1. உலகம் முழுவதும் நடக்கும் காட்சிகள்

கீழே ஆளுமை குறைகளை களைதல் தொடர்பான எமது காணொளியினை காண்க.

வாஷிங்டன் டி.சி, அமெரிக்கா – மு.ப: 8.00

கவனக்குறைவினால் ஜான் தான் சாவிகளை எங்கே வைத்தேன் என்பதை மறந்து விட்டார். இதனால் தனது ஒரு மணி நேரத்தை சாவிகளை பதட்டத்துடன் தேடியதில் விரயமாக்கியது மட்டுமல்லாது வீட்டையே தலைகீழாக்கி தனது மனைவியையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்.

 

டப்லின், அயர்லாந்து – மு.ப: 10.00

தனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நெடுந்தொடர் ஒன்றில் மூழ்கி இருந்ததால் அய்ஸ்லிங் அடுப்பில் வைத்த கஞ்சியினை மறந்து விட்டார். அவரது பொறுப்பின்மை மற்றும் கவனக்குறைவால் கஞ்சி அடிப்பிடித்ததால் மறுபடியும் உணவை தயாரிக்க வேண்டியதாயிற்று.

 

தென் கொரிய கடற்கரை ஓரத்தின் ஒரு பகுதி – மு.ப: 9.00 – 11.30

அதே போன்ற ஒரு தவறு, ஆனால் மிகப்பெரிய அளவில்…
எம்.வி சிவோல் படகின் நிர்வாகிகள் மற்றும் வேலை செய்யும் குழு மூன்று மடங்குக்கு மேல் மிதமிஞ்சிய சுமையினை தங்களின் படகில் ஏற்றி விட்டார்கள். அவர்களது பொறுப்பின்மை மற்றும் நடைமுறைகளை பின்பற்றாமை ஆகிய தவறுகளால் படகு கவிழ்ந்து 304 பயணிகள் மற்றும் குழுவினரின் உயிர்கள் பறிபோனதோடு 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்கும் விரயமானது.

 

பிரேசில்லியா, பிரேசில் – மதியம் 12.00

தனது பொறுமையின்மை மற்றும் அஜாக்கிரதையால் சிவப்பு போக்குவரத்து விளக்கை தாண்டி வேகமாக வந்த ரொபேர்ட்டோ பெரியதொரு விபத்தினை ஏற்படுத்தி எதிரே வந்த ஒலிவிரா குடும்பத்தினரை படுகாயத்திற்கு உட்படுத்தினார்.

 

ஆக்லாந்து, நியூசிலாந்து – பி.ப: 2.00

எலெனுடைய தோழி மோனிக் தனது உண்மையான காதல் துணையை கண்டுகொண்டதன் நிமித்தம் அவளுக்காக மகிழ்ச்சி அடைவதை விடுத்து எலென் பொறாமை கொண்டார். இதனால் அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டு நல்ல ஒரு நட்புறவு முறிந்து போனது.

 

ரோம், இத்தாலி – பி.ப: 4.00

தான் கூறிய பிறகும் கூட மனைவி வெளியில் சென்றதால் கியோவானியின் அகம்பாவம் காயப்பட சினம் மேலிட்டு மனைவியை அடிப்பதற்காக இடுப்பு பட்டியை கழட்டினார். தனது கோபத்தின் காரணமாக ஏற்பட்ட வீட்டு வன்முறையால் மனைவியும் பிள்ளைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

 

லிஸ்பன், போர்த்துக்கல் – பி.ப: 6.00

தைரியம் இன்மையாலும் பாதுகாப்பற்ற பய உணர்வினாலும் அண்டனியோவினால் வேலைத்தளத்தில் தன்னமிக்கையுடன் செயல்பட்டு உறுதியாக இருக்க முடியாது போக எப்பொழுதும் மன அழுத்தத்துடன் காணப்படுகிறார்.

 

ஸ்டோக்ஹோம், சுவீடன், முன்னிரவு 7.00

மிகவும் உணர்ச்சிவசப்படும் இயல்பு காரணமாக ஜூலியா தனது வாழ்வில் நடந்து முடிந்த கசப்பான அனுபவங்களை திரும்ப திரும்ப நினைத்து கண்ணீர் விடுகிறார்.

 

 

துபாய், அரேபியா, மு.ப 11.00

சாமர்த்தியமாக பேசும் இம்ரான் தனது பேராசையின் காரணமாக நம்பிக்கைக்குரிய தனது சகோதரன் ஆஸிபை ஏமாற்றி அவனுக்கு சேர வேண்டிய பூர்வீக சொத்தை பெற்று சட்ட விரோதமான தொழில் ஒன்றை துவங்குகிறார். அத்தொழில் தோல்வி அடைய ஆஸிப் பெரிய நிதி இழப்பை எதிர்கொள்கிறார்.

 

புது டெல்லி, இந்தியா, இரவு 9.30

இப்பொழுது சிறிய வேறுபாட்டுடன் பெரிய அளவில் நடக்கும் இது போன்ற ஒரு தவறு. பேராசையினால் அரசியல்வாதி ஒருவர் தான் லஞ்சமாக பெற்ற மில்லியன் டாலர் பணத்தை தனிப்பட்ட சுவிஸ் வங்கி கணக்கிற்கு மாற்ற ஏற்பாடுகளை செய்கிறார். இதே பணம் இந்தியாவிற்கு உள்ளேயே காணப்பட்டால் மில்லியன் கணக்கில் பசியால் வாடும் மக்களுக்கு ஒரு மாதத்திற்கு உணவளிக்க முடியும்.

