அட்டவணை
1. முன்னுரை
பலர் நடு இரவில் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு அசைய முடியாமல் போவதை உணர்வர். அவர்கள் முழுமையாக விழித்திருந்தாலும், சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்தாலும், அவர்களால் நகர முடிவதில்லை. கண்ணுக்கு தெரிந்த, தெரியாத ஏதோ ஒன்றின் இருப்பை அவர்கள் மீதும், அந்த அறையிலும் பலரால் உணர முடிகிறது. ஒருவரை அதிர வைக்கும் இந்த உணர்வால் அவர்கள் பயத்தால் உறைந்து விடுகின்றனர். இந்த அறிகுறிகள்தான் மருத்துவ உலகில் “ஸ்லீப் பராலிசிஸ்” என்று கூறப்படுகிறது.
2. ஸ்லீப் பராலிசிஸ் (உறக்க முடக்கம்) – முக்கிய பார்வைகள்
ஜே. ஆலன் செனி (செனி, 2001) ஆய்வின்படி, ஒருவர் உறங்க ஆரம்பிக்கும்போதோ அல்லது உறக்கத்திலிருந்து விழிக்கும்போதோ சாதாரணமாக இந்த நிலை ஏற்படுகிறது. உறக்க முடக்கம் சம்பந்தமாக செனி மற்றும் மற்ற ஆய்வாளர்களின் முக்கிய பார்வைகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
உலக ஜனத்தொகையில் 3-6% மக்களுக்கு இந்நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது.
30% இளம் வயதினர் வாழ்க்கையில் ஒரு முறையாவது இதை அனுபவிக்கின்றனர்.
இது இளம் வயதினருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஒரே சமயத்தில், இது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை இருக்கலாம்.
இந்த நிலையில், அவர்கள் தன்னிடமோ அல்லது தன்னை சுற்றியோ ஏதோ ஒரு இருப்பை உணரலாம். பயம் அவர்களை கவ்வுகிறது. சிலர், அச்சமயம் ஒரு அசுர சக்தி தன் ஆன்மாவை பீடிக்க முயல்வதாக அல்லது தன்னை நசுக்க அல்லது மூச்சடைக்க முயற்சி செய்வதாக உணர்கின்றனர்.
சிலருக்கு அழுத்தப்படும் அல்லது நெறிக்கப்படும் உணர்வு ஏற்படுகிறது. அதோடு மூச்சு விடுவதும் கடினமாக இருக்கும். சில நேரங்களில், இது பாலியல் வன்முறையாகவோ அல்லது தாக்குதலாகவோ மாறலாம்.
இந்த தாக்குதலின் போது துர்நாற்றம் ஏற்படலாம்.
இது பெரும்பாலும், மல்லாந்து உறங்கும்போது ஏற்படுகிறது.
இந்நிகழ்வால் சிலர் வெட்கப்பட்டு, தங்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கின்றனர்.
3. உறக்க முடக்கத்தை பற்றி நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது?
3.1 நவீன விஞ்ஞானத்தால் கொடுக்கப்படும் விளக்கங்கள்
உறக்க முடக்கத்தை பற்றி ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆனால், நவீன விஞ்ஞானத்தில் இதுவரை தெளிவான மற்றும் உறுதியான விளக்கம் தரப்படவில்லை. இருந்தாலும், பல்வேறு அறிகுறிகளின் சாத்தியமான விளக்கங்களாக முன்வைக்கப்படும் கருத்துக்கள்:
கடுமையான மன அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளவர்கள், உறக்க முடக்குதலின் மூலம் கடந்தகால கொடூரங்களை மறுபடியும் அனுபவிக்கின்றனர்.
கனவைப் போன்ற மனப்பிரமைகளை அவர்கள் காண்கின்றனர்.
உறக்க முடக்கம் என்பது, சுற்றுப்புறத்தை கண்காணித்து, உணரப்படும் அச்சுறுத்தல்கள் அல்லது ஆபத்துகளுக்கு தன்னை தயார்ப்படுத்தும் மூளையின் பகுதியை செயல்படுத்துவதன் காரணமாக ஏற்படுகிறது. எந்தவொரு உண்மையான அச்சுறுத்தலுமின்றி, அதிவேக கண் அசைவுகள் நிறைந்த உறக்கத்தில் மூளையின் இந்த பகுதி செயல்பட்டு, சுற்றுப்புறத்தில் அச்சுறுத்தும் ஒரு இருப்பை உணர்கிறது. (உறக்கத்தின் ‘ரெம்’ பகுதி (REM sleep) என்பது அதிவேக கண் அசைவுகள் கொண்ட கனவு நிலை ஆகும்.)
