அட்டவணை
1. நன்றியுணர்வு என்றால் என்ன?
இறைவன் நம்மை படைத்தது மட்டுமல்லாமல், நமக்கு உயிரையும் கொடுத்து, உயிர் வாழ தேவையான பல்வேறு பொருள்களையும் நமக்கு அளித்துள்ளார். அவரது அருளாலே நாம் இன்னொரு நாள் வாழ்வதற்கு ஒவ்வொரு தினமும் அதிகாலையில் விழித்தெழுகிறோம். இப்பூவுலகில் நாம் வாழ்வது ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பாகும். ஏனெனில், இந்த பூவுலக வாழ்க்கையில் மட்டுமே நாம் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டு, இப்பிறவியின் பயனை அடைய முடியும். யாராவது ஒருவர் நமக்கு எவ்வகையிலாவது உதவும் போது, நமக்கு அவரிடம் நன்றியுணர்வு ஏற்படுகிறது. ஆனால், நாம் வாழத் தேவையான பல வகையான பொருட்களை நமக்கு வழங்கும் இறைவனுக்கு நாம் நமது நன்றியை செலுத்துவதில்லை. நமக்கு அளித்துள்ள அபரிமிதமான செல்வங்களுக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துவதே ஆன்மீக பயிற்சியில் ‘க்ருதக்ஞதா’ என்று சொல்லப்படுகிறது. இம்மாதிரி இறைவனிடம் எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பது என்பது, ஒரு ஸாதகருடைய ஆன்மீக பயணத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் ஆகும்.
உண்மை என்னவென்றால், பொதுவாக மக்கள் தங்களைப் படைத்தவன் இறைவன் என ஒப்புக் கொண்டாலும், இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய தேவையை உணர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்ல அல்லது கெட்ட சம்பவங்கள், முக்கியமாக, சாதாரண அன்றாட நிகழ்ச்சிகள் யாவும் தானே நடக்கின்றன என எண்ணுவது தான். ஏதாவது அசாதாரண நிகழ்ச்சி நடந்தால், உதாரணத்திற்கு, ஒருவரது குழந்தை குணமாக முடியாத வியாதியால் பீடிக்கப்பட்டு, அவரது தீவிரமான ஆழ்ந்த பிரார்த்தனையால் அற்புதம் போல் அவரது குழந்தை அந்த வியாதியிலிருந்து மீண்டு வருவது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தால் மட்டுமே, அவருக்கு இறைவனுக்கு நன்றி செலுத்த தோன்றுகிறது. ஆனால் இறைவன் இது போல் அற்புதமாய் அவருக்கு உதவியதும் நாளடைவில் அவரது மனதில் இருந்து மறைந்து, பழைய நிலைக்கே திரும்பி விடுகிறார். மீண்டும் அவரது வாழ்க்கையில் தாங்க முடியாத ஒரு கஷ்டம் வரும்போது தான், அவருக்கு மீண்டும் இறைவனின் நினைவு வந்து, அவரது உதவி வேண்டி பிரார்த்தனை செய்யத் தோன்றுகிறது.
தற்காலத்தில், நாம் ஆன்மீக முன்னேற்றத்தின் கீழ்நிலையில் உள்ளபோது, 65% நிகழ்ச்சிகள் நமது விதிப்படியும், 35% நிகழ்ச்சிகள் நம்முடைய தன்னிச்சையான செயல்களாலும் நடக்கின்றன. ஆன்மீகத்தில் முன்னேறும்போது, நாம் இறைவனின் இருப்பை நம் வாழ்வில் உணர ஆரம்பிக்கிறோம். இந்நிலையில், இறைவனின் விருப்பப்படியே நமது வாழ்வில் எல்லாம் நடக்கிறது என்பதை உணர்ந்து அவரது அருளை அனுபவபூர்வமாக உணர்கிறோம். ஒருவர் 60% ஆன்மீக நிலையை அடைந்த பின்னரே, அவரால் இதை உண்மையில் உணர்ந்து, நன்றி பாராட்ட முடிகிறது. இந்த அனுபவத்துடன், உண்மையான ஆன்மீக அர்த்தத்தில், நன்றியுணர்வு வருகிறது.