பொதுவாக உலகம் முழுவதும் காணப்படும் தவறுகளுக்கான உதாரணங்கள் இவை; சிலவற்றின் பாதிப்புகள் துயர் நிறைந்ததாகவும் ஆபத்தானதாகவும் உள்ளன. முன்பு பகிரப்பட்ட தவறுகளில் சிலவற்றை நாமும் செய்திருக்கலாம். தவறின் தீவிரம் வேறுபட்டாலும், பெரும்பாலும் நம் ஒவ்வொருவர் இடத்தும் காணப்படும் குறைகளினால் இவ்வகையான தவறுகள் ஏற்படுகின்றன. குறைகள் எனப்படுபவை நம் மனதில் காணப்படும் கர்வம், கோபம், பேராசை, மற்றும் சோம்பேறித்தனம் போன்ற எண்ணப்பதிவுகள் ஆகும். இவை விரும்பத்தகாத எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் செய்கைகளை தூண்டி நமக்கும் மற்றையோருக்கும் துன்பத்தையும் தீங்கையும் விளைவிக்கும்.

2. தவறுகளினால் தனிப்பட்ட ரீதியில் ஏற்படும் பாதிப்பு

இறுதியாக எப்பொழுது கோபப்பட்டீர்கள், எப்பொழுது சந்தோஷமாக இருந்தீர்கள் என ஞாபகம் உள்ளதா? அநேகமாக இல்லை என்பதே பதிலாக இருக்கும். எமது பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற்ற அனைவரும் கூறியது ‘இல்லை’ என்பதே ஆகும்.

மிகவும் தீவிர ஆளுமை குறைகளான கோபம், சோம்பேறித்தனம், குற்றம் காணுதல் மற்றும் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றை கொண்டவர்கள் பொதுவாக எப்பொழுதும் கவலையில் மூழ்கியிருக்கும் நபர்களாக இருப்பர். அவர்களது மனதும் எப்பொழுதும் குழப்பமாகவே காணப்படும். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் எண்ணமும் அது போன்ற குறைகளால் களங்கப்பட்டிருப்பதோடு அவர்களுக்கும் மற்றையோருக்கும் அது வேதனையை அளிக்கிறது.

3. நெருங்கிய உறவுகளின் மீது ஏற்படும் பாதிப்பு

ஆளுமை குறைகளின் நிமித்தம் செய்யப்படும் தவறுகள் நம்மை மட்டுமல்ல, நம்மை சுற்றியிருக்கும் நம் குடும்பம், சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களையும் பாதிக்கும்.

சில சமயங்களில் நமது கோபத்தினை நாம் நியாயப்படுத்தி கொள்கிறோம். உண்மையில் இன்னொருவரே நமது துன்பத்திற்கு காரணமாக உள்ள போதிலும் அவர் மீது கோபம் கொள்வது நமக்கு தான் துன்பத்தை விளைவிக்கிறது.

4. சமுதாயத்தின் மீது ஏற்படும் பாதிப்பு

சமுதாயத்தில் எந்தளவு உயர்ந்த பதவியில் நாம் இருக்கின்றோமோ அல்லது எந்தளவு செல்வாக்கு செலுத்துகிறோமோ அந்தளவு நம்முடைய குறைகளால் மற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறைகள் நிமித்தம் செய்யப்படும் தவறுகள் மற்றும் பிழைகள் மற்றையவரை காயப்படுத்தும் போது எதிர்மறை கர்மாவை நம்முள் எடுத்துக்கொள்வதோடு அதன் காரணமாக மேலும் பல பிறவிகளை இறந்த பிறகு தாங்கிக்கொள்ள வேண்டியதாக இருக்கும்.

5. ஆளுமை குறைகளை களைதல் எவ்வாறு உதவும்

நம் மனதிலிருந்து ஆளுமை குறைகளை களைதல் என்பது சந்தோஷமான வாழ்க்கைக்கும் அமைதியான மனதிற்கும் முக்கியமான ஒரு வழி ஆகும். இந்த தொடர் கட்டுரைகள் மூலம் ஆளுமை குறைகளை களைதல் எனும் செயல்முறை பற்றிய பயிற்சியினை வழங்குகின்றோம். தொடர்ச்சியாகவும் உண்மையாகவும் இந்த செயல்முறையினை மற்றைய ஆன்மீக பயிற்சிகளுடன் சேர்த்து செய்வதால் சுய புரிந்துணர்வு ஏற்படுகிறது. அதாவது இது ஒருவரின் வாழ்கையின் தரத்தை வெகுவாக உயர்த்துவதோடு ஆன்மீக முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கிறது. கோபம், பேராசை போன்ற குறைகள் நம்மில் குறைவடையும் போது நாம் மட்டுமல்ல நம்மோடு தொடர்பு கொள்ளும் மற்றவரும் நன்மை அடைகின்றனர். ஆளுமை குறைகள் மற்றும் அகம்பாவத்தை நீக்கும் இச்செயல்முறையில் பங்கு பெற SSRF உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.