அட்டவணை
1. C1 வகை சுய ஆலோசனையின் அறிமுகம்
2005-ஆம் ஆண்டில் ஒரு நாளில் மக்கள் மனதில் கொண்டிருக்கும் எண்ணங்களின் எண்ணிக்கையை பற்றிய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை தேசிய அறிவியல் அறக்கட்டளை வெளியிட்டது. அதில், சராசரி ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் 12,000 முதல் 60,000 எண்ணங்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. அவற்றில் 80% எதிர்மறையான எண்ணங்கள், 95% முந்தைய நாள் போலவே மீண்டும் மீண்டும் தோன்றும் எண்ணங்கள் அவற்றிலும் 80% எதிர்மறையான எண்ணங்களே ஆகும். (nsf.gov, 2005, as cited in Antanaityte, tlexinstitute.com)
இந்த ஆராய்ச்சியின்படி, எதிர்மறை எண்ணங்களின் சதவிகிதம் ஆபத்தானதாகவும் மற்றும் உலகம் ஏன் தற்பொழுது எதிர்மறை நிலையில் உள்ளது என்பதற்கான அறிகுறியுமாகும். ஏனென்றால் ஒவ்வொரு தவறான செயலுக்கு பின்னாலும் ஒருவரின் அகம்பாவம் மற்றும் ஆளுமை குறைபாடுகளினால் எழும் தவறான எண்ணம் இருக்கிறது. இத்தகைய எதிர்மறை எண்ணங்கள் நமது செயல்கள், உறவுகள், உலகின் கண்ணோட்டம், மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன. கூடுதலாக, தீய சக்திகள் மக்களின் மனதில் எதிர்மறை எண்ணங்களின் பாதகமான விளைவுகளை பெரிதாக்குகின்றன. மண் மற்றும் நீர் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி கட்டுரையில் மேற்கோள்காட்டியபடி, இது சமூகத்திலுள்ள எதிர்மறையின் அறிகுறியாகும்.
ஒவ்வொரு மனிதனின் மனதில் எழும் எண்ணங்களின் அளவினை கணக்கிட்டோமானால், நம்முடைய மனமானது பரபரப்பாக இருக்கும் வரிக்கடவை (zebra crossing) போன்றதாகும், ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரிலுள்ள ஷிபுயா கிராஸிங் போலவே ஆகும். (இடது படத்தில் குறிப்பது போல). நம்முடைய எண்ணங்கள் வரிக்கடவை பாதையில் இங்கும் அங்குமாக செல்லக்கூடிய லட்சக்கணக்கான மக்களை போன்றதாகும்.
நம் மனதில் அதிவேகமாக ஓடும் எண்ணங்களின் அலைவரிசைகளில் ஒன்றை பிடிப்பதோ அல்லது சுட்டிக் காட்டுவதோ கடினம். ஒரு முக்கியமான பணியில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போது தான் நம் கவனத்தை ஈர்க்கும் அல்லது திசை திருப்பும் எண்ணங்களின் எண்ணிக்கையை பற்றி நாம் ஓரளவு அறிவோம். சில மன அழுத்த சூழ்நிலைகள் காரணமாக நமது எண்ணங்கள் பலவந்தமாக திரும்பத் திரும்ப வரும்போது அவற்றைப் பற்றி நாம் நன்கு அறிந்திருப்போம், மேலும் அது எப்போது முடிவடையும் என்று தீவிரமாக யோசிக்கிறோம்.
