ணி பல்வேறு விஷயங்களின் பின்னால் ஓடுவதற்கும் இதுவே காரணம். இருப்பினும், நவீன கால வாழ்க்கையின் மனஅழுத்தங்கள் மற்றும் சிரமங்களிலிருந்து ‘மகிழ்ச்சி’ என்பது பிடிமானமில்லாதது மற்றும் விரைவில் மறையக் கூடியது என்று நாம் அனைவரும் அறிந்ததே ஆகும்.
தனது ஆன்மாவின் இயல்பைப் ஒருவர் புரிந்துகொண்டு அந்த பயணத்தில் அதை அடையாளம் கொள்ளவும் அதன்மூலம் அவரின் உண்மையான இயல்புகளை அனுபவிப்பதுவுமே ஆன்மீகமாகும். ஆன்மீகம் என்பது எப்படி ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பது பற்றிய விரிவான அறிவியல் ஆகும்.
ஆன்மீக அறிவியலின் நோக்கம் மிகப் பெரியது, மேலும் ‘நான் யார்’, ‘நான் எங்கிருந்து வந்தேன்’, ‘வாழ்க்கையின் நோக்கம் என்ன’, ‘மரணத்திற்குப் பிறகு நான் எங்கு செல்வேன்’ போன்ற ஆழமான கேள்விகளுக்கான பதில்களையும் உள்ளடக்கியது.
ஆன்மீகம் அல்லது ஆன்மீக விஞ்ஞானம் சமஸ்க்ருதத்தில் பரவித்யா (உச்ச அறிவியல்) என்று அழைக்கப்படுகிறது, மற்ற அனைத்து விஞ்ஞானங்களும் அபரவித்யா அதாவது கீழ்நிலை அறிவியல் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு ‘அறிவியல்’ என்றால் நவீன அறிவியலைக் குறிக்கிறோம். பகுத்தறிவாளர்களும் பெரும்பாலான மக்களும் அறிவியலையும் ஆன்மீகத்தையும் தனித்தனி துறைகள் என்று எண்ணுகின்றனர். இருப்பினும், ஆன்மீகம் என்பது முடிவிலா ஞானம், அதாவது அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஞானமாகும். இது முழு ஸ்தூல உலகம் மற்றும் கண்ணுக்குத் தெரியாத சூட்சும உலகம், அனைத்து ஸ்தூலமான மற்றும் ஆன்மீக தொடர்புடைய பகுதிகள், அனைத்து ஸ்தூல மற்றும் சூட்சும அதிர்வலைகள், ஆற்றல்கள் மற்றும் அதிர்வுகள், அனைத்து நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்கள், முழு பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருள்களை உள்ளடக்கியது. பிரபஞ்சத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை உள்ள கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலம் பற்றிய அனைத்து அறிவும் அதன் பதிவுகளும் ஆன்மீகத்தில் அடங்கியுள்ளது.
3. ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும் உள்ள வேறுபாடு
பலபேருக்கு ஆன்மீக விஷயங்கள் மற்றும் பௌதிக உலகத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிய அடிப்படை அறிவை முதன்மையாக அவர்களது மதம் அளிக்கிறது. இருந்தாலும் மதங்கள் பெரும்பாலும் சம்பிரதாயப் பிரிவு உடையதாக இருப்பது இயல்பு. ஒரு ‘பிரிவு’ என்பது பொதுவாக கடவுளை அடைவதற்கான தங்கள் பாதை சிறந்தது மற்றும் விரும்பத்தக்கது என்று நினைக்கும் ஒரு குழுவாகும்.
இருப்பினும், ஆன்மீகத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை கடவுளுக்கான பாதைகள் உள்ளன என்பதாகும். வெவ்வேறு நபர்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களுக்கு ஒரே மருந்தை ஒரு மருத்துவர் பரிந்துரைக்க மாட்டார் அது போல, ஒரே மாதிரியான ஆன்மீக பயிற்சி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்காது. ஆன்மீகப்பயிற்சியானது தனிநபரின் மனோபாவம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டால், விரைவான ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கடவுள் பரந்த மனப்பான்மையுடையவர் அவரை அனுபவப்பூர்வமாக உணர, நாமும் நமது ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பரந்து விரிந்திருக்க வேண்டும். மதம் அல்லது ஆன்மீகம் பற்றிய ஒரு குறுகிய மனப்பான்மை அல்லது இனச்சார்புடைய கண்ணோட்டம் பெரும்பாலும் ஆன்மீக வளர்ச்சியைத் தடுத்து தேக்கத்தை ஏற்படுத்துகிறது.
