அட்டவணை
1. அறிமுகம்
இறைவன் இருக்கிறார் என்பதன் தீவிர விழிப்புணர்வே ஆன்மீக உணர்வு ஆகும். இறைவன் மீது கொண்டுள்ள ஆன்மீக உணர்வை அதிகரிப்பது நம் ஆன்மீக பாதையின் முக்கியமான அங்கமாகும். ஏனென்றால், இறைவன் மீது தீவிர ஆன்மீக உணர்வை கொள்ளும்போது, அது இறைவன் மீது தீவிர பக்தி உருவாக வழிவகுக்கிறது. இவ்வாறு தீவிர பக்தி உருவாகும்போது, நம்மைப் பற்றிய எண்ணம் எதுவும் இல்லாமல் இறைவனை பற்றி மட்டுமே சிந்தனை செய்கிறோம். இந்த நிலையை அடைந்த பின், இறைவன் நம் மீது அருள் பொழிய, நாம் மேலும் மேலும் ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்.
ஆன்மீக பயிற்சியை செய்வதால் மட்டுமே ஆன்மீக உணர்வு விழிப்படையும் என பல ஸாதகர்கள் எண்ணுகிறார்கள். தத்துவ ரீதியாக இது சரியாக இருப்பினும், ஆன்மீக பயிற்சி செய்யும் சகலராலும் இந்நிலையை இலகுவாக அடைய முடியும் என்ற உத்தரவாதம் இல்லை. ஏனென்றால், நாம் அனுபவிக்கும் ஆன்மீக உணர்வு, ஆன்மீக பயிற்சியினால் மட்டுமே ஏற்பட்டதெனில், அதற்கு பல காரணிகள் இருக்கலாம். ஆன்மீக பயிற்சி மேற்கொள்வதன் நோக்கம், இறைவனோடு ஒன்றிணைவதில் உள்ள தீவிர ஆர்வம், நமது ஆழ்மனதில் இறைவனை பற்றி உருவாகியுள்ள மையம், ஒருவர் செய்யும் ஆன்மீக பயிற்சி மற்றும் அவர் பின்பற்றும் ஆன்மீக பாதை போன்றவை அக்காரணிகளாம். விரைவாக ஆன்மீக உணர்வை அதிகரிக்க, முதலில் நமது ஆன்மீக உணர்வை அதிகரிக்கும் விஷயங்கள் யாவை என தெரிந்துகொண்டு, அதன் பின், முக்கியமாக, அவற்றை நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்ததாகும்.
இக்கட்டுரையில், இறைவன் மீது கொள்ளும் ஆன்மீக உணர்வை அதிகரிக்க மேற்கொள்ளும் சில முயற்சிகளை வழங்கியுள்ளோம். இதன் மூலம் நமது ஆன்மீக முன்னேற்றம் விரைவுபடுத்தப்படும்.
2. ஆன்மீக உணர்வை அதிகரிப்பதில் உள்ள தடைகள்
ஆன்மீக உணர்வை அதிகரிப்பது எவ்வாறு என தெரிந்து கொள்வதற்கு முன்பு, ஆன்மீக உணர்வை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு தடையாக இருப்பவை யாவை என தெரிந்து கொள்வோம். ஆன்மீக உணர்வை விழிப்படையச் செய்வதில் பிரதானமான தடைகள் யாதெனில்:
- அறியாமை: இறைவனின் உருவம், அவரது குணாதிசயம் மற்றும் அவரது செயல்பாட்டின் முறையை பற்றி அறியாத அஞ்ஞானத்தை இது குறிக்கும். மகான்களால் எழுதப்பட்ட புனித நூல்களையோ. அல்லது எஸ்.எஸ். ஆர்.எஃப். (ssrf.org) போன்ற வலைத்தளங்களையோ கற்று தெரிந்து கொள்வதனால் ஒருவரின் அறியாமை நீங்கும்.
