ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் 20 ஆண்டுகளாக ஆன்மீக பயிற்சி மேற்கொள்ளும் திருமதி.ஸ்வேதா கிளார்க், விவரித்த சிரார்த்த சடங்கு தொடர்பான அனுபவம் இது.
நம் வாழ்வில் பித்ருபட்ச காலம்(மஹாளயபட்சம்) ஒரு சிறப்பான இடம் பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில் நமது மூதாதையர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம் என்பதன் பின்னணியில் உள்ள ஆன்மீக அறிவியலைப் பற்றி நானும் என் கணவர் ஷான் கிளார்க்கும் அறிந்தபோது அதன் மகத்துவத்தை உணர்ந்தோம். இருப்பினும், பல ஆண்டுகளாக சிரார்த்தம் மற்றும் பித்ருபட்சம் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த பல ஆன்மீக அனுபவங்கள் தான் அதன் முக்கியத்துவத்தையும், மூதாதையர்கள் மற்றும் அவர்களுடைய சந்ததியினருக்கும் உள்ள மகத்துவத்தையும் உண்மையில் உணர வைத்தது.
பல ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சி மையத்தில் வாழ்ந்ததால் ஆசிரமத்தில் இருப்பவர்கள் மற்றும் அங்கு வாழும் ஸாதகர்களுக்கு சிரார்த்த சடங்கை செய்ய உதவியது எங்கள் பாக்கியம். பக்தியோடும் ஆன்மீக உணர்வோடும் புரோகித ஸாதகர்கள் சிரார்த்தத்தை செய்ததால் ஆன்மீக ரீதியாக மேலும் பலனுடையதாக இருந்தது.
2020-இல் வந்த பித்ருபட்சம் சற்று வித்தியாசமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் மும்பையில் எங்கள் சொந்த வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புரோகித ஸாதகர்களை எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை, ஆனாலும் மூதாதையர்களுக்கு சிரார்த்தம் செய்வதற்கான அவா(ஆசை) இருந்தது. அடுக்குமாடி கட்டிடத்தின் பத்தாவது தளத்தில் நாங்கள் இருந்ததால் மூதாதையர்களுக்கு எவ்வாறு அன்னமிடுவது என்று யோசித்தோம். ஆன்மீக ஆராய்ச்சியின் படி மறுமையிலுள்ள மூதாதையர்கள் நாம் படைக்கும் உணவை சூட்சும ரீதியாகவோ, காகத்தின் வடிவிலோ உட்கொள்ள முடியும்.
இதன் பின்னணியில் உள்ள அறிவியலை விளக்கும் கட்டுரையை படிக்கவும்.
நாங்கள் அடிக்கடி (பித்ருபட்சம் இல்லாத காலம்) எங்கள் குடும்ப வீட்டில் பறவைகளுக்கு ரொட்டி, சாதம், பழம் போன்ற உணவு வைப்போம். பொதுவாக புறாக்கள், மைனாக்கள், குருவிகள், காகங்கள் எங்களது பத்தாவது மாடியின் சமையலறை ஜன்னலில் வந்து உண்ணும். இருப்பினும் பித்ருபட்சத்தன்று படைக்கப்படும் உணவு விரிவானதாகும், அதனால் சிறிய ஜன்னலில் கீழே விழாமல் எவ்வாறு வைப்பது என்று சிந்தித்தோம். காகங்கள் வந்து உண்ணுமா என்றும் யோசித்தோம்.
பித்ருபட்சத்தின் கடைசி நாளான மஹாளய (ஸர்வபித்ரி) அமாவாசையன்று (அமாவாசை நாளில் சிரார்த்தம் செய்தால் ஒருவரின் எல்லா முன்னோர்களுக்கும் நன்மை பயக்கும்) எங்கள் மூதாதையர்களுக்கு உதவ வழியில்லை என்றுணர்ந்து தத்தாத்ரேய பகவானிடம் இவ்வாறு வேண்டினோம்:
“எங்கள் முன்னோர்கள் இந்தப் படையலை ஏற்றுக்கொண்டு திருப்தி அடையவும், மறுமையில் பயனடையவும் தயவுசெய்து நீங்களே எங்களுக்கு உதவுங்கள்.”
நாள் முழுவதும் நாங்கள் நாமஜபம் செய்தோம். எங்கள் மூதாதையர்களுக்கு பிடித்தபடி உணவு தயாரித்தோம். ஷானின் தாத்தா தினமும் விரும்பி சாப்பிட்ட பருப்பு வகை, பலவகை காய்கறி, பூரி, பாயசம், தயிர் பச்சிடி, ஊறுகாய் போன்றவையும் தயாரித்தோம். பெரிய தட்டில் உணவை வைத்து ஜன்னலுக்கு நடுவில் அதை இறுக்கமாகப் பொருத்தி வைத்தோம்.
அடுக்குமாடி கட்டிடத்தின் சமையலறை மேடைக்கு அருகிலுள்ள ஜன்னலில் வைக்கப்பட்ட படையல்
உணவு படைக்கும்போது குடும்பத்தின் மூத்த உறுப்பினரான ஷான் கிளார்க் இன் தந்தையை தட்டைத் தொட்டு படைக்கும் படி கேட்டுக்கொண்டோம். அவர் நாத்தீகராக இருந்தாலும், இந்தச் சடங்கில் பங்கேற்க கேட்டோம், அவரும் ஒப்புக்கொண்டார். அனைத்து குடும்ப உறுப்பினரும் தத்தாத்திரேய பகவானிடம் பிரார்த்தனை செய்து உணவை வைத்தோம். மூதாதையர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட உணவை அவர்களே வந்து ஏற்றுக்கொள்ள வேண்டினோம்.
