A2 சுய ஆலோசனை முறை
அட்டவணை
1. A2 சுய ஆலோசனை முறை
நம்மில் பலர் நிறைய நேரம் நம் மனதினுள்ளே எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதிலும், கடந்து போன சம்பவங்களை மீண்டும் நினைத்து, யார் நம்மை என்ன சொன்னார்கள் என்பதிலேயே உழன்று, பொதுவாக நமக்கு அதிருப்தி மற்றும் வருத்தம் தரும் விஷயங்களிலேயே கவனத்தை வைக்கிறோம். எதிர்மறை எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் எதிரெண்ணங்கள் மிகத் தீவிரத்தோடு வருவதினால், அவற்றில் நாம் சிக்கிக் கொள்கிறோம். எந்தவொரு நெருங்கிய உறவிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்பது அறியப்பட்ட உண்மை. இருப்பினும், சாதாரணமான வார்த்தை பரிமாற்றம் அல்லது கருத்து வேறுபாடு நம் உணர்ச்சி எல்லைக்குள் இல்லாதபோது, சிக்கல் தொடங்குகிறது. இது நிகழும்போது, நான் சொல்வதுதான் சரி என்ற மனப்பான்மையுடன் உரையாடலில் ஆதிக்கம் செலுத்தி, புண்படுத்தும் விஷயங்களை பேசி, கடந்த காலத்தைத் தோண்டி எடுக்கிறோம். இது மனக்கசப்புக்கும் மேலும் வாதங்களுக்கும் வழிவகுத்து, மற்ற நபரை முடக்குகிறது. இத்தகைய எதிரெண்ணங்கள் நம்மை பாதித்து, நாம் தவறாக இருக்கலாம் என்பதயே ஒப்புக்கொள்ள விடா. நமக்கு ஒரு எதிரெண்ணம் இருக்கும்போது (வெளிப்படுத்தப்பட்ட அல்லது வெளிப்படுத்தப்படாத) நாம் நம் நடத்தையை முற்றிலும் நியாயப்படுத்தி, மற்றவரே தவறு செய்தவர் என எப்போதும் உணர்கிறோம். உள்முக சிந்தனைக்கு இடமளிப்பதே இல்லை.
இருப்பினும், இது போன்ற ஒரு வாதத்திற்குப் பிறகு நாம் எப்படி உணர்கிறோம்? உண்மை என்னவென்றால், நாம் கோபப்படும்போது மிகுந்த வேதனையையும் உறுதியற்ற தன்மையையும் உணர்கிறோம். நமது சக்தி எல்லாம் வடிந்து, சோர்வடைந்து, சண்டை இடுவதா அல்லது ஓடிப் போவதா எனும் தெரிவை எடுக்கிறோம்.. மனதின் இந்த எதிர்மறையான பாங்கிலிருந்து எவ்வாறு விலகி, மனதை எதிரெண்ணங்களிலிருந்து விடுவிப்பது என்பதில் நம்மில் பெரும்பானோர் போராட்டத்தையே எதிர்கொள்கிறோம். கட்டுக்கடங்காத மனதைத் தூய்மைப்படுத்த ஒரு வழி இருக்கிறதா? எதிரெண்ணங்கள் என்பது நமது ஆழ் மனதின் எண்ணப்பதிவுகளின் எதிர்மறையான தூண்டுதல்கள் ஆகும். எதிரெண்ணங்களை சமாளிக்க ஒரு ஆன்மீக நுட்பம் உள்ளது – அது எதிரெண்ணங்களை மாற்றவும், எதிர்மறையான சிந்தனை பாங்கை பொருத்தமான மறுமொழிகளுடன் மாற்றவும் உதவும், A2 வகை சுய ஆலோசனைகள் ஆகும். இந்த சுய ஆலோசனைகளை அர்ப்பணிப்புடன் மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் நம் ஆழ் மனதில் உள்ள ஆளுமை குறைபாடுகளின் பதிவுகள் குறைவதால், நாம் லேசான உணர்வை அனுபவிக்கிறோம். இது நம் அன்றாட மகிழ்ச்சியிலும் நலத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
2. A2 சுய ஆலோசனை முறையின் வரைவிலக்கணம்
A2 சுய ஆலோசனை முறை அல்லது மறுமொழி மாற்று நுட்பம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த செயல்முறை, நம் மனதின் தவறான மறு மொழியை சரியான மறுமொழியுடன் மாற்றுவதற்கு உதவுகிறது. ஏற்படும் தவறுக்கு முதன்மை காரணமாக நம்முடைய எதிரெண்ணங்கள் இருக்கும், குறுகிய கால சம்பவங்களை கடக்க இது உதவுகிறது. இங்கே A2 சுய ஆலோசனை முறை தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் எதிரெண்ணத்தை தூண்டும் சம்பவத்தின் காலம் முக்கியமானது. எதிரெண்ணத்தின் காலத்தை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. உதாரணத்திற்கு, ஒரு சக ஊழியர் நம்மிடம் காபி குவளைகளை எப்படி நேர்த்தியாக வைக்க வேண்டும் என்பதை பகிர்ந்துகொள்ளும் போது, அதைப் பற்றி பல மணிநேரங்களுக்கு நமக்கு ஒரு எதிரெண்ணம் உண்டானால், அப்பொழுது நாம் A2 சுய ஆலோசனை முறையையே தேர்ந்தெடுப்போம். ஏனென்றால் இந்த விஷயத்தில் காபி குவளைகளை நேர்த்தியாக வைத்திருப்பது எப்படி என்று எனது சக ஊழியர் கூறிய, எதிரெண்ணத்தை தூண்டிய சம்பவத்தின் காலம் மிகவும் குறுகியதே ஆகும்.