4. ஆன்மீகம் ஏன் நமக்கு இன்றியமையாதது?
நாம் யார் எங்கிருந்து வந்தோம் என்பதை எண்ணாமல், உலக வாழ்க்கையில் உள்ள அனைத்து மகிழ்ச்சியையும் அனுபவித்து விடவேண்டும் என்ற நோக்கமே நம்மை இயக்குகிறது. இந்த தேவையானது கலாச்சாரப் பின்னணி, மதம், பாலினம், சமூகம் அல்லது நிதி நிலை போன்றவற்றை கூட பொருட்படுத்தாது அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. இருப்பினும், ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், சராசரியாக மக்கள் 30% நேரம் மட்டுமே மகிழ்ச்சியை அனுபவிப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளே நாம் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இதில் உடல் மற்றும் மனோரீதியான பிரச்சனைகளும் அடங்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இயற்கையில் உடல் அல்லது மனோ ரீதியாகவோ இருக்கும் பிரச்சினைகள் ஆன்மீக மூல காரணத்தைக் கொண்டிருக்கலாம்,என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இதன் பொருள், ஒரு பிரச்சனை ஆன்மீக காரணங்களால் ஏற்பட்டாலும், அது முதலில் உடல் அல்லது மனோரீதியான பிரச்சனையாகவே வெளிப்படும்.
முக்கிய ஆன்மீக பிரச்சனைகள் விதி (கர்மா), மறைந்த மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தீயசக்தியால் ஏற்படும் கஷ்டங்கள்.
ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், ஒருவர் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளில் 50% க்கும் அதிகமானவை ஆன்மீகக்காரணங்களால் ஏற்படுகின்றன என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் முக்கிய நிகழ்வுகள் அதாவது திருமணம், நல்ல மற்றும் தீய உறவுகள், கடுமையான விபத்துக்கள் மற்றும் நோய்கள் போன்றவை பெரும்பாலும் அவரின் விதியின் காரணமாக அமைகின்றது.
இந்த குறிப்பு முக்கியமானது – எந்த ஒரு பிரச்சனைக்குமான தீர்வை அதற்கு தொடர்புடைய நிலையிலேயே வழங்க வேண்டும்.
ஆன்மீகத்தை மூல காரணமாக கொண்ட கஷ்டங்கள் ஒருவருக்கு இருக்கும்போது, அவருக்கு ஆன்மீக ரீதியான தீர்வை அளிப்பது பயனுள்ளதாக அமையும். குறிப்பாக பிரச்சனையின் மூல காரணம் ஆன்மீக ரீதியில் இருந்தால், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட அதாவது ஆன்மீகம் சார்ந்த தீர்வானது, உடல் மற்றும் மனோரீதியான பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கின்றன.
5. ஆன்மீகம் மற்றும் வாழ்வின் நோக்கம்
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இவ்வளவு தானா வாழ்க்கை? என்று எண்ணி நம்மில் பலர் ஆச்சரியத்திற்கு உள்ளாகிறோம்.
எடுத்துக்காட்டாக – நல்ல கல்வியைப் பெறுவது, பணம் சம்பாதிப்பது, கடன் பெற்று , கார் வாங்குவது, பெரிய கடன் எடுத்து வீடு வாங்குவது, அதைவிட பெரிய வீடு வாங்குவது, ஏதாவது ஒரு துறையில் வெற்றியும் அங்கீகாரமும் அடைவது, குடும்பத்தை வளர்த்து கடைசியில் இறந்து போவது. நாம் வாழும் வாழ்க்கைக்கு வேறு ஏதேனும் உயர்ந்த நோக்கம் இருக்கிறதா? என்று நம்மில் சிலர் யோசிக்க ஆரம்பிக்கலாம்.
இந்த உள்முக சிந்தனையை செய்த பிறகு, ஏதோ ஒரு ஆழ்ந்த மனமாற்றத்தினை நாம் உணர்ந்து இருக்கலாம். இத்தகைய உணர்வானது நம்மில் பலருக்கு, அவரவருடைய ஆன்மீகப்பயணத்தைத் தொடங்கத் தூண்டுதலாக உள்ளது.