- தானே கர்த்தா என்ற உணர்வு: வாழ்வில் நடந்தேறும் காரியங்களின் கர்த்தா நான் அல்லது இன்னொருவரே எனவும், இறைவன் அல்ல எனவும் எண்ணுவது ‘கர்த்ருத்வம்’ எனப்படும்.
- அகம்பாவம்: ‘நான் இறைவனில் இருந்து வேறுபட்டவன்’ எனும் எண்ணமே அகம்பாவம் ஆகும். இதுவே ஆன்மீக உணர்வை விழிப்படைய செய்வதில் உள்ள மிகப்பெரிய தடையாகும். எந்த அளவிற்கு அகம்பாவம் அதிகமாக உள்ளதோ அந்த அளவிற்கு ஆன்மீக உணர்வை விழிப்படைய செய்யும் வாய்ப்பு குறைகிறது. அகம்பாவத்தை குறைப்பதை பற்றி மேலும் விவரங்கள் அகம்பாவத்தை குறைத்தல் என்னும் பகுதியில் உள்ள கட்டுரைகளிலோ அல்லது பராத்பர குரு டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே தொகுத்த அகம்பாவத்தை குறைப்பது எப்படி என்னும் எஸ்.எஸ்.ஆர்.எஃப். -இன் நூலிலோ பெறலாம்.
- ஆளுமை குறைகள்: அளவுக்கு மிஞ்சி ஆளுமை குறைகள் இருந்தால், ஆன்மீக உணர்வின் எண்ணங்களை கிரகிப்பது கடினம். தன் ஆளுமையில் உள்ள குறைகள் யாவை என தெரிந்து, அவற்றை களையும் செயற்பாட்டில் ஈடுபடுதல் ஸாதகர் ஒருவரின் ஆன்மீக பாதையின் மிக முக்கிய அங்கமாகும்.
ஆன்மீக பயிற்சி எனும் பகுதியில் இங்கு குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் ஆழ்ந்து ஆராய்ந்துள்ளோம்.
3. ஆன்மீக உணர்வை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒப்பிடக்கூடிய முக்கியத்துவம்
ஆன்மீக உணர்வை அதிகரிக்கும் முயற்சிகளை வரிசைக்கிரமமாக கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது. இந்த பட்டை வரைபடம் கொண்டுள்ள எண்கள், இம்முயற்சிகளின் ஒப்பிடக்கூடிய முக்கியத்துவத்தை குறிக்கும். நாம் செய்யும் அனைத்தும் இறைவனுக்கு செய்யும் சேவையே (குருசேவை) என்பதை சித்தத்தில் கொண்டு செயல்படுவதால் ஆன்மீக உணர்வு மிக வேகமாக அதிகரிக்கும் என இவ்வரைபடம் மூலம புரிந்து கொள்கிறோம். இது நம் முயற்சிகளுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்கும் செயல்கள் மீது கவனம் செலுத்த உதவும்.
4. ஆன்மீக உணர்வை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளும் ஆன்மீக பயிற்சி
4.1 குருசேவை
வரைபடத்தில் காண்பித்ததுபோல், உலக வாழ்க்கை அல்லது ஆன்மீக பயிற்சி, எதுவாக இருப்பினும், அனைத்தையும் அது குருவிற்கு செய்யும் சேவை என எண்ணி செய்வதால் ஆன்மீக உணர்வு அதிகரிப்பதில் அதிகபட்ச பலன் கிடைக்கிறது. ‘குரு என்பவர் யார்‘ என்னும் கட்டுரையில் ஒரு ஸாதகரின் வாழ்வில் குருவின் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி விளக்குகிறோம். இறைவனின் வெளிப்படாத (நிர்குண) வழிகாட்டும் தத்துவத்தின் மனித (ஸகுண) ரூபமே குரு என்பவர் ஆவார். இவ்வாழ்க்கை இறைவனின் கருணையால் நாம் பெற்ற பரிசு ஆகும். இறைவனை உணர்ந்து அவருடன் ஒன்றர இணைய, பிறப்பு-இறப்பு சக்கரத்திலிருந்து விடுவிக்கும் பொருட்டு பல ஜென்மங்களாக குரு அல்லது இறைவனின் வழிகாட்டும் தத்துவம் பொறுமையாக நம்முடன் பயணித்திருக்கிறது. இறைவனுடன் ஒன்றியிருக்கும் நிலையில் அமைதியில் திளைக்கிறோம். குரு எவ்வளவு தூரம் நம்மை வழிகாட்டி வளர்த்து விடுகிறார் எனவும், நம்மை திரும்ப திரும்ப காப்பாற்றி இருக்கிறார் எனவும் புரிந்து கொள்கையில் நம் நன்றியுணர்வு மேலோங்குகிறது.
