அட்டவணை
1. தன்னை பற்றிய தகவல்களை சேகரித்தல் பற்றிய அறிமுகம்
முந்தைய அத்தியாயத்தில், தவறுகளுக்கு சில உதாரணங்கள் மற்றும் அவைகளை எப்படி வகைப்படுத்தலாம் என்பதை விளக்கினோம். இந்த அத்தியாயத்தில், நம்மைப் பற்றிய தகவல்களை சேகரிப்பது (அதாவது தவறுகள்) மற்றும் அவற்றை எவ்வாறு எழுதுவது / ஆவணப்படுத்துவது என்று பார்ப்போம்.
ஆளுமை குறைகளை களையும் செயல்முறையை தொடங்குவதற்கு, நீங்கள் தானாக உணர்ந்துகொண்ட அல்லது யாராவது ஒருவர் மூலம் அறிந்து கொண்ட உங்கள் தவறுகளை 7-10 நாட்களுக்கு எழுத முயற்சி செய்யுங்கள். வேறு யாராவது ஒருவரின் தவறுகள் விவாதிக்கப்படுகின்றபோது, நீங்களும் அது போன்ற தவறை செய்திருப்பீர்கள் ஆயின், அவற்றையும் இதனுள் உள்ளடக்குங்கள். தவறுகளை எழுதுவதன் மூலம் நாம் உண்மையில் நம்மை பற்றிய தகவல்களை சேகரிக்கின்றோம். அவ்விதமாய் நம் ஆளுமையை பற்றி மேலும் ஆராயமுடிகிறது. ஆரம்பத்தில் நாம் எங்கு தவறு இழைகின்றோம் என்ற விழிப்புணர்வு மிகவும் குறைவாகவோ அல்லது விழிப்புணர்வு இல்லாமலோ உள்ளது, எனவே நாம் மற்றவர்களின் உதவியை பெறலாம். சுமார் 10 நாட்கள் தவறுகளை எழுதிய பின்பு, எவ்வாறான தவறுகள் திரும்ப திரும்ப ஏற்படுகின்றன என்பதனை விளங்கி கொள்ளமுடியும். இது எங்கு ஒருவர் தன்னை மேம்படுத்தவேண்டும் என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது.
2. தவறுகளை எழுதுகையில் குறிப்பிட்டதாக இருக்க வேண்டும்
தவறுகளை எழுதுகையில், ஒருவர் அதனை குறிப்பிட்டு எளிமையான முறையில் எப்படி எழுத வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் எங்கே தவறு இழைக்கப்பட்டு இருக்கிறது என்பது மனதிற்கு தெளிவாக புரிந்துவிடும்.
தன்னை காப்பாற்றி கொள்வதே மனதின் போக்கு ஆகும். இந்த காரணத்-தினாலேயே ஒருவருடைய மனது தவறுகளை மறைக்க அல்லது ஒரு குழப்பமான நிலையில் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. அப்பொழுது ஒருவரால் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய உதவி கிடைக்காமல் போகிறது. இதன் விளைவாக, மனது ஒருவரை குழப்பமடைய செய்து முட்டாளாக்கி ‘நான் சரி’ என்ற உணர்வினை வலுப்படுத்த முயற்சிக்கிறது. ஆகவே, தவறுகளை எழுதும் பொழுது எவ்வளவுக்கு எவ்வளவு தெளிவாகவும் சுருக்கமாகவும் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையும்.
பிழையான வழியில் தவறுகளை எழுதுவதின் ஒரு உதாரணத்தை காண்போம்
‘’இன்று நான் என் குழந்தைகளிடம் கத்த வேண்டிய பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. அவர்கள் எதையும் சுத்தமாக வைத்திருக்கவில்லை. நான் அவர்களிடம் எவ்வளவு சொல்லியும் அவர்கள் அதனை கற்றுக் கொள்ள-வில்லை. நான் இன்று கொஞ்சம் கண்டிப்பாக இருக்க நேர்ந்தது. அனுவின் நடத்தை மேலும் மேலும் தொந்தரவினை ஏற்படுத்தியது. அவள் எப்பொழுதும் புதிதாக ஒன்றை விரும்புகிறாள். ஒரு பெற்றோராக நான் விஷயங்களை சமநிலையில் வைக்க முயற்சி செய்கிறேன், ஆனால் அவளுடைய கோரிக்கைள் குறைவதாக தெரியவில்லை. எனது சங்கடம் யாதெனில், அவளுடைய கோரிக்கைகளை நான் பூர்த்தி செய்து கொடுத்தால், அவள் பெற்றுக்கொள்பவற்றின் மதிப்பினை புரிந்து கொள்ளமாட்டாள் என்பதாகும். மறுபுறம், நான் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் தமக்கு ஆதரவு தரவில்லை என்று நினைக்கலாம். இதுவும் கடந்து போகும் என்பது எனக்கு தெரியும், ஆனால் அந்த நேரத்தில் நான் கத்த வேண்டி ஏற்பட்டுவிட்டது.’’