ஆன்மீக அறிவியலின் படி, உண்மையில் பிறப்பதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே உள்ளன:
- ஒருவரது வாழ்வின் முதல் நோக்கம் விதி அல்லது அவரது பிறப்பின் கர்மாவை நிறைவு செய்வதற்காகும்
- வாழ்க்கையின் இரண்டாவது மற்றும் மிக முக்கியமான நோக்கம் ஆன்மீகரீதியாக வளர்வது
உலகளாவிய தத்துவத்தின்படி ஆன்மீகத்தைப் பயிற்சி செய்வது இந்த இரண்டு நோக்கங்களுக்கும் உதவுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்தும் பாதகமான விதியை அழித்து ஆன்மீகத்திலும் வளர உதவுகிறது.
குறிப்பு: மேலும் தகவலுக்கு, வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
6. ஆன்மீகம் என்பது ஒரு நடைமுறை அறிவியல்
நம்மில் பலர் ஆன்மீகம் மற்றும் ஆன்மீகக் கருத்துகள் பற்றிய புத்தகங்களைப் படித்திருப்போம். எவ்வாறாயினும், ஒரு தனிநபருக்கு அந்த கோட்பாடு வழிகாட்டுதலை மட்டுமே வழங்கும் , வெறும் கோட்பாடு (அது சரியானதாக இருந்தாலும் கூட) அதை அவர் நடைமுறைக்குக் கொண்டுவராத வரை ஒருபோதும் அனுபவரீதியாக உணரமுடியாது. இது ஒரு நபருக்கு அறிவார்ந்த ஆன்மீக கருத்துகளாக மட்டுமே உள்ளது. அந்த அறிவை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, ஆன்மீக அனுபவங்கள் அல்லது ஆன்மீகத்தை உணர (அனுபவிக்க) முடியும். உண்மையில் ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள ஆன்மீக பயிற்சியானது உதவுகிறது. அதனால்தான் இதனை ஒரு நபரின் ஆன்மீக பயணம் என்று கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் தத்துவார்த்த அறிவுக்கு 2% மட்டுமே முக்கியத்துவம் உள்ளது, அதே நேரத்தில் 98% முக்கியத்துவம் அதனை நடைமுறைக்கு கொண்டுவருவதில் உள்ளது.
ஒருவர் ஆன்மீகத்தைப் பற்றி படித்துவிட்டு, அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால், அவர் ஒருபோதும் அதன் முக்கியத்துவத்தை உணரப்போவதில்லை. இதன் விளைவாக, விரைவாகவோ அல்லது சிறிது காலத்துக்கு பிறகோ அவர் அதில் ஆர்வம் காட்டுவதை நிறுத்தலாம். உண்மையில், அவர் வாழ்க்கையில் அதன் பயனை சந்தேகிக்கக்கூட நேரலாம்.
நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஒருவர் பின்பற்றும் ஆன்மீக புத்தகத்தின் நம்பகத்தன்மையும் ஆகும். ஆன்மீகப் புத்தகத்தை எளிதில் மதிப்பாய்வு செய்ய முடியாது என்பதால், அது சரியானதா என்பதைப் புரிந்துகொள்வது எளிதல்ல. ஆன்மீகம் பற்றிய புத்தகங்களில் ஆசிரியருக்கு ஏற்படும் தாக்கம், என்ற கட்டுரையின் மூலம் அனைத்து ஆன்மீக புத்தகங்களும் சமமானவை அல்ல என்பதையும், புத்தகத்தில் உள்ள ஆன்மீக கருத்துக்களின் நம்பகத்தன்மை அதன் ஆசிரியரைப் பொறுத்தது என்பதையும் நாங்கள் காட்டியுள்ளோம்.
7. ஆன்மீகத்தில் உன்னத நிலையை அடைந்த வழிகாட்டியின் (குரு) முக்கியத்துவம்
ஒருவரின் ஆன்மீக பயணத்தில் ஆன்மீக வளர்ச்சியடைந்த வழிகாட்டி (குரு) இருப்பதன் முக்கியத்துவத்தை ஒருவராலும் உணர்ந்து கூறமுடியாது. எந்த ஒரு ஆன்மீகத் தேடலிலும், குரு என்பவர் மிகவும் முக்கியமானவர். ஏனென்றால்,ஆன்மீகம் என்பது ஒருவரின் ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியை கடந்து, அதற்கு பதிலாக அவரின் இயல்பே ஆன்மா என்பதை உணர்த்துவதே ஆகும். ஒரு குரு தானாகவே அந்த பாதையில் நடந்து அதனை முழுதும் அறிந்தவர் ஆகிறார், ஆதலால், அவரே அதன் ஒரே அதிகாரி மற்றும் கடவுள்-உணர்தலுக்கான பயணத்தில் நம்மை வழிநடத்தும் வல்லவர் ஆவார்.
துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள 80% குருக்கள் போலியானவர்கள் அல்லது ஆன்மீக வழிநடத்துதலில் அதிகாரம் அற்றவர்கள் ஆவார்கள். பணம் சம்பாதிப்பதற்கும் தன்னை முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று காட்டிக்கொள்வதற்குமே ஆன்மீக தோற்றத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஆன்மீகத்தில் ஆர்வமுள்ளவர்களை தவறாக வழிநடத்துவதால் சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளனர். இன்றைய யுகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் 20% ஆன்மீக நிலையில் உள்ளவர்களே, ஆதலால் அவர்கள் ஒரு நபரை துறவியா இல்லையா என்பதை அறியத் தகுதியற்றவராக உள்ளனர். இருப்பினும், அவர்கள் பொதுவாக அவர்களை நிவாரணப்படுத்தக்கூடிய அல்லது அற்புதங்களைச் செய்யக்கூடிய ஒரு நபரைப் பின்தொடர்கிறார்கள்.
ஒரு ஸாதகரின் ஆசை ஆத்மார்த்தமாக(தீவிரமாக) இருந்தால், வெளிப்படாத இறை தத்துவம் தலையிட்டு அந்த ஸாதகர் உண்மையான குருவை அடைய வழிநடத்துகிறது.
8. ஆன்மீகப் பாதைகள்
கடவுளை அடைவதற்கான பல பொதுவான பாதைகள் உள்ளன, அதில் மிகவும் பிரபலமானவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- பக்தியோகம் – பக்தியின் பாதை
- நாமசங்கீர்த்தனையோகம் – நாமஜபத்தின் பாதை
- கர்மகாண்டம் – சடங்கு வழிபாட்டின் பாதை
- கர்மயோகம் – செயல்பாட்டின் பாதை (அதாவது ஒரு செயலில் இருந்து பலனை எதிர்பார்க்காமல் இருப்பது)
- தியானயோகம் – தியானத்தின் பாதை
- ஞானயோகம் – அறிவின் பாதை (புனித நூல்கள் மூலமாகவோ அல்லது சூட்சுமமாகவோ ஆன்மா தொடர்பான அறிவைப் பெறுதல்)
- ஹடயோகா – தானே ஏற்றுக்கொண்ட கடுமையான பாதை
- குண்டலினியோகம் – ஆன்மீக சக்தியின் பாதை
இந்த பாதைகள் ஸாதகரின் மனோபாவத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒருவர் கடவுளை அடைய எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், அவருடைய ஆளுமை குறைகளின் தீவிரத்தைக் குறைப்பது முக்கியம். ஒருவருக்கு பல ஆளுமை குறைகள் இருந்தால், அவரால் எந்தப் பாதையிலும் நிலைத்திருக்க முடியாது.
ஒரு ஸாதகர் தனது ஆன்மீக பயணத்தில் வேகமாக முன்னேற உதவ பராத்பர குரு டாக்டர். ஆடவலே அவரது குருக்ருபாயோகத்தை (குருவருளின் பாதை) நிறுவினார். இந்த பாதை ஆன்மீகத்தின் மற்ற அனைத்து பாதைகளின் சிறந்த பகுதிகளையும் ஒருங்கிணைக்கிறது. ஆளுமை குறைகளை நீக்குவதற்கும், ஒருவரின் அகம்பாவத்தை குறைப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆன்மீக பயிற்சியின் 8 படிகளை இது பரிந்துரைக்கிறது.
9. ஆன்மீகத்தில் தடைகள்
ஒரு ஸாதகர் ஆன்மீகத்தில் வளர, அவரின் ஆன்மீக பயணத்தில் பின்வரும் தடைகளை அவர் சந்திக்க நேரிடும்.
- ஆன்மீக பயிற்சியில் தவறான வழிகாட்டுதல்: ஒருவருக்கு ஆன்மீக ரீதியில் முன்னேற வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தாலும், அவர் பின்பற்றும் வழிகாட்டுதல் தவறாக இருந்தால், சில மாதங்கள் என்றில்லை பல வருடங்கள் கூட வீணாகலாம்.