அங்கிருந்து நகர்ந்து தொலைவிலிருந்து ஜன்னலைப் பார்த்துக்கொண்டு இருந்தோம்.
பின் நடந்தவை மிகவும் ஆச்சரியமானதாகும் :
- முதலில் புறாக்கள், குருவிகள் போன்ற பல பறவைகள் அருகில் உட்கார்ந்து இருந்தும் கூட காகங்கள் மட்டுமே உணவை சாப்பிட வந்தன. மற்ற நாட்களில் சமையலறை ஜன்னல் வழியாக உணவைக் கண்டாலே புறாக்கள் தைரியமாக நுழைந்துவிடும், பிறகு அதனை விரட்ட வேண்டியிருக்கும். இருப்பினும் அந்நாளில் அந்த உணவு மற்ற பறவைகளுக்கல்ல என்று தனக்குள் புரிதல் இருப்பது போல் தெரிந்தது. விலங்கு இராஜ்ஜியத்தில் உள்ள ஒழுக்கத்தைப் பின்பற்றி பரிமாறப்பட்ட உணவில் உள்ள வேற்றுமையை உணர்ந்து மற்ற பறவைகள் சடங்கு உணவை சாப்பிடவில்லை, இதன்மூலம் ஆன்மீக அறிவியல் மிகவும் துல்லியமானது என்று நாங்கள் உணர்ந்தோம்.
- பல காகங்கள் ஜன்னல் பக்கம் ஒரே நேரத்தில் பறந்து வரவில்லை என்பது நாங்கள் கவனித்த மற்றொரு விஷயம். அவைகள் பார்த்த உணவை சண்டை இட்டுக்கொள்ளாமல் பொறுமையாக வந்து உட்கொண்டன.
- பொதுவாக காகங்கள் வழக்கமான நாட்களில் ரொட்டி போன்ற எளிதாக கிடைக்கும் எந்தவொரு உணவையும் கொத்திக்கொண்டு பறந்து போய்விடும். ஆனால் முதல் காக்கை திரவமாக இருக்கும் பருப்பை (தால்) மட்டும் சாப்பிட்டது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் அதை மட்டுமே விரும்பி சாப்பிட்டது, வேறு எதையும் சாப்பிடவில்லை. பிறகு படைத்த உணவுக்கு நன்றி செலுத்தியது போல் உருக்கமாக அது கா..கா.. என்று கரைந்து(கத்தி) பறந்து போயிற்று. நானும் ஷானும் ஆன்மீக உணர்வு விழிப்படைவதை அனுபவித்தோம், ஏனென்றால் ஷானின் தாத்தாவுக்கு பருப்பு (தால்) மிகவும் பிடிக்கும். நாங்கள் படைத்த உணவை அவரது தாத்தா காக்கை மூலமாக ஏற்றுக்கொண்டு திருப்தி அடைந்ததாக நாங்கள் உணர்ந்தோம்.
பிளாஸ்டிக் கிண்ணத்திலுள்ள பருப்பை மட்டும் ஒரு காக்கை உண்டது
- அதன் பிறகு ஒவ்வொன்றாக வந்து காகங்கள் படைத்த உணவை கொத்தி சாப்பிட்டன.
படைத்த உணவின் பல்வேறு பகுதிகளை உண்ண காகங்கள் ஒவ்வொன்றாக வந்தன.
உள்ளே எங்களை எட்டிப் பார்த்த ஒரு காக்கை.
- ஒவ்வொரு காக்கையும் உண்ணும்போது வீட்டிற்குள் இருக்கும் எங்களை எட்டிப் பார்க்கும். போவதற்கு முன் கா…கா.. என்று கரைந்து(கத்தும்) விட்டு சென்றன.
நாள் முடிவதற்கு முன் அனைத்து உணவும் உண்ணப்பட்டன. இந்த ஆன்மீக அனுபவம் கிடைத்ததற்கு தத்தாத்திரேய பகவானுக்கும் பராத்பர குரு ஆடவலே அவர்களுக்கும் (சிரார்த்தத்தின் ஆன்மீக அறிவியல் மற்றும் தொடர்ந்து ஆன்மீக பயிற்சி செய்வதன் மகத்துவத்தை பற்றி வழிகாட்டியதற்கு) மனமார்ந்த நன்றியை செலுத்தினோம். சிரார்த்தம் செய்ய ஒருவருக்கு புரோகிதர்கள் கிடைக்காவிட்டாலும் அதை செய்ய ஆசை இருந்தால் கடவுள் எப்படியாவது வழி விடுவார். எங்களைப் போல யாராவது புரோகிதர்கள் கிடைக்காத நிலைமையில் அல்லது சிரார்த்தம் செய்ய முடியாத நிலையில் இருந்தால் ஆர்வத்தோடு இவ்வாறு எளிய முறைகளை செய்தால் பெரிதளவு ஆன்மீக நன்மை பெற்று ஒருவரின் மூதாதையர்களுக்கு நற்கதி கிடைக்க உதவும் என்பதற்காகத் தான் எங்கள் அனுபவத்தை எழுதினோம்.