உறக்கத்திற்கும் விழிப்பு நிலைக்கும் இடையில் உள்ள சுவர் தற்காலிகமாக தகர்வதால், உறக்க நிகழ்வுகளில் ஒன்றான உறக்க முடக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுகின்றது.
3.2 நவீன விஞ்ஞானத்தின்படி உறக்க முடக்கத்திற்கான காரணங்கள்
நவீன விஞ்ஞானத்தின்படி, உறக்க முடக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பின்வருமாறு:
- வாழ்க்கை அழுத்தங்கள்
- உறக்கமின்மை
- பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நீண்டகால உறக்க இடையூறுகள்
- மரபணு சம்பந்தமான காரணங்கள்
3.3 நவீன விஞ்ஞானத்தின் படி உறக்க முடக்கத்திற்கான சிகிச்சை என்ன?
குறிப்பிட்ட காரணமோ அல்லது நிகழ்வுகளின் விளக்கமோ தரப்படாததால், உறக்க முடக்கத்திற்கான எல்லா முன்மொழியப்பட்ட சிகிச்சையும் அனுபவத்தால் பெறப்பட்டதே ஆகும்.
சிலர், உறக்க முடக்கம் என்பதை Fluoxetine போன்ற மனஅழுத்த எதிர்ப்பு மருந்துகளால் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர். இது ‘ரெம்’ (REM) தூக்கத்தை தடுக்கிறது. அடிப்படை மனஅழுத்தம் இருக்கும் இடத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மற்றவர்கள் மருந்துகளை பயன்படுத்துவதை நிராகரிப்பதன் காரணம்: சில நேரங்களில், கோளாறுகளைச் சமாளிக்க மிகச் சிறந்த வழி, கோளாறை பற்றி தெளிவாக புரிந்துகொண்டு, நம்மையோ அல்லது நம்மை சார்ந்தவர்களையோ உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கான சிறந்த வழியை நாமே நாடுதல் ஆகும்.
நாம் மட்டும் இதனால் பாதிக்கப்படவில்லை; பலரும் இதை அனுபவிக்கின்றனர் என்ற மன ஆறுதல் பெறுவது முக்கியம்.
4. உறக்க முடக்கத்தைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி
மேலே குறிப்பிட்ட முக்கிய பரிந்துரைகள் சிலவற்றின் ஆன்மீக விளக்கம் பின்வருமாறு ஆகும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விளக்கங்களும் புள்ளிவிவரங்களும், ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) மேம்பட்ட ஆறாவது அறிவைக் கொண்ட ஸாதகர்களால், மனிதனுக்கு அப்பாற்பட்ட விச்வபுத்தி மூலம் பெறப்பட்டுள்ளன.
உறக்க முடக்கத்தில் ஒரு சூட்சும இருப்பை உணர்வது
ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) ஆராய்ச்சியின்படி, இந்த உறக்க முடக்க நிகழ்வுகள் ஏற்பட முக்கிய ஆன்மீக காரணங்களில் ஒன்று ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை சக்திகள் போன்றவை) தாக்குதல் என்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மக்கள் ஏதோ ஒரு இருப்பை உணர்வதும், ஆவியை கண்ணால் பார்ப்பதும் இதனால்தான். இது மனப்பிரமை அல்ல, உண்மையில் ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை சக்திகள் போன்றவை) ஏற்படும் பாதிப்பே ஆகும் . இதை நாம் ஆறாவது அறிவின் மூலம் உணர்கிறோம்.
மனித வாழ்வில் இது நடப்பதற்கான வாய்ப்புகள்:
பின்வரும் அட்டவணையில் ஸாதகர்கள் மற்றும் ஸாதகர்கள் அல்லாதவர்களின் மீது நடக்கும் தாக்குதலின் அதிர்வெண் பங்கீடு தரப்பட்டுள்ளது. உறக்க முடக்கம் உள்ள அனைவரையும் (மூல காரணம் எதுவாக இருந்தாலும் – உடல்ரீதியாக, மனோரீதியாக அல்லது ஆன்மீகரீதியாக) உள்ளடக்கியது இது.