இங்கு எழுதப்பட்ட தவறில் பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை நீங்கள் கவனிக்கலாம். இது மனதிற்கு ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கலாம். ஒரு நேரத்தில் நம்மை கவலைப்படுத்தும் அல்லது எரிச்சல் படுத்தும் ஒரு அம்சத்தை எழுதுவது நல்லது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உதாரணத்தில் இரு தவறுகள் உள்ளன.
எனவே, மேலே குறிப்பிட்டுள்ள உதாரணத்தில், அதே தவறை எழுத கீழ்க்கண்ட வழிமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
1. நான் ஞாபகப்படுத்தியும் கூட, அனு (என் மகள்) அலமாரியினை சுத்தப்படுத்தாத போது நான் அவளிடம் கோபப்பட்டேன்.
2. அனு (என் மகள்) விலையுயர்ந்த ஜோடி பாதணிகளை வாங்கும்படி கேட்டபோது, நான் ஒவ்வொரு முறையும் அவளது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் நடந்துகொண்டால் அவள் எல்லாமே எளிதாக கிடைத்துவிடும் என நினைப்பாள் எனும் எதிர்மறை எண்ணம் ஏற்பட்டது.
இதற்கு முன்பு குறிப்பிட்ட விஷயத்தில், சரியான பிரச்சனையை சுட்டிக்காட்டுவது கடினமாக இருக்கும். ஒருவரால் தனது புத்திக்கு சரியான பிரச்சனையை சுட்டிக்காட்ட முடியாவிட்டால், தவறுகளை பகுப்பாய்வு செய்வதற்கோ அல்லது அதற்கு எந்த உதவியும் நாடுவதற்கோ வாய்ப்புகள் குறைவாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட பிரச்சனை / எதிர்மறை எண்ணங்-களுக்கான காரணத்தை மனதில் போட்டுக்கொள்வதற்காக, எழுதப்படும் தவறுகள் குறிப்பிட்டதாக இருப்பது முக்கியம். நீண்ட நிகழ்வு ஒன்றினை சிறிய சம்பவங்களாக உடைத்து எழுதுவதன் மூலம் மனமும் புத்தியும் எங்கு தவறு நிகழ்ந்துள்ளது என்பதனை சரியாக புரிந்துகொள்ளும். தவறிற்கு பொறுப்பாக உள்ள குறையினை அடையாளம் காண்பதற்கு இது உதவியாக இருக்கும்.
3. கவனத்தை உங்கள் பக்கம் செலுத்துங்கள்
இன்னொருவரின் மீது எதிர்மறை எண்ணம் ஏற்படும்போது, ஒருவரால் சில நேரங்களில் தாம் தவறு இழைத்திருக்கிறோம் என தெரிந்துகொள்ள முடிகிறது. எனினும் ஏதோ ஓரிடத்தில் மனமானது, அந்த எதிர்மறை எண்ணம் சரியானதே என நியாயப்படுத்தி ஒருவரை தந்திரமாக நம்பவைத்து விடுகிறது. அவ்வாறே, ஒரு நபர் தனது தவறினை எழுதும்போது மற்றவரின் தவறினை முழுமையாக கொண்டுவந்து விடும் வகையினில் தவறினை எழுதி விடுகிறார். இதன் காரணமாக, ஒருவரின் கவனம் அந்த நிகழ்வில் தன்னுடைய பங்கினில் இல்லாமல் மற்றவரின் தவறில் கவனத்தை கொண்டுபோக வைக்கிறது.
உதாரணம் – மற்றவரின் தவறினில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வெளிமுகமான சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ள தவறு
எனது கணவர் ஜனகன் எப்பொழுதும் கைத்தொலைபேசியுடன் நேரம் செலவழிப்பதோடு எனக்காக நேரம் ஒதுக்குவதும் இல்லை. இன்று இது மறுபடியும் நடந்தது. நான் அவரோடு சில பிரச்சனைகளை பற்றி பேச வேண்டி இருந்தது. அவரோ அதற்கு சிறிது நேரம் தரும்படி கேட்டுக்-கொண்டதுடன் தனது கைத்தொலைபேசியில் மூழ்கி, என்னை காக்க வைத்தார். இது மரியாதை இல்லாத, தாட்சணியம் பாராத முறைகேடான அணுகுமுறையாக எனக்கு தென்பட்டதால் நான் கோபப்பட்டேன்.