நாள் முழுவதும் நாம் கொண்டிருக்கும் இடைவிடாத எண்ணங்களால் நமது ஆற்றல் செலவழிகிறது. இருப்பினும் தொடர்ந்து வரும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் நம் மனதில் எழும்பொழுது, சக்தி இழந்தது போலும் சோர்வாகவும் உணர்கிறோம் என்பது பொதுவாக நாம் அறிந்ததே ஆகும்
இருப்பினும் நாம் பொதுவாக புரிந்து கொள்ளப்படாதது என்னவென்றால், எதிர்மறையானவை உட்பட நமது அனைத்து எண்ணங்களும் உணர்வுகளும் நம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான ஆளுமைகளைத் தருகின்ற நம் ஆழ்மனதில் இருக்கும் எண்ணப்பதிவுகளில் இருந்து உருவாகின்றன. நம் மனதில் ஆழமாக வேரூன்றிய இந்த எண்ணப்பதிவுகள் பல ஜென்மங்களில் வடிவமைக்கப்பட்டு குவிந்துள்ளன. அவை தொடர்ந்து வெளிமனதிற்கு (conscious mind) எண்ணங்களாக தூண்டுதல்களை அனுப்புகின்றன. நம்மில் பெரும்பாலோருக்கு இந்தத் தூண்டுதல்கள் கடலின் அலைகள் கரையை நோக்கி வந்து கொண்டிருப்பதுபோல் இடைவிடாமல் இருக்கின்றன.
சுய ஆலோசனை பற்றிய எங்களின் தொடர் கட்டுரைகளில், ஆழ்மனதில் உள்ள குறைபாடுகளின் தவறான எண்ணப்பதிவுகளை செயலிழக்க செய்ய உதவும் பல்வேறு நுட்பங்களை நாங்கள் உள்ளடக்கியுள்ளோம். இருப்பினும், C1 சுய ஆலோசனை முறை மற்றவற்றை விட சற்று மாறுபட்டு இருக்கிறது. எதிர்மறை எண்ணப்பதிவுகளை அழிப்பதற்கு பதிலாக, வெளிமனதை அடையாத வண்ணம் தடுப்பதற்கு முயற்சி செய்கிறது. எண்ணங்கள் எவ்வாறு தடுக்கப்படுகிறது மற்றும், இந்த சக்தி வாய்ந்த குணப்படுத்தும் முறையை எவ்வாறு பயன்படுத்துவது என்று நாங்கள் இந்தக் கட்டுரையில் விளக்குகிறோம்.
2. C1 சுய ஆலோசனை நுட்பத்தின் வரையறை
C1 சுய ஆலோசனை முறை என்பது ‘பக்தி அல்லது நாமஜப முறை’ என்றும் அழைக்கப்படுகிறது. இது வெளிமனதில் எதிர்மறை எண்ணங்கள் நுழைவதை தடுக்கிறது. இத்தகைய எண்ணங்களைத் தடுக்க கடவுளின் பெயரை உச்சரிக்கும் முறையை பயன்படுத்துகிறது. கடவுளின் பெயரில் நேர்மறையுடைய பேராற்றல் மிகுதியாக உள்ளது, இது எதிர்மறை எண்ணங்களை அழிக்க உதவும். இந்த முறையை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது, ஆழ்மனதில் ஒரு நேர்மையான ‘பக்தி மையத்தை’ உருவாக்க உதவுகிறது, இதனால் வெளிமனதை நோக்கி நேர்மறை எண்ணங்களின் தூண்டுதல்களை தொடர்ந்து வெளியிடுகிறது.
