அட்டவணை
1. தவறுகளின் பொதுவான வகைகள்
இந்த கட்டுரையில், தவறுகளை எவ்வாறு பொதுவாக வகைப்படுத்துவது என்று காண்போம். தவறான செயல், தவறான எதிர்மறை எண்ணம் மற்றும் தவறான செயலுடன் இணைந்த தவறான எதிர்மறை எண்ணம் என தவறுகளை வகைப்படுத்தலாம். இவை ஒவ்வொன்றின் சில உதாரணங்களை காண்போம்.
1.1. தவறான செயல்
நமது ஆளுமை குறை ஒன்றின் காரணமாக நாம் செய்யும் தவறான செயலை இது குறிக்கும். தவறான செயல்களின் சில உதாரணங்கள் பின்வருமாறு:
- ஆதவன் தனது பொருட்களை கவனமாக, எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கம் இல்லாததால் தன்னுடைய ஆவணங்களை தவற விடுகிறார்.
- ஷீலா பரீட்சையில் பார்த்தெழுதி, மோசடி செய்கிறாள்.
- மாறன் மது அருந்திவிட்டு வீடு சேர்ந்து, குடிபோதையில் மனைவியை அடிக்கிறார்.
- மதிவாணன் குடித்து விட்டு வாகனம் ஓட்டி, பாதசாரி ஒருவரை மோதி விடுகிறான்.
- பரீட்சைக்கு படிக்க வேண்டிய நேரத்தில், ஷஷாங் வீடியோ கேம்ஸ் விளையாடி, நேரத்தை விரயமாக்குகிறான்.
- தங்கள் நண்பர்கள் மத்தியில் நன்றாக தென்படுவதற்காக அஜய், தீபக்கை இழிவுபடுத்தும் நோக்கில் அவனை கேலி செய்கிறான்.
- சோம்பலினால் சரவணன் எச்சில் பாத்திரங்களை கழுவவில்லை.
1.2. தவறான எதிர்மறை எண்ணம்
ஒரு நிகழ்விலோ, சூழ்நிலையிலோ அல்லது நபரிடமோ நாம் எதிர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்வதே தவறான எதிர்மறை எண்ணம் ஆகும்.
- திரைப்பட நுழைவுச்சீட்டு பெறுவதற்கான வரிசை மெதுவாக நகர்ந்ததால், செல்வி பொறுமை இழந்து, அமைதியற்ற நிலையில் காணப்பட்டாள்.
- தன் கணவர் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதால், ராஜி உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
- தன் தந்தை செலவுக்கு மேல் அதிகமாக பணம் தராததால், மகேஷ் மிகவும் கோபமடைந்தான்.
- மேடை நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு ஒரு நாள் முன்னரே சாந்தா பதற்றமாகி, அன்று முழுவதும் அச்சத்தோடு இருந்தாள்.
- வேலைக்கான நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்ததால், ராமு தனது எதிர்காலத்தை எண்ணி பீதியடைந்தான்.
- தனது நெருங்கிய தோழியின் மகன் பரீட்சையில் முதலிடத்தை பெற்றதை கேள்விப்பட்டபோது, சுனிதா தன் சொந்த மகன் அதே தேர்வில் வெறுமனே தேர்ச்சி பெற்றான் என்பதை எண்ணி பொறாமை பட்டார்.
1.3. தவறான செயலுடன் இணைந்த தவறான எதிர்மறை எண்ணம்
தவறான செயல்களும் தவறான எதிர்மறை எண்ணங்களும் ஒன்று சேர்ந்து நிகழும் உதாரணங்களை இங்கு காணலாம்.
- வேலன், சாலை விதிகளை அவமதித்து அலட்சியமாக தன்னை கடந்து சென்ற வாகன ஓட்டுனர் ஒருவரின் மீது கோபப்பட்டு கூச்சலிட்டான்.
- ஆனந்த் தனது காதலியால் நிராகரிக்கப்பட்ட போது, மன அழுத்தத்திற்கு உள்ளாகி, மதுபான கடைக்கு சென்று மது அருந்தினான்.
- டாக்சி ஓட்டுநர் தன்னை ஏமாற்றியதை அறிந்ததும், ரமேஷ் கோபத்தில் டாக்சி ஓட்டுனரை அடித்து விட்டார்.
- செல்வந்தர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் சுதா, கொஞ்சம் பணம் மேஜை மீது இருப்பதை கண்டாள். பேராசையினால் ஆட்கொள்ளப்பட்டு, யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு அப்பணத்தை திருடிவிட்டாள்.
- தனக்கு விருப்பமான உணவு, உணவு விடுதியில் இல்லாததால், தினேஷ் கோபம் கொண்டு, சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டான்.
- அமலாவை அவளது தந்தை திட்டியதால், நாள் முழுவதும் அறையிலே தாளிட்டு கொண்டு, வெளியில் வராமல் இருந்தாள்.
2. முடிவுரை
- தவறு ஒன்று நேரும்போது அதை கவனிப்பதும், அது தவறான செயலா, எதிர்மறை எண்ணமா அல்லது இரண்டின் கலவையா என உணர்ந்து கொண்டு விழிப்புடன் இருப்பதும் முக்கியமாகும்.
- செய்யப்பட்ட தவறுகளை குறித்து கொள்வது நம்முடைய சுய விழிப்புணர்வு செயல்முறையில் உதவியாய் இருக்கும்.