ஆன்மீக பயிற்சி செய்ய ஆரம்பித்து தொடர்ந்து பயிற்சி செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். அதோடு பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனேயே பலன் தெரிய ஆரம்பிக்கும். ஒவ்வொரு பயனும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ நமது மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யவும் கஷ்டத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
மனதின் சமநிலை
தற்போதைய அவசர யுகத்தில் ஒவ்வொருவரும் ஒரு அவசரமான வாழ்க்கை வாழ்கிறோம். அதை விட்டு வெளியே வந்து ஒரு சாட்சி உணர்வுடன் நாம் எப்படி வாழ்கிறோம் என்று சிந்தித்து பார்ப்பதில்லை.
படத்திலிருக்கும் நீல நிற அலைகள், நம் மனநிலை பெரிதும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலையிலும் அவ்வாறு பாதிக்கப்படாமல் சமாளித்து எவ்வாறு மனதை சமநிலையில் வைத்திருக்கிறோம் என்பதை காட்டுகிறது. அதோடு மனதின் உணர்வுகள் மேலும் பண்படுத்தப்பட்டு ஏற்றத் தாழ்வு இரண்டையும் சமாளிக்க முடிகிறது. ஒருவருக்கு கிடைக்கப் பெறும் ஆன்மீக ஞானத்தால் வாழ்வை தத்துவக் கண்ணோட்டத்துடன் பார்க்க முடிகிறது.
அதற்கான இரு உதாரணங்கள்.
1. ஒரு கலைஞரோ, விளம்பர நடிகரோ அல்லது ஒரு திரையுலக நடிகரோ நடிகையோ அவரவர் துறையில் புகழின் உச்சியில் இருக்கும்போது உலகம் முழுவதும் அந்த மனிதரை தூக்கி வைத்து புகழ்ந்து கொண்டாடுகிறது. சில வருடங்களில் அந்த மனிதர் ஒரு விவகாரத்தில் மாட்டிக் கொள்கிறார். ஒரு ஆதாரமும் இல்லாமல் புரளி ஏற்பட்டாலும் வானளாவப் புகழ்ந்த அதே மக்கள் தாங்களும் புரளி பேசி தங்களின் ஏமாற்றத்தைக் காண்பித்துக் கொள்கிறார்கள். கூடிய விரைவில் அந்த மனிதர் மறக்கப்பட்டு வேறு ஒரு மனிதர் அந்த இடத்தில் ஏற்றப்பட்டு புகழப்படுகிறார்.
மக்கள் அபிப்ராயம் மாறி பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள அந்த மனிதரின் மனநிலை எப்படி இருக்க வேண்டும்? புகழின் உச்சியில் இருந்தபோதே அந்த மனிதனின் மனநிலை சமநிலையில் இருந்திருக்குமானால் ‘நான் மட்டுமே உலகம் என்று இந்த மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் என்னுடைய பலவீனங்கள் என்ன என்று எனக்கு மட்டுமே தெரியும். எனவே நான் என்னை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள முனைவேன்’ என்று நினைப்பான். அதே மனிதன் அவனைப் பற்றி மக்கள் நிந்தனை பேசும்போது முன்னதாகவே அவனுக்கு மனம் சமநிலையில் இருந்திருக்குமானால் அவன் ‘மக்கள் எனக்கு எதிராக திரும்பி விட்டார்கள், ஆனாலும் என் மனசாட்சிப்படி நான் ஒரு தவறும் செய்யாதவன் என்று கடவுளுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும். எனவே அவர்கள் வார்த்தைகள் என்னை ஒன்றும் பாதிக்காது’ என நினைப்பான்.
2. தற்கால சூழ்நிலையில் உலகப் பொருளாதாரத்தினால் ஒருவர் எந்த சமயத்திலும் தன் வேலையை இழக்கும் வாய்ப்பு உள்ளது. எவரொருவர் ஆன்மீக பயிற்சியினால் மனதை சமநிலையில் வைத்திருக்கிறார்களோ அவர்கள் அந்த நிலையிலும் பதட்டப்படாமல் அமைதியாகவே இருப்பார்கள். ஏனெனில் அவர்களது நம்பிக்கை அவர்களது வங்கி இருப்பை விட இறைவன் மீது அதிகமாக இருப்பதுதான். இந்த இறை நம்பிக்கையால் அவர்கள் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த சூழ்நிலையில் நாம் எவ்வாறெல்லாம் ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடலாம் என்பதை ஆராய்ந்து தங்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். அமைதியான மனநிலை சக்தியை சேமித்து, எதிர்வரும் சவால்களை சந்தித்து அவற்றிற்கு தீர்வு காண பெரிதும் உதவும்.