ஒருவர் ஒருமுக மனதுடன் நாமஜபம் செய்யும் பொழுது, நாமஜபத்தின் பதிவுகள் அதிக சக்தியுடன் இருப்பதனால் அதன் எண்ணப்பதிவுகள் மட்டுமே வெளிமனதிற்கு செல்கின்றன. மற்ற எதிர்மறை எண்ணப்பதிவுகள், கடவுளின் நாமத்தை உச்சரிப்பதன் மூலம் ஏற்படும் பதிவுகளை காட்டிலும் குறைவாக இருப்பதினால், வெளிமனதினை அடையக்கூடிய சக்தியை இழக்கிறது. ஆகையால் நாமஜபத்தின் மூலம் ஒருவர், தன்னுடைய எதிர்மறை எண்ணங்களும், உணர்ச்சிகளும் மனதினுள் பதியாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இது எப்படி வேலை செய்கிறது என்பதற்கான உதாரணத்தை வழங்க, உங்களிடம் ஒரு கயிறு உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதன் அருகில் மிக நீளமான வேறொரு கயிற்றை வைத்தால் முதலாவதாக வைத்துள்ள கயிறு அதனுடைய முக்கியத்துவத்தை இழந்து விடும். அதேபோல வெளிமனதில் ‘நாமஜப மையம்’ அதிக முக்கியத்துவம் பெரும்பொழுது, அந்த நேரத்தில் ஏற்படும் மற்ற பதிவுகள் குறைந்த தாக்கத்தை கொண்டுள்ளன. எனவே C1 சுய ஆலோசனை முறையை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமும், ஒருவரின் நாமஜபத்தை அதிகரிப்பதன் மூலமும், ஒருவரின் ஆழ்மனம் ஆன்மீக அளவில் தூய்மை அடைகிறது, மேலும் அவரின் ஆளுமை குறைபாடுகளின் பதிவுகளிலிருந்து வெளிவர உதவியாக இருக்கிறது. C1 சுய ஆலோசனை முறை அதிகப்படியான எண்ணங்களை குறைக்க உதவுகிறது, இது நம்மை அமைதியாகவும் கட்டுப்பாட்டுடனும் வைத்திருக்க உதவுகிறது.
3. C1 ஆலோசனை முறையை வடிவமைக்கும் வழி
C1 சுய ஆலோசனை முறையானது நாம் வெறுமனே இருக்கும்பொழுது அல்லது சில ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடாமல் இருக்கும் பொழுது நம் மனதை நேர்மறையை நோக்கி செயல்பட உதவுகிறது . சுய ஆலோசனையானது, நம் மனதை கடவுளின் பெயரை உச்சரிப்பதில் அல்லது நேர்மறையான வாக்கியம் அல்லது சொற்றொடரை திரும்பத் திரும்ப உச்சரிப்பதில் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்துகிறது.
பின்வருபவை C1 சுய ஆலோசனையின் சில பொதுவான எடுத்துக்காட்டுகள்.
சுய ஆலோசனை: ‘எப்பொழுதெல்லாம் நான் பயனுள்ள சிந்தனையில் அல்லது யாருடனும் உரையாடவில்லையோ அப்பொழுதெல்லாம் < ஒரு பெயரையோ, ஒரு சொல்லையோ அல்லது ஒரு வாக்கியத்தையோ> திரும்பத் திரும்பச் சொல்லத் தொடங்குவேன்’.
சுய ஆலோசனை: ‘எப்பொழுதெல்லாம் நான் யாரிடமும் பேசாமல் இருக்கிறேனோ அல்லது தேவையற்ற எண்ணங்கள் எனக்குள் எழுகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் நாமஜபம் செய்யத் தொடங்குவேன்’.
4. C1 சுய ஆலோசனையின் பயன்பாடு மற்றும் நன்மைகள்
C1 சுய ஆலோசனை முறை மனதில் மிகவும் நேர்மறையான விளைவை உண்டாக்குகிறது. இந்த முறை பின்வருவனவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கும்:
- மனதில் வரும் எண்ணங்கள் அல்லது உணர்வுகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது.
- மனதில் எதிர்மறையான மற்றும் தொடர் தேவையற்ற எண்ணங்கள் வராமல் தடுக்கிறது.
- எதிர்மறை சிந்தனை முறைகள் மற்றும் தொடர் எண்ணங்களை உடைக்கிறது.
- மனதை நேர்மறையாக ஈடுபடுத்துகிறது.
- மன ஆற்றலை பாதுகாத்து மற்றும் மன அழுத்த சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது, எனவே அனைத்து மனநல நோய்களிலும் இந்த சுய ஆலோசனை முறை பயனுள்ளதாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் நாம் தனியாக இருக்கும் பல நேரங்கள் உள்ளன. சமைப்பது, சுத்தம் செய்தல், வாகனம் ஓட்டுவது, குளிப்பது, போன்ற தினசரி செய்யும் வழக்கமான செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இருப்பினும், மனம் விழிப்புடன் இருக்கும். ஓரளவுக்கு அது நாம் செய்கின்ற செயலில் கவனம் செலுத்துகிறது, ஆனால் அதே நேரத்தில் மற்ற தேவையற்ற எண்ணங்களில் மூழ்கியுள்ளது. நாம் ஒருவருடன் உரையாடும் பொழுது கூட, நம் மனம் வேறு இடத்தில் அலைந்து கொண்டிருக்கும். C1 சுய ஆலோசனை முறை நாமஜபம் செய்வதை எளிதாக்கி, இதன் விளைவாக மனதை எப்பொழுதும் தற்பொழுதைய தருணத்தில் வைத்திருக்க உதவுகிறது.