- உலகளாவிய கொள்கை(சட்டப்படி) அல்லாமல்: அனைத்து ஆன்மீக பயிற்சியும் உலகளாவிய சட்டம்/ தத்துவ அடிப்படையில் இருக்க வேண்டும், இல்லையெனில் அது தேக்கத்திற்கு வழிவகுக்கும்.
- எந்த சட்டமும் ஒருவருடைய சந்தேகங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால்: ஆன்மீகம் பற்றிய சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படாவிட்டால், ஒரு ஸாதகர் தவறான பாதையில் சென்று இறுதியில் ஆன்மீகத்தின் மீது அவருக்கு அவநம்பிக்கை ஏற்படக்கூடும்.
- ஆன்மீக பரிமாணத்திலிருந்து வரும் தீயசக்திகள் பெரும்பாலும் ஸாதகர்களை சூட்சுமமாக தவறான முறையில் வழிநடத்துகின்றன.
- சில சமயங்களில் ஒரு ஸாதகரின் வாழ்க்கை சுழற்சியானது அவரது ஆன்மீக பயிற்சியை தடம்புரள செய்கிறது
- சில சமயங்களில் ஒருவர் தனது ஆன்மீகப் பயிற்சியில் தேக்கநிலையை உணராமல் இருக்கலாம். அதனால்தான் ஒருவரின் பயணத்தில் ஆன்மீக வழிகாட்டி இருப்பது அவசியம்.
- ஆன்மீக பாதையில் கடவுளை உணர்ந்து கொள்வதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.சில நேரங்களில், தங்கள் பாதையில் ஸாதகர்கள் செய்யும் ஆன்மீக பயிற்சியில் மன உறுதி ஊக்கமின்மை அல்லது விடாமுயற்சியின் பற்றாக்குறையை உணரலாம், இது அவர்களின் ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்கும். அதனால்தான்,சகஸாதகர்கள் அல்லது ஒரு ஆன்மீக அமைப்புடன் தொடர்புகொள்வது, ஸாதகர்களுக்கு அவர்களின் ஆன்மீக பயணங்களில் தேவையான உத்வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்க உதவுகிறது.
10. ஆன்மீக பயிற்சி
ஆன்மீகப்பயிற்சியை தொடங்குபவர் பலராக இருந்தாலும், அதன் இறுதிக்கட்டத்தை அடைபவர்கள் மிகக் குறைவானவர்களே. மிகச்சிலரே ஒரு வருட ஆன்மீகப்பயிற்சியில் நிலைத்திருக்கின்றனர், அதிலும் மிகச்சிலரே உயர்ந்த ஆன்மீக நிலைகளுக்கு முன்னேறுகிறார்கள்.
ஏன் இந்த நிலை?
ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் உண்மையான ஸாதகர்கள் குறைவாகவே உள்ளனர். மேலும், ஆன்மீகம் என்பது உலகளாவியது மற்றும், பல தவறுகளைச் செய்தவர் கூட, நேர்மையான ஆன்மீக பயிற்சியால் ஆன்மீகத்தில் முன்னேற முடியும்.
மக்கள் ஆன்மீகத்தை கைவிடுவதற்கான காரணம், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆன்மீகத்தை அதன் உலகளாவிய கோட்பாட்டின் படியும் மற்றும் சரியான ஆன்மீக வழிகாட்டியின் வழிகாட்டுதலின் படியும் கடைப்பிடிப்பதில்லை. விரைவான ஆன்மீக வளர்ச்சிக்கு ஆன்மீக பயிற்சியின் 6 அடிப்படை கொள்கைகளின்படி ஆன்மீகத்தைப் பயிற்சி செய்ய எஸ்.எஸ்.ஆர்.எப். பரிந்துரைக்கிறது.
11. முடிவுரை
இந்த கட்டுரை உங்களுக்கு ஆன்மீகத்தின் அர்த்தத்தை தெளிவுபடுத்த உதவியது என்று நம்புகிறோம். இது உங்களுக்கு உதவியிருந்தால், ஆன்மீகத்தில் ஆர்வமுள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டுள்ள உங்களை ஆன்மீக பயிற்சி பற்றிய எங்களின் பதிவை படிக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம். நீங்கள் ஆன்மீகத்திற்கு புதியவர்களா, தயவுசெய்து ஆன்மீக பயிற்சியை எப்படி துவங்குவது என்ற இந்த பதிவினை படிக்கவும்.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் ‘நேரடி அளவளாவுதல்'(லைவ் சாட்) செயல்பாடு மூலம் எங்களைத் தொடர்புகொள்ள தயங்க வேண்டாம்.