ஆன்மீக பயிற்சியை மேம்படுத்துகிறது: செயல், எண்ணம், சுபாவம் ஆகிய மூன்று நிலைகளிலும் பிரார்த்தனை நம் ஆன்மீக பயிற்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது:
செயல்: பிரார்த்தனையோடு செய்யப்படும் செயல்கள் ஆன்மீக உணர்வோடு செய்யப்படுவதால் வெகு சில தவறுகளே ஏற்படுகின்றன. எனவே பிரார்த்தனையால் ஒருவரின் ஆன்மீக பயிற்சியின் பல்வேறு செயல்பாடுகள் (உதா. நாமஜபம்,ஸத்சங்கம்,ஸத்சேவை போன்றவை) குரு அல்லது இறைவனின் எதிர்பார்ப்பின்படி சிறப்பாக நடக்கின்றன.
எண்ணம்: மனம் பரபரப்போடு செயல்படும்போது எண்ணங்கள் எல்லையற்று எழுகின்றன. எண்ணங்களால் மனோலயம் ஏற்படுவதில் தடை உண்டாகிறது. உபயோகமற்ற எண்ணங்களால் மனதின் சக்தி விரயமாகின்றது. இவைகளை எல்லாம் தடுப்பதற்கு பிரார்த்தனை மிகவும் உதவுகிறது. மேலும் பிரார்த்தனை கவலைகளைக் குறைத்து மனதின் உள்முக சிந்தனையை அதிகரிக்கிறது.
சுபாவம்: ஆன்மீக உணர்வுடன் செய்யப்படும் பிரார்த்தனை மனதின் உள்முக சிந்தனையைத் தூண்டுகிறது. அதனால் அவரது மனம் உள்முகமாகத் திரும்புகிறது.
இறைவனின் நாமஜபத்தின் வீரியத்தை அதிகமாக்குகிறது: ஒரு ஸாதகர் இறைவனை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் நாமஜபம் செய்கிறார். இறைவனை அடைய வேண்டும் என்ற ஆழ்ந்த தாபம் மற்றும் ஆன்மீக உணர்வுடன் நாமஜபம் செய்தால்தான் அது உண்மையில் பலனளிப்பதாக இருக்கும். ஒரு மகான் இறைவனின் நாமஜபத்தில் மூழ்கி இருப்பதால் அவருக்கு வெளி உலக உணர்வு இருப்பதில்லை. இது போன்ற ஆழ்ந்த ஆன்மீக உணர்வுடன் நாமஜபம் செய்பவரை காண்பது அரிது. இருந்தாலும் நாமஜபத்துடன் கூட தரமான நாமஜபம் நடக்க வேண்டும் என்ற தொடர்ந்த பிரார்த்தனையால் நம் நாமஜபம் இறைவனை சென்றடைகிறது.
ஆன்மீக பயிற்சிக்கு தெய்வீக உதவி: ஒரு ஸாதகர் அவரின் ஆன்மீக பயிற்சியை சார்ந்த ஒரு குறிப்பிட்ட செயல்/எண்ணம்/சுபாவம் அவர் மூலமாக நடக்க வேண்டும் என்று இறைவனிடம் உண்மையாக பிரார்த்தனை செய்யும்போது நடக்க இயலாத கஷ்டமான காரியங்களும் குருவருளால் சுலபமாக நடந்தேறுகின்றன.
தவறுகளுக்கான மன்னிப்பு கிடைத்தல்: ஒரு தவறு நடந்த பின் ஒருவர் பிரார்த்தனை செய்து இறைவனிடம் அல்லது குருவிடம் சரணாகதி செய்தால் அப்பொழுது இறைவன் அல்லது குரு அவரின் தவறை மன்னித்து விடுகிறார். ஆனால் பிரார்த்தனையும் சரணாகதியும் செய்யப்பட்ட தவறின் தீவிரத்திற்கு சமமாக இருக்க வேண்டும்.
அஹம்பாவத்தைக் குறைத்தல்: பிரார்த்தனை மூலமாக நாம் கடவுளிடம் மன்றாடுகிறோம். பிரார்த்தனை மூலமாக மனிதன் தன் அஹம்பாவத்தைத் துறந்து ஸர்வ வல்லமை படைத்த இறைவனிடம் தன் இயலாமையை வெளிப்படுத்தி சரணடைகிறான். இது அவனது அஹம்பாவம் விரைவில் குறைய உதவுகிறது. பிரார்த்தனையின் முக்கியத்துவம் கட்டுரையைப் பார்க்கவும்.
ஆவிகளிடமிருந்து பாதுகாப்பு:ஆவிகளிடமிருந்து (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) காப்பாற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தைத் தரும் சக்தி வாய்ந்த ஆயுதமாக பிரார்த்தனை விளங்குகிறது.
நம்பிக்கை அதிகரித்தல்: ஒரு பிரார்த்தனை பலிக்கும் போது இறைவன் மற்றும் குருவிடம் உள்ள நம்பிக்கை வலுவடைகிறது. நம் ஆன்மீக பயணத்தில் நம்பிக்கையே ஒரே செலாவணி.