C1 சுய ஆலோசனை முறையை, மற்ற சுய ஆலோசனை முறைகளுடன் சேர்த்தே தினந்தோறும் எடுத்துக்கொள்ளலாம்.
5. C1 சுய ஆலோசனை முறையின் கூடுதல் எடுத்துக்காட்டுகள்
C1 சுய ஆலோசனை முறையை எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதற்கான வேறு சில எடுத்துக்காட்டுகள் கீழே உள்ளன:
- எப்பொழுதெல்லாம் எனக்கு கவலையோ, வருத்தமோ, தொந்தரவோ, அல்லது எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் கடவுளின் நாமத்தை உச்சரிப்பேன்.
- எப்பொழுதெல்லாம் எனக்கு கவலை, தொந்தரவு, அல்லது எதிர்மறை நிகழ்வு தொடர்பான எண்ணங்கள் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம், நான் கடவுளின் நாமத்தை உச்சரிப்பேன்.
இங்கு நாம் இறுதியில் கடவுளின் பெயரைக் கூறுவதற்குப் பதிலாக, பின்வரும் வழியில் சுய ஆலோசனையை உருவாக்கலாம்.
எப்பொழுதெல்லாம் எனக்கு கவலையோ, வருத்தமோ, தொந்தரவோ, அல்லது எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுகிறதோ, அதை நிறுத்திவிட்டு, நான் ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ நாமஜபத்தை உச்சரிப்பேன்.
- எப்பொழுதெல்லாம் என்னுடைய ஆளுமை குறைபாடுகளால் விரும்பத்தகாத எண்ணம், உணர்ச்சிகள், அல்லது செயல்கள் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் அதை அறிந்துகொண்டு நாமஜபம் செய்யத் தொடங்குவேன்.
- எப்பொழுதெல்லாம் நான் எந்த ஒரு ஆக்கபூர்வமான செயலிலும் ஈடுபடாமல் இருக்கிறேனோ, நான் அதை அறிந்துகொண்டு கடவுளின் பெயரை உச்சரிப்பேன்.
- எப்பொழுதெல்லாம் நான் யாருடனும் பயனுள்ள உரையாடலில் ஈடுபடாதபோதோ, அல்லது என் மனதில் தகாத எண்ணங்கள் எழுகின்றதோ, அப்பொழுதெல்லாம் ஆளுமைக் குறைபாடுகளைப் போக்கவும், விரும்பத்தக்க குணங்களைப் பற்றிய பதிவுகளை உருவாக்கவும், அவற்றை என் ஆழ்மனதில் வலுப்படுத்தவும், கடவுளின் பெயரை உச்சரிப்பது நன்மை பயக்கும் என்றுணர்ந்து, ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற நாமஜபத்தை உச்சரிப்பேன்.
சுய ஆலோசனையின் கடைசி பகுதியை மாற்றுவதன் மூலம், அதில் சிறிய மாறுபாட்டைக் கொண்டு வரலாம். கடவுளின் பெயரைக் கூறுவதற்குப் பதிலாக, சுய ஆலோசனையில் நேர்மறையான சொற்றொடரையும் பயன்படுத்தலாம். அத்தகைய சுய ஆலோசனைகளின் எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- நான் எப்பொழுதெல்லாம் என்னை வருத்தமடையச் செய்யும் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி நினைக்கிறேனோ, அப்பொழுதெல்லாம் நான் இப்போது நிகழ்காலத்தில் இருக்கிறேன் என்றும், நான் திருப்தியாகவும் அமைதியாகவும் இருக்கிறேன் என்றும் மீண்டும் மீண்டும் சொல்வேன்.