உறக்க முடக்க தாக்குதலின் அதிர்வெண்
வாழ்நாளில் ஒரு முறை | அடிக்கடி | |
---|---|---|
ஸாதகர்1 | 3% | 0.001% |
ஸாதகர் அல்லாதவர் | 20% | 5% |
அடிக்குறிப்பு:
1. ஆன்மீக ஸாதகர் என்பவர், ஆன்மீக முன்னேற்றத்திற்காக தினந்தோறும் நேர்மையான மற்றும் மனமார்ந்த முயற்சிகள் செய்யும் ஒருவர் ஆவார். அவரின் ஆன்மீக பயிற்சி, ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும். ஆன்மீக முன்னேற்றத்தில் தீவிர ஆசை கொண்டு ஆன்மீக பயிற்சியை அளவிலும், தரத்திலும் உயர்த்த தினசரி முயற்சிப்பார்.
ஸாதகர்கள், தங்கள் ஆன்மீக பயிற்சியின் காரணமாக, கடவுளிடமிருந்து அதிக அளவிலான பாதுகாப்பை பெற முடியும். உறக்க முடக்குதலின் அனைத்து நிகழ்வுகளிலும் 10% மட்டுமே விழித்திருக்கும் நிலையில் நடக்கிறது, 90% உறக்கத்தின் போது நடக்கிறது. இது வாழ்நாளில் ஒரு முறை நடப்பதாக இருந்தாலும் சரி அல்லது அடிக்கடி நிகழ்வதாக இருந்தாலும் சரி, 30% மக்கள் மட்டுமே இந்த நிகழ்வுகளை பற்றி அறிந்திருக்கிறார்கள், 70% மக்கள் இது தனக்கு ஏற்பட்டுள்ளது என்பதை கூட அறிவதில்லை. காரணம் என்னவென்றால், இது ஆழ்ந்த உறக்கத்தில் நடப்பதனால் இருக்கலாம் அல்லது தாக்குதல்கள் நொடிப்பொழுதில் நிகழ்வதால், அவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாமல் போகலாம்.
- இளைஞர்களிடையே இது ஏன் அதிகமாக நடக்கிறது? இது இளைஞர்களிடையே காணப்பட அதிக வாய்ப்புள்ளது. அதற்கான காரணம், இளைஞர்கள் மிக அதிக காலம் வாழ வேண்டி உள்ளதால், அதிகபட்ச கொடுக்கல்-வாங்கல் கணக்கை இன்னும் முடிக்க வேண்டி உள்ளது. புவர்லோகம் அல்லது பாதாளத்திலுள்ள ஆவிகள் அல்லது முன்னோர்களிடம் இருக்கும் எதிர்மறையான கொடுக்கல்-வாங்கல் கணக்கினால் உறக்க முடக்கம் ஏற்படலாம். மேலும், உலக விருப்பங்கள் இளைஞர்களிடம் மிக அதிகமாக உள்ளதால், ஆவிகள் இவர்களை குறி வைத்து தங்கள் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்கின்றன. ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ளும் கண்ணோட்டத்தில், சிறு வயது மற்றும் முதிய வயதில் உள்ளவர்களினால் பெரும் பயனில்லை. முதியவர்கள் தங்கள் வாழ்நாளில், அவர்களது பெரும்பான்மையான கொடுக்கல்-வாங்கல் கணக்கை முடித்து விட்டிருப்பார்கள் மற்றும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களால் பக்குவப் பட்டிருப்பார்கள்.