சம்பவத்தின் காலம் குறைவாக இருக்கும்போது, தவறான எதிரெண்ணங்களை நீக்க A2 சுய ஆலோசனை முறையை பயன்படுத்தவும். |
A2 சுய ஆலோசனை முறையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காட்டும் ஒரு உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உதாரணம் : ரோகிணி ஒரு இசைக் கச்சேரிக்குச் செல்லாமல் படிக்க வேண்டும் என்று அவளது தந்தை சொன்னபோது, அவர் ஒருபோதும் தன்னை இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதிப்பதே இல்லை என்ற ஒரு எதிரெண்ணம் அவளுள் எழுந்தது.
இந்த தவறில், சம்பவம் அதாவது இசைக் கச்சேரிக்குச் செல்லாமல் படிக்க வேண்டும் என்று ரோகிணியின் தந்தை சொன்னது சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இருப்பினும், ரோஹிணி தனது எதிரெண்ணத்தினால் ஒரு நாள் அல்லது பல நாட்கள் தனது தந்தையிடம் பேசாமல் இருக்கலாம். எனவே, A2 சுய ஆலோசனை முறை பயன்படுத்தப்பட வேண்டும்.
2.1 A2 சுய ஆலோசனை ஒன்றை அமைப்பதற்கான வடிவமைப்பு
அதன் வடிவமைப்பானது :
எனவே, மேலே குறிப்பிட்டுள்ள தவறுக்கு கீழே உள்ள சுய ஆலோசனை பயன்படுத்தப்படலாம்.
- சுய ஆலோசனை “எப்பொழுதெல்லாம்” என்று தொடங்கி, பின்னர் தூண்டுதலாக விளங்கும் நிகழ்வின் பகுதி சேர்க்கப்படுகின்றது (இங்கே அது ரோகிணியின் தந்தை இசை நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்று அவளிடம் கூறுவது).
- அடுத்து, ரோகிணியின் தந்தை சொன்னது சரி என்ற உணர்தல் ஏற்படுத்தப்பட்டு, பின்னர், சரியான எதிரெண்ணம் மாற்றாக தரப்படுகிறது (இங்கே அது, ரோகிணி தனது தந்தையின் சொல்லை கேட்டு படிப்பது).
- மற்றவர்களை விமர்சித்தல், எரிச்சல் அடைதல், முன்கோபம், சண்டையிடும் இயல்பு, செய்த தவறுக்கு வருந்தாமை, பிடிவாதம், சந்தேகப்படுதல், உயர்வு மனப்பான்மை, கர்வம் போன்ற குறைபாடுகளை சமாளிக்க A2 சுய ஆலோசனை முறையை பயன்படுத்தப்படலாம்.
2.2 எதிரெண்ணங்களும் அதன் பல்வேறு வகைகளையும் பற்றி
ஒரு எதிரெண்ணம் என்பது, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை நம்மால் ஒப்புக்கொள்ள இயலாததால் அச்சூழ்நிலையை குறித்தது நமக்கு உண்டாகும் விரும்பத்தகாத மறுமொழியாகும். எதிரெண்ணம் என்பது கோபத்தினால் ஏற்படுவது என்றே நாம் நினைக்கின்றோம். இருப்பினும், ஒரு சூழ்நிலையில் அல்லது உரையாடல்களின் போது ஒரு நபர் மீது நம் மனம் எதிர்மறையான உணர்ச்சிகளை உணரும்போதெல்லாம், அதுவும் ஒரு எதிரெண்ணமாகவே கருதப்படுகிறது. உதாரணத்திற்கு, காயப்படுதல், உணர்ச்சிவசப்படுதல், பொறாமைப்படுதல், கர்வம் போன்றவை.