- எப்பொழுதெல்லாம் என்னை கவலையடையச் செய்யும் விரும்பத்தகாத எண்ணங்கள் வருகிறதோ, நான் நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கிறேன் என்று திரும்பத் திரும்பச் சொல்வேன்.
C1 சுய ஆலோசனைக்கு ஏதாவது ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்லும்படி மனதை அறிவுறுத்தும் போது, அது கடவுளின் பெயரை உச்சரிப்பதாக இருப்பது சிறந்ததென பரிந்துரைக்கப்படுகிறது. இதுவே ஒரு நேர்மறையான சொற்றொடராக இருக்கும்போது, ஒருவர் அதிலிருந்து உளவியல் ரீதியான பலனை மட்டும் பெறுகிறார். இருப்பினும், சுய ஆலோசனையில் கடவுளின் பெயரும் சேர்த்து உச்சரிக்கும்போது, ஒருவர் உளவியல் நன்மையுடன் சேர்த்து ஆன்மீக நன்மையையும் பெறுகிறார்.
கடவுளின் பெயரை உச்சரிப்பதன் மூலம் ஏற்படும் தெய்வீக சக்தி ஆழ்மனதில் எதிர்மறையான பதிவுகளை வெல்கிறது. மேலும், புதிய எதிர்மறை எண்ணப்பதிவுகள் உருவாகுவதில்லை. இது மனதை மேலும் நிலையானதாக ஆக்குகிறது, ஒட்டுமொத்த மன அழுத்தமும் குறைந்து நாம் அமைதியாக உணர்கிறோம்.
6. நாமஜபம் எப்படி வேலை செய்கிறது மற்றும் C1 சுய ஆலோசனையின் வழிமுறை
ஆழ்மனதில் உள்ள வலுவான எண்ணப்பதிவுகள் மற்றும் மையங்கள் வலுவான எண்ணங்களை உருவாக்குகின்றன, மேலும் இவை வெளிமனதில் நுழைகின்றன. வெளிமனது ஒரு சமயத்தில் ஒரே ஒரு எண்ணத்தை மட்டுமே அனுமதிக்கும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் அது எப்போதும் வலுவான சிந்தனையாகும்.
நாம் கடவுளின் பெயரை உச்சரிக்கும்போது, மனதில் உள்ள மற்ற பதிவுகள் மற்றும் மையங்கள் மிகக் குறைந்த கவனத்தைப் பெறுகின்றன. இவ்வாறு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், மற்ற மையங்கள் வலிமையைக் குறைத்து, இறுதியில் அவை இல்லாமல் போய்விடும்.
தயவுசெய்து பார்க்கவும் ‘விலகல் முறையின் மூலம் நாமஜபம் ஆழ்மனதில் எவ்வாறு செயல்படுகிறது’ .
7. முடிவுரை
நம் மனதில் பல பிறவிகளாக குவிந்து கிடக்கும் எதிர்மறை எண்ணங்களை நம் சொந்த பலத்தில் வெல்வது கடினம். கடவுளின் பெயரை உச்சரிப்பது என்பது கடவுளின் உதவியைப் பெறுவதோடு அவரது தெய்வீக சக்தியை அணுகுவது போன்றதாகும். இதன் விளைவாக, எதிர்மறை எண்ணப்பதிவுகளின் வலிமையைக் குறைப்பது எளிது. சுய ஆலோசனைகள் என்பது நேர்மறையை அனுபவிப்பதற்கும், நமது ஆளுமைகளில் நீடித்த மாற்றங்களைக் கொண்டுவருவதற்கும் முயற்சித்து சோதிக்கப்பட்ட முறையாகும். C1 சுய ஆலோசனைகள் ஒருவரின் ஆற்றலைப் பாதுகாத்து மனதை நேர்மறையாக ஈடுபடுத்துகிறது.