ஆனந்தத்தின் வரைவிலக்கணம்
மகிழ்ச்சியைக் காட்டிலும் பலமடங்கு மேற்பட்ட உன்னதமான நிலையே ஆனந்தமாகும். நாம் சாதாரணமாக மகிழ்ச்சி என்று சொல்வது ஏதாவது ஒரு விதத்தில் உலகரீதியான விஷயத்துடன் சம்பந்தப்பட்டிருக்கும். ஆனால் ஆனந்தம் என்பது உலகரீதியான மகிழ்ச்சியிலும் மேம்பட்ட, ஆத்மாவினால் அனுபவிக்கப்படும் மிக உன்னதமான நிலையாகும்.
வாழ்க்கையில் எவை எல்லாம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்-கிறதோ அவை எல்லாம் நமக்கு துன்பத்தையும் கொடுக்கிறது. இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு நாம் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு உதவும் கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவைகள் :
- ஐம்புலன்கள்: சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்த (ஒலி, தொடு உணர்வு, காட்சி, சுவை, வாசனை) மூலமாகக் கிடைக்கும் மகிழ்ச்சியே ஐம்புலன்களின் மூலமாக கிடைக்கும் மகிழ்ச்சியாகும்.
உதாரணம் : ஐஸ்க்ரீமில் மிகுந்த விருப்பம் உள்ள மனிதன் அது கிடைக்கும் கடைக்கு சென்று ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிடுகிறான். அதன் மேல் உள்ள விருப்பத்தினால் மேலும் மேலும் வாங்கி சாப்பிடுகிறான். ஆனால் முதல் கப் வாங்கி சாப்பிடும்போது உண்டாகும் மகிழ்ச்சி பிறகு நீடிப்பதில்லை. முதலில் ஏற்படும் மகிழ்ச்சி வரவரக் குறைந்து கொண்டே வந்து கடைசியாக அவன் 7-வது அல்லது 8-வது கப் வாங்கி சாப்பிடும்போது உடல் அசௌகரியத்தை உணர்கிறான். எனவே ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி தற்காலிகமானது. இது வாழ்க்கையில் நாம் விருப்பப்படும் அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும் – நம் மகிழ்ச்சி உச்சத்தை அடைந்த பின் இறங்குமுகமாகிறது.
- மனம் : ஒருவரது மனதில் எழும் எண்ணங்களுக்கும் அதனால் ஏற்படும் உணர்ச்சிகளுக்கும் தொடர்பு உண்டு. (உணர்வுகளும் எண்ணங்களும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்தவை – மகிழ்ச்சியான எண்ணங்கள் சந்தோஷத்தையும் துன்பமான நிகழ்ச்சிகளைப் பற்றிய எண்ணங்கள் வருத்தத்தையும் அளிக்கின்றன.) ஐம்புலன்களால் ஏற்படும் மகிழ்ச்சியை விட மனதினால் ஏற்படும் மகிழ்ச்சி உயர்வானது.
உதாரணம் : எந்த உணர்ச்சி நமக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கும்? ஒருவேளை ஒருவர் மீது காதல் கொள்ளும் அனுபவமாக இருக்கலாம். உதாரணத்திற்கு ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருப்பதை கனவிலும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களுடைய உறவு திருமணத்தில் முடிந்த பிறகு, அதே அளவு உச்சநிலை சந்தோஷத்தில் அவர்களால் தொடர்ந்து நீடித்திருக்க முடியவில்லை. திருமணத்திற்குப் பிறகு ஒருவரை ஒருவர் பார்க்கும் கண்ணோட்டம் மாறி எந்த ஒருவர் தனக்கு அதிகபட்ச மகிழ்ச்சியை அளித்தார்களோ அவரைப்போல் தனக்கு துன்பத்தையும் கோபத்தையும் அளிக்கக் கூடியவர் வேறு யாருமில்லை என்ற நிலையை அடைகிறார்கள்!
- புத்தி : புத்தியினால் நாம் எந்த ஒரு செயலின் பலாபலன்களையும் ஆராய்ந்து முடிவெடுக்கிறோம். நமது மனதினால் ஏற்படும் மகிழ்ச்சியை விட நாம் புத்திபூர்வமாக செயல்படும்போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியின் அளவும் தரமும் உயர்வானதாக இருக்கிறது.
உதாரணம் : தனது ஆராய்ச்சியில் முழு மனதுடன் ஈடுபட்டிருக்கும் ஒரு விஞ்ஞானியின் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். பல நூற்றாண்டுகளாக மனித இனத்திற்கு புரியாத ஒரு புதிராக இருந்த ஒரு பிரச்சனைக்கு அந்த விஞ்ஞானி தீர்வு கண்டு மகிழ்ச்சியின் எல்லையை அடைகிறார். சிறிது காலத்திற்குப் பிறகு பிறரின் பாராட்டுதல்கள் மறைந்தவுடன் அவரது மகிழ்ச்சியின் நிலை என்ன? தற்சமயம் அவர் முன்பிருந்த உயர் மகிழ்ச்சி நிலையில் இல்லை. அத்துடன் அவர் புதிதாக ஏதேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் அமைதியற்று தவிக்கிறார். அதைக் காட்டிலும் மோசமாக அவரது கண்டுபிடிப்பு (உதா. ஆற்றல் சமன்பாடு E = mc2) மனித குலத்தின் அழிவுக்கு காரணமாக விளங்கக் கூடிய அணுகுண்டு தயாரிப்புக்கு பயன்படப்போகிறது என்பதை அறிந்து மனம் நொந்து போகிறார்.
இந்த வரைபடம் எவ்வாறு ஐம்புலன்கள், மனம், புத்தி இவற்றின் மூலம் ஏற்படும் மகிழ்ச்சி தரத்திலும் கால அளவிலும் ஒன்றை விட மற்றொன்று உயர்ந்ததாக உள்ளது என்று காட்டுகிறது.
எப்படியாயிலும் ஆத்மாவின் உன்னத நிலையை உணர்ந்து அனுபவிக்கும் ஆனந்தத்தின் தரம் மிகவும் உயர்ந்தது. மேலும் அது நிரந்தரமானது. ஆத்மாவின் மூலம் நமக்கு ஏற்படும் ஆனந்தத்தை அனுபவித்து உணர முடியுமே தவிர வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
வார்த்தைகளின் வரையறையை புரிந்து கொள்ள உதாரணத்திற்கு சர்க்கரையின் இனிப்பு சுவையை எடுத்துக் கொள்ளுங்கள். நாக்கே இல்லாதவனுக்கு நாம் எந்த வகையிலாவது சர்க்கரையின் இனிப்பை உணர்த்த முடியுமா? இயலாது! வார்த்தைகளால் இனிப்பின் சுவையை ஒருவருக்கு உணர்த்த முடியாது. ஆத்மாவினால் அடையும் ஆனந்தத்தை போலவே சர்க்கரையின் இனிப்பையும் சுவைத்துத் தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே ஆன்மீக பயிற்சியின் மூலமாக மட்டுமே ஒருவர் ஆத்மாவின் ஆனந்தத்தை உணர்ந்து அனுபவிக்க முடியும்.