தவறான எண்ணங்கள், உணர்ச்சிகள் அல்லது செயல்கள் யாவும் எதிரெண்ணத்தின் ஒரு பகுதியே. இவை ஒரு தவறில் இணைந்து நிகழலாம் அல்லது இவற்றில் ஒன்று ஏற்படலாம். உதாரணமாக : ‘நீண்ட நாள் வேலைக்குப் பிறகு நான் வீட்டிற்கு வந்த போது, படுக்கையில் கிடந்த செய்தித்தாள்கள் மற்றும் துணிகளைப் பார்த்து, என் மனைவி மது ஏன் அறையை ஒழுங்கமைக்க அக்கறை காட்டவில்லை என்று அவள் மீது எரிச்சல் கொண்டேன். நான் மிகவும் சோர்வாக இருந்தாலும், இதை இப்போது நானே செய்தாக வேண்டும், அவள் தொலைக்காட்சியைப் பார்த்து நேரத்தை வீணடிப்பதில் குறியாய் இருக்கிறாள் என்ற எண்ணத்துடன் இதைப் பற்றி நான் அவளிடம் கோபமாகப் பேசினேன்.’ இங்கே, எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் தவறான செயல்கள் தவறின் பகுதிகள் ஆயின.
எதிரெண்ணங்கள் பல்வேறு வகைகளாக இருக்கலாம். அவை வெளிப்படுத்தப் பட்டதாகவோ அல்லது வெளிப்படுத்தப்படாததாகவோ இருக்கலாம். வெளிப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படுத்தப்படாத எதிரெண்ணங்களின் உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நம்முடைய விருப்பத்திற்கு எதிரான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது நாம் உடல் ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ செயல்படும்போது வெளிப்படுத்தப்பட்ட எதிரெண்ணம் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு :
- நான் ஒரு போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டபோது, கோபமடைந்து, மற்ற ஓட்டுனர்களை நோக்கி கூச்சலிடுவதன் மூலமும் தொடர்ந்து வண்டியின் ஹார்னை அழுத்தி ஒலி எழுப்புவதன் மூலமும் எதிரெண்ணத்தை வெளிப்படுத்தினேன்.
- என் கணவர் எனக்கு பிடித்தபடி மிகவும் சூடான காபியை எனக்கு வழங்காதபோது, எனக்கு எதிரெண்ணம் ஏற்பட்டு, காபி இளஞ்சூட்டில் இருப்பதால் நான் குடிக்க மாட்டேன் என்று சொன்னேன்.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நமக்கு மனதுள் எதிரெண்ணம் ஏற்பட்டு, அதை நாம் வெளியில் காண்பிக்காத போது. அதை வெளிப்படுத்தப்படாத எதிரெண்ணம் என்கிறோம். நாம் அவ்வெண்ணத்தை மனதிலேயே வைத்து அடை காக்கிறோம். வெளிப்படுத்தப்படாத எதிரெண்ணங்கள் நம் மன ஆற்றலை உட்கொள் நமக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். நாம் அவற்றை வெளிப்படுத்தவோ அல்லது தீர்வு காணவோ இல்லை என்றால், அவை தீவிரமாக மாறக்கூடும். வெளிப்படுத்தப்படாத எதிரெண்ணங்கள் கவனிக்கப்படாவிட்டால் மற்றும் அவற்றை நீக்க முயற்சி செய்யவில்லை என்றால், அவை நம் ஆழ்மனதில் உள்ள ஆளுமை குறைபாட்டின் எண்ணப்பதிவுகளை அதிகரிக்கும். ஒரு எதிரெண்ணம் வெளிப்படுத்தப்படும்போது அது வலிமையை இழந்து மனம் நிம்மதியை உணர்கிறது. ஒருவர் அதை வெளிப்படுத்திய பின் அதற்குண்டான ஒரு தீர்வையும் பெறலாம்.
ஒருவர் தன்னை வெளிப்படுத்தும் போது எதிரெண்ணத்துடன் இல்லாமல், தீர்வைக் கண்டுபிடிக்கும் நிலையிலிருந்து வெளிப்படுத்துவது சிறந்ததாகும்.