ஒரு ஸாதகர் மற்றும் ஆன்மீகத்தைப் பயிலும் ஒரு உண்மையான மாணவன், நல்லது அல்லது கெட்டது ஆகிய எல்லா சந்தர்ப்பங்களிலும், கற்றுக் கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்கிறார். வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், பிரச்சனைகளிலும் தனது குறை, நிறைகளை எவ்வாறு உணர்ந்து கொள்ள வேண்டும் என கற்கத் துவங்குகிறார். இவ்வாறு ஸாதகர், நீக்க வேண்டிய தனது அடிப்படை குறைகளை பற்றி தெரிந்து கொள்கிறார் மற்றும் தனது நிறைகளை பற்றி அதிக அளவில் புரிந்துகொள்ளக்கூடிய விழிப்புணர்வையும் அடைகிறார். வாழ்க்கையில் எதிர்நோக்கும் எல்லா சந்தர்ப்பங்களில் இருந்தும் தன்னை எவ்வாறு திருத்தி மேம்படுத்திக் கொள்வது என்ற படிப்பினை பெறுகிறார். தற்சமயம் உள்ள நிறைகளை அதிகரிப்பதோடு, மீதி இருக்கும் குறைகளையும் எவ்வாறு புதிய நிறைகளால் நிரப்புவது என்பதையும் தெரிந்து கொள்கிறார். அவரது ஸாதகருக்குரிய குணங்கள் மேலும் மெருகேற இறைவனே நல்லது, கெட்டது ஆகிய எல்லா சந்தர்ப்பங்களிலும் கைதூக்கி விடுகிறார் என்பதை உணர்கிறார். இக்காரணத்தால் நல்லது, கெட்டது ஆகிய எல்லா சந்தர்ப்பங்களிலும் கடவுளிடம் நன்றி உள்ளவராகிறார். இறைவன் சூட்சுமமாக வாழ்வில் சந்தர்ப்பங்களை உருவாக்கி, அந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஆன்மீகப் படிப்பினையை கற்றுக்கொள்ளும் திறனையும் கொடுத்து உதவுகிறார் என்பதை ஸாதகர் அனுபவபூர்வமாக உணர்கிறார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த நன்றியுணர்வு, நம் ஆன்மீக வழிகாட்டி அல்லது குருவின் மீது எழுகிறது. குரு என்பவர் யார்? மற்றும் அவர் எவ்வாறு ஸாதகரை வழிநடத்துகிறார் என்ற தலைப்பின் கீழ் உள்ள கட்டுரையைப் படிக்கவும்.
ஒரு ஸாதகர் ஆன்மீகத்தில் வளர, ஆன்மீக பயிற்சி செய்யாதவர் மூழ்கியிருக்கும் துக்கம், கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளிலிருந்தும் மகிழ்ச்சி, பெருமை போன்ற நேர்மறை உணர்ச்சிகளிலிருந்தும் மீண்டு வர வேண்டும். அப்போதுதான் ஆன்மீக உணர்வுவை வளர்த்துக் கொள்ள முடியும. அந்த நிலையில் ஸாதகர் கடவுளின் இருப்பை எங்கும் உணரத் துவங்குவார். நன்றியுணர்வு ஆன்மீக உணர்வு வளர உதவுகிறது.
2. மேலோட்டமான நன்றியுணர்வு மற்றும் ஆன்மீக உணர்வு பூர்வமான நன்றியுணர்வு
வார்த்தைகளால் மட்டும் நன்றி தெரிவிப்பது மேலோட்டமான நன்றியுணர்வு ஆகும். ஆன்மீக பயிற்சியின் ஆரம்ப நிலையில், ஒரு ஸாதகர் இறைவனுக்கு நன்றியைத் தெரிவிக்கக் கூட வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கும். இருந்தாலும், நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைய, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை நமக்குள் ஏற்படுத்திக் கொள்ள முயல வேண்டியது அவசியம்.
ஆரம்ப நிலையில், நாம் நம் வாழ்வில் இறைவனின் குறுக்கீட்டை தெளிவாக உணரும் போது, நமது இதய ஆழத்திலிருந்து நன்றியுணர்வு வெளிப்படும். மருத்துவர்களால் கைவிடப்பட்ட நம் அன்புக்குரிய நபர் இறைவனின் கருணையினால் காப்பாற்றப்படும்போது அல்லது நீண்ட நாட்களாக நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை கடவுளின் கருணையால் எதிர்பாராத விதமாக திடீரென்று தீரும் போது நாம் இவ்வாறு கடவுளுக்கு நம் இதயம் கனிந்த நன்றி உணர்வை தெரிவிக்கிறோம். மற்ற பல சமயங்களில், நம் வாழ்வில் உள்ள பலவற்றுக்கும் மற்றும் நம் வாழ்வுக்குமே, நாம் உதட்டளவிலேயே அல்லது புத்தி அளவில் தான் நம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆன்மீக