குருவிற்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையாகும். மனித ரூபத்தில் இருக்கும் இறைவனுக்கு சேவை செய்து மகிழும் வாய்ப்பு நம்மில் அனைவருக்கும் கிடைப்பதில்லை. எனினும் நாம் செய்யும் எல்லா காரியங்களையும் குருவிற்கு செய்யும் சேவையாக எண்ணலாம். நம் தினசரி வாழ்க்கையில் இவ்வாறு செய்யலாம். அதற்கு சில உதாரணங்கள் வழங்கியுள்ளோம்.
- துணி துவைக்கும் போது அது குருவினுடைய உடை எனவும், உணவு தயாரிக்கையில் அது குருவிற்காக தயாரிக்கப்படுகிறது எனவும் சிந்தையில் கொள்ளலாம். மற்றவருக்கு உணவு பரிமாறும்போது கூட அது குருவிற்கு பரிமாறப்படுகிறது என எண்ணலாம்.
இங்கு ஒரு தருணம் நிறுத்தி சிந்திப்போம். இறைவன் நம் இல்லத்திற்கு ஸ்தூல ரூபத்தில் விஜயம் செய்கிறார் எனவும் அவருக்கு நாள் முழுவதும் சேவை செய்ய வேண்டும் எனவும் கற்பனை செய்துகொள்வோம். அப்பொழுது நமது செய்கைகளும் மனப்பான்மையும் எவ்வாறு இருக்கும்? இக்காட்சியை மனதில் நிறுத்தி, இதே ஆன்மீக உணர்வுடன் நமது குடும்பத்தினரையும் நாம் சந்திக்கும் நபர்களையும் கவனித்துக்கொள்ளலாம். இந்த ஒரு அம்சத்தினை நடைமுறைப்படுத்தும்போது, நமது இல்லங்களில் நல்ல ஆன்மீக அதிர்வலைகளை உணர முடிவதோடு நம் ஆன்மீக உணர்வும் அதிகரிக்கிறது.
- மேலே வழங்கப்பட்டுள்ள குறிப்பின் தொடர்ச்சியாக, நமது இல்லத்தில் ஆச்ரமம் போன்ற சூழ்நிலையினை ஏற்படுத்தி, ஸாத்வீகமாக வைத்திருக்கலாம். மானசீகமாக நம் இல்லத்தினை இறைவனுக்கு அல்லது குருவிற்கு அர்ப்பணித்து,, நாம் வெறும் காப்பாளர்களே எனும் ஆன்மீக உணர்வுடன் இல்லத்தை கவனித்துக்கொள்ளலாம். ‘நானே இந்த இல்லத்திற்கு சொந்தக்காரன்’ எனும் அகம்பாவம் கூட இதனால் இல்லாமல் போகிறது.
- நம் இல்லத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் இறைவன் அல்லது குருவினுடையது என எண்ணும்போது, அவற்றை கவனமாக கையாள்வோம். அதற்கிணங்க, இறைவன் அல்லது குருவின் இருப்பினை இல்லத்தில் உணரமுடிகிறது. ஆன்மீக பயிற்சிக்கு உதவும் உபகரணங்களில் இறை தத்துவத்தை காண பழகும் ஒரு ஸாதகர் படிப்படியாக எல்லாவற்றிலும் இறைவனை காண்கிறார். இதுவே உயிருள்ள மற்றும் உயிரற்ற படைப்புகள் யாவற்றிலும் இறை தத்துவத்தை உணர வழிவகுக்கிறது.