- பொதுவாக, மல்லாந்து படுத்திருக்கும்போது இந்த தாக்குதல் நடப்பது ஏன்? ஏனென்றால், இரு பக்கங்களில் எந்த பக்கம் ஒருக்களித்து படுத்தாலும், குண்டலினியின் இரு நாடிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் ஆன்மீக சக்தி செயல்பாட்டில் இருக்கும். மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் குண்டலினி குறைந்தபட்ச செயல்பாட்டில் இருக்கும். சக்தியின் ஓட்டம் குறைவதால், ஒருவரின் கர்மேந்த்ரியங்களை எளிதாக செயலிழக்க செய்ய முடிகிறது. குண்டலினி சக்தி என்பது உடலின் பல்வேறு அமைப்புகள் மற்றும் உறுப்புகளுக்கு பாயும் ஆன்மீக சக்தி ஆகும்; அவற்றின் செயல்பாட்டிற்கு இந்த சக்தி இன்றியமையாததாக உள்ளது. இக்காரணத்தால், 70% உறக்க முடக்கங்கள் மல்லாந்து படுத்திருக்கும்போது ஏற்படுகிறது.
- பொதுவாக உறக்க நிலைக்கு போனவுடன் அல்லது அதிலிருந்து வெளியே வரும்போது இந்த தாக்குதல் நடக்கிறது: ஆன்மீக ஆராய்ச்சியின்படி, உறக்க முடக்கம் 10% சந்தர்ப்பங்களில் மட்டுமே உறக்க நிலைக்கு போகும் போது அல்லது அதிலிருந்து வெளியே வரும்போது நடக்கிறது. 90% சந்தர்ப்பங்களில் இது உறக்கத்தில் நடப்பதால், பாதிக்கப்பட்ட நபருக்கு இது தெரிவதில்லை அல்லது அரைகுறையாக தெரிகிறது. எஸ்.எஸ்.ஆர்.எஃப், உறக்க முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சில ஸாதகர்களின் உறங்கும் முறைகளை ஆராய்ந்தனர். இரவு உறக்கத்தில் அவர்களில் அநேகர் செயலிழந்த அல்லது நினைவிழந்த நிலையில் இருப்பது தெரிந்தது. அவர்களை எழுப்புவதற்கு முயற்சி செய்யும்போது, அவர்கள் செயலிழந்த நிலையிலேயே இருந்தனர். ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை), ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள நபர் மீது தாக்குதல் செய்ய விரும்புகின்றன. ஏனென்றால், அப்போது தங்கள் ஆசைகளை (உதாரணத்திற்கு, பாலியல் ஆசைகள்) தீர்த்துக் கொள்ள அவை குறைந்த சக்தியை பயன்படுத்தினால் போதுமானது.
- கால அளவு: ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், ஒரு தாக்குதல் சராசரியாக 3 நிமிடத்திலிருந்து 3 மணி நேரம் வரை இருக்கலாம் என கண்டறியப்பட்டது,
- உறக்க முடக்கத்தின் காரணத்தை எப்படி உறுதிப்படுத்துவது? ஆறாவது அறிவு விழிப்படைந்த ஒருவரால் மட்டுமே உறக்க முடக்கத்திற்கான காரணம் உடல்ரீதியானதா, மனோரீதியானதா அல்லது ஆன்மீகரீதியானதா என்பதை கண்டறிய முடியும். எனினும், உடல்ரீதியான மற்றும் மனோரீதியான காரணங்களால் இது ஏற்படவில்லை என்றறியும்போது, உறக்க முடக்கம் ஆன்மீக காரணங்களால் ஏற்பட்டுள்ளது என்பதை நம் புத்தியினால் யூகிக்க முடியும்.
உறக்க முடக்கத்திற்கான மூல காரணங்கள் மற்றும் நிவாரணங்கள் பற்றிய தெளிவான புரிதல் ஏற்படும்போது, மக்களின் பயம் மற்றும் வெட்கம் குறைந்து, இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு ஏற்படும் என்று நம்புகிறோம்.
4.1 ஆவிகளால் ஏற்படும் உறக்க முடக்கத்தின் வகைகள்
ஆவிகளால் ஏற்படும் உறக்க முடக்க தாக்குதல்கள் அனைத்துமே மூன்று வகையில் அடங்கும் என்று ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் தெரிந்துள்ளது.
4.1.1 நபரின் உடலை அழுத்துவது:
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது நடக்கும்போது நபர் மல்லாந்து படுத்திருப்பதால், ஆவி அவரை கீழே அழுத்தும்போது, அவரால் நகர முடிவதில்லை.
இந்த அழுத்தம் எவ்வாறு கொடுக்கப்படுகிறது?