வெளிப்படுத்தப்படாத எதிரெண்ணங்களின் சில உதாரணங்கள் :
- நான் தயாரித்த புதிய தின்பண்டம் அவ்வளவு சுவையாக இல்லை என்று என் தோழி திவ்யா கருத்து தெரிவித்தபோது, அவளை திருப்திப்படுத்துவது கடினம் என்று மனதுக்குள் எனக்கு ஒரு எதிரெண்ணம் வந்தது.
- வேலையில் வருடாந்திர சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டதும், என் சக ஊழியர் மாதவனுக்கு என்னை விட அவரது சம்பளத்தில் ஒரு பெரிய அதிகரிப்பு கிடைத்தது என கேள்விப்பட்டபோது, மாதவன் எப்போதும் எங்கள் முதலாளியைப் புகழ்ந்து பேசுவார், அதனால்தான் அவருக்கு இந்த அதிகமான ஊதிய உயர்வு கிடைத்தது என்று எனக்குள் ஒரு எதிரெண்ணம் வந்தது. என்னால் ஒருபோதும் அவ்வாறு நடந்து கொள்ள முடியாது என்றும் நினைத்தேன்.
சம்பவத்தின் காலம் குறைவாக இருக்கும் இடத்தில், வெளிப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படுத்தப்படாத தவறான எதிரெண்ணங்களுக்கு A2 சுய ஆலோசனை முறை பயன்படுத்தப்படலாம். |
3. A2 சுய ஆலோசனை முறையை எப்போது தேர்ந்தெடுப்பது என்பதை அறிவது எப்படி
A2 சுய ஆலோசனை முறையை எப்போது தேர்ந்தெடுப்பது என்பதை எப்படி அறிவது என்பதைக் காட்டும் ஓட்ட விளக்கப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
A2 சுய ஆலோசனை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நாம் எவ்வாறு அறிவது என்பதை விளக்க கீழே உள்ள தவறை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.
உதாரணம் :
நான் பணிபுரிந்த ஒரு செயற்திட்டத்திற்கான மேம்பாடு தொடர்பான குறிப்புகளை சுதா எங்கள் முதலாளிக்கு முன்னால் பகிர்ந்து கொண்டபோது, அவள் என்னை சிறுமைப்படுத்த முயல்கிறாள் என்று நினைத்து கோபமடைந்தேன்.
உதாரணத்தின் பரிசீலனை :
- சுய ஆலோசனை முறையை தீர்மானிக்க நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி என்னவென்றால் – யாருடைய ஆளுமை குறைபாடு, இந்நிகழ்வில் மன அழுத்தத்திற்கு முதன்மையான காரணம் அல்லது தவறுக்கு யார் காரணம். இங்கே நான் என்பதே விடை, ஏனென்றால் செயற்திட்டத்தை சிறப்பாக செய்ய சுதா எனக்கு உதவியே செய்தாலும், எனது குறைபாடுகள் காரணமாக, எனக்கு எதிரெண்ணம் ஏற்படுகின்றது.
- நாம் கேட்க வேண்டிய அடுத்த கேள்வி என்னவென்றால், ‘இந்த தவறு ஒரு தவறான செயலா, சிந்தனையா அல்லது உணர்ச்சியா அல்லது தவறான எதிரெண்ணமா?’ இங்கே இது சுதாவை குறித்த எனது எதிரெண்ணம் ஆகும்.
- இறுதியாக, எதிரெண்ணத்தை தூண்டும் சம்பவம் குறுகிய கால சம்பவமா என்று நாம் கேட்க வேண்டும். இந்த விஷயத்தில், சுதா எனது தவறுகளை சில நிமிடங்கள் மட்டுமே சொல்லியிருப்பார், எனவே இது ஒரு குறுகிய கால சம்பவம்.
எனவே, பரிசீலனையின் அடிப்படையில், A2 சுய ஆலோசனை முறையை பயன்படுத்தலாம்.
சுய ஆலோசனை பின்வருமாறு :
எப்பொழுதெல்லாம் நான் பணியாற்றிய ஒரு செயற்திட்டத்திற்கான முன்னேற்ற குறிப்புகளை சுதா எங்கள் முதலாளிக்கு முன்னால் பகிர்ந்து கொள்ளுகிறாரோ, அப்பொழுது இந்த திருத்தங்கள் எனது வேலையில் நான் இன்னும் சிறப்பாக இருக்க உதவும் என்பதை உணர்ந்து, அமைதியாக அச்சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு திருத்தங்களைச் செய்வேன்.