- ஸாதகர் ஒருவர் எல்லா சந்தர்ப்பங்களிலும் குரு தன் அருகாமையில் இருப்பதாக நினைத்துக்கொள்ள, அவருடைய குறையான பயந்த சுபாவம் மறைந்துபோனது.
ஸத்சேவை செய்யும்போது, ஆரம்பத்தில், நாம் செய்கின்றோம் எனும் உணர்வு ஏற்பட, சூட்சும கர்வம் உருவாகிறது. இவ்வாறு செய்யப்படும் சேவை, ஸத்சேவையாக கருதப்படாது. ஸத்சேவை செய்யும்போது, இறைவனே நம் மூலமாக அதனை செய்வதாக ஏற்றுக்கொண்டு, தானே கர்த்தா என்ற உணர்வு இல்லாது செய்ய வேண்டும்.
ஸத்சேவை நிறைவேறிய பின்பு, சேவை செய்ய வாய்ப்பு தந்தமைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். நாம் முயற்சி எடுக்கும்போது உணர்ந்த ஆனந்தமே, அது ஸத்சேவையாக நடந்தேறியதா என கணிக்கும் ஒரு வழியாகும். ஸாதகர்களாக நம்மிடம் இறைவன் என்ன எதிர்பார்க்கிறார் என ஒவ்வொரு காரியத்திலும் உள்முகமாக சிந்தித்து செயல்படும்பொழுது, நம்முள் ஆன்மீக உணர்வு விரைவாக வளர்கிறது.
4.2 ஆன்மீக உணர்வை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளும் வேறு சில வழிகள்
நாமஜபம்: ஆன்மீக உணர்வுடன் செய்யப்படும் நாமஜபமே இறைவனை அடைகிறது. நாம் விரும்பிய ஒருவரை பற்றியோ அல்லது ஒரு பொருளையோ எவ்வாறு பிரயத்தனம் இல்லாமல் திரும்ப திரும்ப நினைக்கின்றோமோ, (உதாரணமாக, காதலன் தன் காதலியை பற்றி நினைத்தல் அல்லது தாய் தன் குழந்தையை பற்றி நினைத்தல்) அவ்வாறே மனதும் இறைவன் மீது அன்பு செலுத்த பழக்கப்பட வேண்டும். இறைவன் மீது அன்பு செலுத்த ஆரம்பித்த பின்பு, ஒருவருக்கு இறைநாமம் இலகுவாக ஞாபகத்தில் இருப்பதோடு, அதனை திரும்ப திரும்ப சொல்வதால் (நாமஜபம்) ஆனந்தமும் கிடைக்கிறது. பின்பு நாமஜபமே வாழ்கை முறையாக மாறுகிறது. ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை, ஒருவர் இறைவனை வணங்கி, நாமஜபம் ஆழமாக மற்றும் இதயப்பூர்வமாக நடக்கவேண்டும் என வேண்டிக்கொள்ளலாம்.
பிரார்த்தனையும் நன்றியுணர்வும்: நமது ஆன்மீக பயிற்சிக்கு உதவி புரியுமாறும், நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் ஆன்மீக பயிற்சியாக நடைபெற வேண்டும் எனவும் தொடர்ந்து இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் இறைவனை வேண்டி நிற்கும்போது, நமது இயலாமையை ஒப்புக்கொண்டு உதவி கேட்பதனால், சரணாகதி ஏற்பட்டு அகம்பாவம் குறைகிறது. பிரார்த்தனை என்பது சரணாகதியாகும். நன்றி செலுத்தும்போது மட்டுமே இந்த சரணாகதி பூரணம் அடைகிறது. நன்றி செலுத்துவது என்பது இறைவன் அல்லது குருவே காரியத்தின் கர்த்தா என புரிந்துகொள்ளுதல் ஆகும். இதனால் அகம்பாவம் குறைகிறது. தமது பிரார்த்தனை நிறைவேறிய பின்பு இறைவனுக்கு நன்றி சொல்ல ஸாதகர்கள் மறப்பது வழக்கம். ஸத்சேவை ஒன்றை புரிவதற்காக இறைவனின் உதவியை நாடி, அது நல்லபடியாக நடந்து ஆனந்தத்தையும் அனுபவித்த பின்பு, திருப்தி அடைந்து நன்றி சொல்ல மறந்துவிடுகிறார்கள். ஆன்மீக அனுபவங்களை பெறுவதால் மற்றும் ஆனந்தத்தை அனுபவிப்பதால் கூட ஒரு ஸாதகரிடம் சூட்சும அகம்பாவம் உருவாகலாம். ஆகவே, ஆன்மீக அனுபவம் பெற்ற பின்பும், ஆனந்த நிலை அனுபவித்த பின்பும், இறைவனுக்கு நன்றி செலுத்துவது மிக முக்கியமாகும்.