ஆவிகள், பூரண வாயு தத்துவம் நிரம்பியது, மனிதன், பூரண நில தத்துவம் மற்றும் நீர் தத்துவத்தால் நிறைந்தவன். பிரபஞ்ச தத்துவங்களின்படி, பூரண வாயு தத்துவம், நிலம் மற்றும் நீரைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தது. ஆவிகளின் ஆன்மீக சக்தியை சார்ந்திருக்கும் கருப்பு சக்தியே அவர்களின் ஆயுதமாக விளங்குகிறது. ஆகையால், அவை அழுத்தத்தை கொடுத்தாலும், கயிறுகளால் கட்டினாலும் அல்லது ஒரு வலையை உருவாக்கினாலும், அடிப்படையாக அவர்களின் கருப்பு சக்தி உபயோகிக்கப்பட்டு, விஷ வாயுவை போல் செயல்பட்டு, ஒரு நபரின் முழு உடல் செயல்பாடுகளை பாதிக்கிறது. ஆவிகள் எவ்வாறு ஒருவருக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டும் என விரும்புகிறதோ, அதற்கேற்றார் போல் உடலின் அங்கத்தையும் பாதிக்கும் வழியையும் தேர்ந்தெடுக்கின்றன.
இம்மாதிரியான தாக்குதல்களின் மற்ற பண்புகள்:
- ஒருவரின் மனம், விழிப்புணர்வு நிலையில் இருந்தாலும், அவரால் அசைய முடிவதில்லை.
- இந்நிலை சில நிமிடங்களிலிருந்து பல மணி நேரம் வரை நீடிக்கலாம்.
- பாதிக்கப்பட்டவரை சுற்றியிருப்பவர் அவர் உறங்குகிறார் என எண்ணுகின்றனர். உடல் முழுவதும் செயலிழந்த நிலையில் இருப்பதால், எந்த வித போராட்டமும் அவர் உடலிலோ முகத்திலோ தெரிவதில்லை.
- உறக்க முடக்க தாக்குதலால் பாதிக்கபட்டவர் முழு நினைவுடன் இருப்பதால், சுற்றி உள்ளவரின் குரல்களை அவரால் கேட்க முடிகிறது. ஆனால் காப்பாற்றும்படி குரலெழுப்ப அவரால் முடிவதில்லை.
- சில சமயம், துர்நாற்றத்தை உணரலாம். ஆவிகள் தங்களின் கருப்பு சக்தியை உபயோகித்து இதை செய்கின்றன. பாதிக்கப்பட்டவர் அவரின் ஆறாவது அறிவு அல்லது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவைக் கொண்டு இதை உணர்கிறார். நம் சூட்சும இந்த்ரியங்களால் எவ்வாறு வாசனை, சுவை, பார்வை, தொடு உணர்ச்சி, கேட்கும் சக்தி ஆகியவற்றை உணர முடிகிறது என்பது பற்றிய தெளிவான விளக்கங்களுக்கு நம்முடைய ஆறாவது அறிவைப் பற்றிய கட்டுரையை படிக்கவும்.
- சாதாரணமாக, நரகத்தின் எந்தப் பகுதியை சேர்ந்த ஆவிகளாலும் இந்த தாக்குதல்கள் நடைபெறலாம்.
- தாக்குதலின் கால அளவு, ஆவியின் ஆன்மீக சக்தி, அது எந்த அளவிற்கு அந்த நபருக்கு கஷ்டத்தை கொடுக்க முடிவெடுத்துள்ளது மற்றும் பாதிக்கப்பட்டவரின் ஆன்மீக பலம் ஆகியவற்றைப் பொருத்தது.
- சில சமயங்களில், சிலரால் அதிர்வுகளை உணர முடியும். இந்த அதிர்வுகள், ஒருவரை செயலிழக்க செய்யும் ஆவிகளின் முயற்சிகள் தோல்வியுற்றதை குறிக்கிறது.
- ஒருவரை உலுக்குவதால் நிறுத்தக் கூடிய தாக்குதல்கள், மூதாதையரின் சூட்சும உடல்களால், அந்த இடத்தால், இருப்பிடத்தால் அல்லது குண்டலினியால் ஏற்பட்டது என்பதை உணரலாம்.