பயிற்சியில் நாம் மேலும் மேலும் ஆழமாக மூழ்கும்போது, அதுவரை நமக்கு தெரியாது மறைந்திருந்த புது உலகம் நம் கண்முன் தோன்ற ஆரம்பிக்கிறது. நமக்கு ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுகின்றன. இந்த ஆன்மீக அனுபவங்கள் மூலம் இறைவன் நம்முடன் பேசுகிறார். சின்ன சின்ன சந்தோஷமான தற்செயலான நிகழ்வுகளின் மூலம் நாம் மெதுவாக, ஆனால் நிச்சயமாக, இறைவனின் வழிகாட்டுதலை நமது வாழ்வில் உணரத் துவங்குகிறோம். நம் வாழ்வில் நடக்கும் சிறிய நிகழ்வுகளுக்காகவும், நமது ஆன்மீக பயிற்சியில் தொடர்ச்சியாக இறைவனிடமிருந்து ஊக்கமும், உதவியும் கிடைப்பதற்காகவும், நம் நன்றியுணர்வு வளர்கிறது. நாள் முழுவதும் தொடர்ச்சியாக நன்றியை உணர்ந்து, அந்த நன்றியுணர்வை வெளிப்படுத்துவதன் மூலம் ஒருவர் ஆன்மீக உணர்வு பூர்வமான நன்றியுணர்வை மெதுமெதுவாக வளர்த்துக் கொள்கிறார். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளது போல், ஒரு செயலை துவங்கும் முன்பும், செய்யும் போதும், செய்து முடித்த பின்பும் ‘எல்லாம் கடவுளின் விருப்பப்படி நடக்கிறது, எல்லாவற்றையும் அவரே செய்து முடிக்கிறார்’, என்ற உணர்வு ஸாதகர்களிடம் தொடர்ந்து இருக்கிறது. எனவே, அவரிடம் நன்றியுணர்வு எப்போதும் இருப்பதால், அது இயல்பாக இதய பூர்வமான நன்றியாக வெளிப்படுகிறது. எனவே, இந்த நிலையில் ஸாதகரின் ஒவ்வொரு செயலிலும், அசைவிலும், எண்ணத்திலும் அவரது நன்றியுணர்வு பிரதிபலிக்கிறது.
இந்த அடுத்த கட்ட ஆன்மீக நிலை, ஒருவரின் அகம்பாவம் குறையும்போது விழிப்படைகிறது. இந்நிலை அடைந்த பின்னர், அவரின் அகம்பாவம் குறைந்த நிலையிலேயே இருக்கும்.
உண்மையில், ஆன்மீக உணர்வு பூர்வமான நன்றியுணர்வு, குருவின் அருளால் செயல்பட துவங்குவதால், அது நிலையாக இருக்கிறது.
3. நன்றியுணர்வின் முக்கியத்துவம் என்ன?
ஒரு ஸாதகர், ஆரம்பத்தில், முயற்சி செய்து நன்றி செலுத்த ஆரம்பிகிறார். நாளடைவில், நன்றி செலுத்தும் பழக்கம் இயல்பாகி, ஆன்மீக முன்னேற்றமும் ஏற்பட, ஏற்பட, ஆன்மீக உணர்வுடன் இறைவனுக்கு தனது நன்றியை செலுத்த ஆரம்பிக்கிறார். இந்த நிலையை அடைந்த ஸாதகர், ‘இறைவனே எல்லாவற்றையும் செய்பவர், நான் என்பது ஒன்றுமில்லை’ என்ற உணர்வை தொடர்ந்து அனுபவிக்கும்போது, அவரது சூட்சும அகம்பாவ உணர்வு குறைய ஆரம்பிக்கிறது. தன்னுடைய செயல்திறனின் வரம்புகளையும் குறைவான ஆற்றலையும் அவர் நன்கு உணர்கிறார். எனவே, எந்த கஷ்டமான சூழ்நிலையிலும் அவர் உடனே இறைவனிடம் சரணடைந்த பிறகே எந்த செயலையும் செய்ய துவங்குகிறார். இதுவே ‘இறைவனிடம் சரணாகதி அடைதல்’ என்பதாகும். இதுபோன்ற ஸாதகர் கஷ்டமான காலத்தில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வில் சிறு சிறு நிகழ்வுகளில் கூட, இறைவனிடம் சரணாகதி அடைவதால், ஆன்மீக உணர்வுடன் செயலை செய்யத் துவங்குகிறார். ஸாதகர் ஆன்மீக உணர்வுடன், ‘இறைவா, எனது ஆன்மீக வளர்ச்சிக்கான பொறுப்பை நீயே ஏற்றுக்கொள், நான் அடுத்து மேற்கொள்ள வேண்டிய முயற்சி என்ன?, நீயே எனக்கு வழிகாட்டு’ போன்ற பிரார்த்தனைகளுடன், ஒரு செயலை ஆரம்பிக்கும்போது, இறைவனே உடனுக்குடன் இருந்து அதை நிறைவேற்றி வைக்கிறார். ஆன்மீக உணர்வு பூர்வமான நன்றியுணர்வு மற்றும் சரணாகதி உடைய ஸாதகர் எப்பொழுதும் இறைவனுக்கு அருகாமையில் இருக்கிறார். இது போன்ற ஸாதகர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே, ஆன்மீக அனுபவங்கள், ஆன்மிக வழிகாட்டுதல், ஞானம் போன்றவற்றை இறைவன் அருளுகிறார்.