கற்றல் மற்றும் ஸத்சங்கம்: ஆன்மீக உணர்வு கொண்டுள்ள ஸாதகர்களின் முயற்சிகளிலிருந்து கற்றுக்கொள்வது ஆன்மீக உணர்வினை அதிகரிப்பதற்கு இலகுவான வழியாகும். இதற்கு நாம் ஸத்சங்கத்தில் பங்கேற்று, இறைவன் மீது ஆன்மீக உணர்வு கொண்டுள்ள ஸாதகர்களை கவனித்து, அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது முக்கியமாகும்.
ஆன்மீக உணர்வினை தினமும் அதிகரிப்பது எப்படி எனும் எஸ்.எஸ்.ஆர்.எஃப். -இன் நூலை படித்து, ஏதேனும் புதிதாக ஒரு முயற்சியை தொடர்ந்து பயிற்சி செய்ய பரிந்துரை செய்கிறோம்.
கற்கும் மனப்பான்மை: எல்லாம் இறைவனால் நடப்பதாகவும், எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் எண்ணுவதற்கு முயற்சி செய்யவேண்டும். நல்லதோ கெட்டதோ, எல்லா சந்தர்ப்பங்களிலும் இது பொருந்தும். இவ்வாறு கற்கும் மனப்பான்மையோடு வாழ்க்கையை எதிர்நோக்கும்பொழுது நாம் எப்பொழுதும் ஆனந்தத்தில் திளைக்கிறோம். ஏனென்றால், இறைவன் நம் அருகிலேயே இருந்து, எவ்வாறு ஒரு சிறந்த ஸாதகராக இருப்பது என நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தின் மூலமும் நமக்கு கற்றுத்தருவதாக எண்ணுகிறோம்.
அகம்பாவத்தை குறைத்தல்: குருவின் காரியத்தை பற்றி தொடர்ந்து சிந்தித்தோமானால், நமது செய்கைகளும் இறைவன் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் நடக்கிறது. ஸத்சேவை செய்யும்போது தவறான எதிர்மறை எண்ணங்களையோ மற்றவர் பற்றிய சந்தேகங்களையோ மனதிற்குள் அனுமதிக்கக்கூடாது. ஏனென்றால், நமது எதிர்மறை எண்ணங்களால் மற்ற ஸாதகர்கள் வேதனை அடைந்தால், குருவின் அருள் கிடைக்காது. இதனாலேயே ‘ஒரு சேவகன் போன்ற பக்தியை’ (தாஸ்யபக்தி) இறைவன் மீது கொள்ளவேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறான பக்தியில், பக்தன் இறைவனை தன் தந்தையாக, தாயாக, யாதுமாக எண்ணி, தன்னை இறைவனின் மகனாக அல்லது சேவகனாக எண்ணுகிறான். நாம் பணிவோடு இருக்கும்போது அகம்பாவத்தைக் குறைக்க முயற்சிகள் எடுக்க முடிவதனால், ஆன்மீக உணர்வினை அதிகரிக்கவும் அதிக முயற்சிகளை எடுக்க முடிகிறது.