இம்மாதிரியான ஒரு உறக்க முடக்க தாக்குதலின் நிகழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
4.1.2 நபரின் உடலைக் கட்டிப் போடுதல்:
- இந்த வகையில், நாலாவது பாதாளத்தை சேர்ந்த மாந்த்ரீகர்கள் போன்ற உயர் நிலை ஆவிகள் தங்களின் சித்திகளை உபயோகித்து ஒருவரை கருப்பு சக்தி கயிற்றால் கட்டிப் போடுகின்றனர். அதனால் அந்த நபர் கட்டிப் போட்டது போல் உணர்கின்றார். அவரால் பேசவோ உடலை அசைக்கவோ முடிவதில்லை.
- மேற்கூறியவற்றில், அழுத்தப்படும் உணர்வைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவர் அனுபவிக்கிறார்.
இம்மாதிரியான ஒரு உறக்க முடக்க தாக்குதலின் நிகழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
4.1.3 மனமும் புத்தியும் கட்டுப்படுதல்:
- இந்த வகையில், ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) ஒருவர் முழுவதும் செயலிழக்கிறார். ஆவிகள் அவரின் உடல், மனம் மற்றும் புத்தியை முழுவதுமாக முடக்கிப் போடுகிறது.
- நான்காவது பாதாளத்தை சேர்ந்த மாந்த்ரீகர்கள் போன்ற உயர் நிலை ஆவிகள் (அதிக ஆன்மீக சக்தி கொண்டவை) தங்களின் அமானுஷ்ய சக்தியை உபயோகித்து, அந்த நபரின் உடலை சுற்றி கருப்பு சக்தியால் வலை போல் பின்னி விடுகின்றனர்.
- பாதாளத்தில் நடத்தப்படும் சூட்சும யாகங்களின் மூலம் இந்த கருப்பு சக்தி வலை உருவாக்கப்படுகிறது. இந்த வலையால் அவரை கட்டிப் போடும்போது, அவரின் மனம், புத்தி ஆகியவை சிறிது சிறிதாக மரத்துப்போய், அவரால் பேசவோ நகரவோ முடிவதில்லை.
5. ஆவிகள் ஏன் உறக்க முடக்கத்தை ஏற்படுத்துகின்றன?
இதற்கு முக்கியமாக நான்கு காரணங்கள் உள்ளன:
- பழி வாங்குதல்
- தங்களின் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளுதல்
- மற்றவரை துன்புறுத்தி அதில் இன்பம் காணுதல்
- கடவுளிடம் பக்தி கொண்ட ஸாதகர்களை துன்புறுத்துதல்
இந்த விஷயங்கள் எல்லாம் ‘ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) இருப்பின் நோக்கம் என்ன?’ என்ற கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
6. உறக்க முடக்கத்திலிருந்து மீள உதவும் வழிகளும் ஆன்மீக நிவாரணங்களும்
6.1 முடக்கத்திலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்?
முடக்கம் ஆன்மீக காரணங்களால் ஏற்படுவதால், ஆன்மீக நிவாரணங்களால்தான் அதிலிருந்து மீள முடியும்.
- இது மாதிரியான நிகழ்வில் முதலில் ஒருவர் செய்ய வேண்டியது, உதவிக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதுதான்.
- பிறகு, அவரவர் பிறந்த குல வழக்கப்படி இறைவனின் நாமத்தை ஜபம் செய்ய வேண்டும். இதிலிருந்து மீளும்வரை இடையிடையே பிரார்த்தனையும் செய்ய வேண்டும்.
- முடக்கத்திலிருந்து மீண்ட பிறகு, இந்த தாக்குதலிலிருந்து காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
பீதி அடையாமல், ஆன்மீக பயிற்சியாக இறைவனின் நாமஜபத்தை செய்வதால் தெய்வீக சக்தி கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதன் பலனாக நம் ஆன்மீக பலம் அதிகமாகி, கருப்பு சக்தியை எதிர்க்கும் சக்தியும் அதிகமாகிறது; அதனால் முடக்கத்தின் கால அளவு குறைகிறது.
6.2 எதிர்காலத்தில் இந்த தாக்குதல் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தாக்குதலிலிருந்து நம்மை பாதுகாக்கும் முக்கிய அரணாக விளங்குவது, நம்மை சுற்றி ஏற்படும் இறைவனின் பாதுகாப்பு கவசம் மற்றும் நம்முள் அதிகரிக்கும் அடிப்படையான சூட்சும ஸாத்வீக தன்மை ஆகும்.