- ஒருவரின் மனக்கட்டமைப்பு, ஆளுமை மற்றும் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை, இவற்றின் படி கண்ணோட்டங்கள் மாறுபடும். ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டத்தை தேர்ந்தெடுப்பது நேர்மறையான மாற்றங்களை விரைவாகக் கொண்டு வர உதவுகிறது.
- A2 சுய ஆலோசனை முறையைப் பொறுத்தவரை, ஆளுமை குறைபாட்டை நாம் சுய ஆலோசனையில் குறிப்பிட தேவையில்லை. எடுத்துக்காட்டாக, “சுதா எனது திட்டத்திற்கான முன்னேற்ற குறிப்புகளை என் முதலாளிக்கு முன்னால் பகிர்ந்து கொள்ளும் போதெல்லாம் எனக்கு கோபம் வரும்…” என சுய ஆலோசனையை அமைக்க தேவையில்லை.
- இதற்கு விதிவிலக்கு என்னவென்றால், ஆளுமை குறைபாடு குறித்த விழிப்புணர்வு நம்மில் இல்லையென்றால், சுய ஆலோசனையில் குறைபாட்டைக் குறிப்பிடுவது விழிப்புணர்வை வளர்க்க உதவுகிறது.
இந்த முழுமையான பரிசீலனை கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது :
4. A2 வகை சுய ஆலோசனைகளின் உதாரணங்கள்
இந்தப் பகுதியில், பொதுவாக ஒரு எதிரெண்ணம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளின் பல்வேறு உதாரணங்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். கீழே உள்ள படக்காட்சி தொகுப்பில்
- தவறு
- பரிசீலனை
- பரிந்துரைக்கப்பட்ட சுய ஆலோசனை
ஆகியவை உள்ளன ஒவ்வொரு தவறுக்கும் மாற்று சுய ஆலோசனைகளை நாங்கள் வழங்கியுள்ளோம் என்பதை தயவுசெய்து கவனிக்கவும். ஏனென்றால், எந்தவொரு நபருக்கும் அவர்களின் ஆளுமைக்கு ஏற்ப அவர்களின் மனம் மற்றவற்றை விட சில கண்ணோட்டங்களை அதிகமாக ஏற்றுக்கொள்ளக்கூடும்.
5. முடிவுரை
ஒருவரின் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில், மேலே கொடுக்கப்பட்ட உதாரணங்களில் உள்ளதை போன்ற சூழ்நிலைகளை ஒருவர் எதிர்கொண்டிருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒருவர் எதிர்மறையாக நடந்துகொண்டு, தனக்கும் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் வேதனையை தந்திருக்கலாம். பின்னர் நமது நடத்தையை பற்றி சிந்திக்கும்போது, நாம் இதை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்று நினைக்கிறோம். ஆனால் அந்த நேரத்தில், சூழ்நிலை நம் மோசமான குறைபாடுகளை வெளிப்படுத்தியது. இத்தகைய எதிரெண்ணங்கள் மற்றும் வெளிப்பாடுகள் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தி, மேலும் உறவுகளை சரிசெய்யமுடியாத அளவுக்கு சேதப்படுத்தக்கூடும். நம் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும் என்று நாம் அனைவரும் நம்பினாலும், உண்மையில், அடுத்த முறை அதே சூழ்நிலை உருவாகும்போது, துரதிஷ்டவசமாக, அதே வகையான எதிரெண்ணங்கள் மற்றும் வெளிப்பாடுகளே மீண்டும் நிகழ்கின்றன. நாம் வெளியேற வழியில்லாத ஒரு தீய சுழற்சியில் இருப்பது போல் உணர்கிறோம்.
இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க A2 சுய ஆலோசனை முறை நமக்கு உதவுகிறது. இது நம்முடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு நம்முடைய ஆளுமைக் குறைபாடுகளை அடையாளம் காண உதவுவது மட்டுமல்லாமல், சரியான முறையில் மறுமொழி கொடுக்கவும் நம் மனதைப் பயிற்றுவிக்கிறது. நாம் ஆளுமை குறைகளை களையும் செயல்முறையைத் தொடர்ந்து செய்து மற்றும் A2 சுய ஆலோசனைகளை எடுக்கும்போது, வெவ்வேறு நிகழ்வுகளில் நாம் நிலையாக இருக்கவும் மற்றும் சரியாக செயல்படவும் முடியும். தொடர்ந்து நடைமுறை படுத்துவதினால், நேர்மறையான பதிவுகள் நம் மனப்பாங்கில் பதிந்து நாம் மேலும் சிறப்பாக மாறுகிறோம்.