இவற்றை ஏற்படுத்திக் கொள்ள கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும்:
- ஆன்மீக பயிற்சியை துவங்குதல்
- ஒருவர் பிறந்த குல வழக்கப்படி இறைவனின் நாமத்தை தொடர்ந்து ஜபிப்பதையே இக்காலத்திற்கேற்ற ஆன்மீக பயிற்சியாக, உன்னத ஆன்மீக வழிகாட்டிகளாக விளங்கும் மகான்கள் கூறுகின்றனர்
- மூதாதையரால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து பாதுகாப்பு பெற தொடர்ந்து ஆன்மீக பயிற்சியாக தத்த நாமஜபத்தை செய்தல்.
- ஆவிகளிடமிருந்து (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) பாதுகாப்பு பெறவும், ஆன்மீக முன்னேற்றம் அடையவும் அடிக்கடி பக்தியோடு பிரார்த்தனை செய்வது.
- ஆன்மீக நிவாரண முறைகளான விபூதி அணிவது, தீர்த்தத்தை தெளிப்பது, வீட்டில் சாம்பிராணி தூபம் போடுவது அல்லது ஊதுபத்திகளை ஏற்றுவது, கல் உப்புத் தண்ணீரில் கால்களை வைப்பது போன்றவற்றை செய்தல். ஸாத்வீக சுகந்தம் கொண்ட சந்தனம், மல்லிகை அல்லது தாழம்பூ ஊதுபத்திகளை ஏற்றலாம்.
6.3 மற்றவர் எவ்வாறு பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யலாம்?
ஆன்மீக நிவாரணங்களை உபயோகிக்கும் எல்லா நிகழ்வுகளிலும் தத்துவம் ஒன்றே – அடிப்படையான சூட்சும ஸாத்வீக தன்மையை அதிகரித்து, அதே சமயம் தாமஸீக தன்மையை குறைப்பதற்கு முயற்சிப்பது ஆகும்.
இதற்காக, கீழே சொன்னவற்றை பின்பற்றலாம்.
- பாதுகாப்பு கிடைக்க பிரார்த்தனை.
- அவருக்கு அருகில் சாம்பிராணி தூபம் போடலாம் அல்லது ஊதுபத்திகளை ஏற்றலாம். சந்தனம், மல்லிகை மற்றும் தாழம்பூ சுகந்த ஊதுபத்திகள் அதிக பலனுள்ளது.
- பாதிக்கப்பட்டவரின் நெற்றியில் விபூதியை இடவும்.
- அவர் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்.
- அவருக்கு அருகில் இறைவனின் படம் அல்லது சின்னத்தை வைக்கவும்.
- நாமஜப ஒலிநாடாவை ஒலிக்க விடவும்.
ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால், அவரை உலுக்கி எழுப்பலாம். அந்த நிலையிலிருந்து மீளுவதற்கு இது அவருக்கு உதவுகிறது. இதன் காரணம் என்னவென்றால், ஒருவர் செயலிழந்த நிலையில் உள்ளபோது அவரின் ஆன்மீக சக்தி ஓட்டம் தடைபடுகிறது. அவரை உலுக்குவதால் தடைபட்ட ஓட்டம் சரியாகிறது. சக்தி ஓட்டம் உடலில் பாய்வதால், அவரின் அசைவுகள் மீட்கப்படுகின்றன.
தாக்குதல் ஏற்படும் முன்பே தடுக்கும் ஆன்மீக உபாயங்களுக்கு, நம் ஆன்மீக நிவாரணங்கள் பகுதியைப் பார்க்கவும்.
வெளி குறிப்பேடுகள்:
- Cheyne 2001 – The Ominous Numinous, Journal of Consciousness Studies, 8, No. 5–7, 2001
- A. Cheyne 2002 – Waterloo Unusual Sleep Experiences Questionnaire, A Technical Report, Department of Psychology University of Waterloo May 2002
- A webpage about Sleep Paralysis and Associated Hypnagogic and Hypnopompic Experiences
- Night of the Crusher: Science News Online Week of July 9, 2005; Vol. 168, No. 2 , p. 27
- In the dead of the night, reported by Barbara Rowlands in The Observer Sunday November 18, 2001