உதாரணம் – மிகவும் உள்முக சிந்தனையுடன் எழுதப்பட்ட தவறு
எனது கணவர் கைத்தொலைபேசியில் மூழ்கி இருந்தபோது, என்னிடம் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் அவர் மீது கோபப்பட்டேன்.
இரண்டாவதாக எழுதப்பட்ட தவறினை பார்த்தீர்களாயின் அது ஒருவரை மிகவும் உள்முகமாக நோக்க வைக்கிறது. அத்துடன் ஒருவரை தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்வதற்கு வழிவகுக்கிறது. பின்வரும் விதத்தில் ஒருவரால் அதனை காரணப்படுத்திக்கொள்ள முடியும்.
”சரி, ஜனகன் தனது தொலைபேசியில் மும்முரமாக ஈடுபட்டுக்-கொண்டிருந்தார். ஆனால் அது ஏன் என்னை மிகவும் பாதித்தது? எப்படியிருந்தாலும் முன்னமே அவரிடம் இது பற்றி நான் அறிவிக்கவில்லை. தொடர்பு கொள்வது குறைவாக இருப்பது அவரது பிரச்சனையாக இருப்பினும், என்னை ஆட்கொண்ட இந்த கோபமானது எனக்கே துன்பத்தை அளிக்கிறது. அத்துடன் நான் பேச வந்தது அவர் வேலையை விட முக்கியமானது என நானே கருத்திக்கொண்டேன். எவ்வாறு நான் என் கோபத்தினை குறைத்துக்கொள்வது.?”
4. தவறுகளை நேர்மையாக எழுதுங்கள்
தவறான வார்த்தை பிரயோகம்
சில நேரங்களில் ஸாதகர்கள் தமது தவறுகளை எழுதும்போது அதன் தீவிரத்தை குறைக்கும் வகையில் சில வார்த்தைகளை சேர்ப்பதை கவனித்திருக்கிறோம். உதாரணத்திற்கு, ஒருவர் தன தவறினை பின்வருமாறு எழுதினார்.
”பானு என்னை எனது சகஊழியர் முன்னிலையில் அவமானப்படுத்தியபோது நான் சிறிது வருத்தம் அடைந்ததுடன் ஏதாவது மறுவார்த்தை சொல்ல வேண்டும் போல் இருந்தது.”
உண்மையில் அவர் இதனால் மிகவும் வருத்தமடைந்து இருந்தார், ஆனால் அதனை ஒப்புக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை. அத்துடன், அவர் உண்மையில் செய்ய விரும்பியது, பானுவை அவளது நண்பர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தி அவளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதாகும். பின்வரும் விதத்தினில் தனது தவறினை அவர் எழுதியிருப்பாராயின் அது பொருத்தமாக இருக்கும்.
”பானு என்னை சகஊழியர் முன்னிலையில் அவமானப்படுத்தியபோது நான் மிகவும் வருத்தமடைந்ததோடு அவளை நண்பர்கள் முன்னிலையில் பதிலுக்கு அவமானப்படுத்தவேண்டும் என்ற கடும் உந்துதல் ஏற்பட்டது.”
ஆளுமை குறைகளுடன் இணைந்து ‘சிறிது’ மற்றும் ‘கொஞ்சமாக’ போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது அவ்வளவு பெரிய விஷயமல்ல என மனம் மற்றும் புத்திக்கு தவறான செய்தியினை கொண்டு சேர்க்கிறது.
குறைகளை தாமாகவே ஒத்துக்கொள்ளுதல்
ஸாதகர்கள் கூட பல சமயங்களில் தமக்கு குறிப்பிட்ட குறைகள் இருப்பதை தாமே ஒத்துக்கொள்வதற்கு கடினமாக உணர்கின்றனர். உதாரணமாக, தனது துணைவர் மீது கோபம் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு எளிதாக உள்ளது, ஏனெனில் அது சாதரணமானது என்பதனால் ஆகும். ஆனால், முயற்சிகள் எடுத்து சத்சங்கத்தில் அதற்காக பாராட்டினை பெற்ற சக ஸாதகர் மீது எரிச்சலும் பொறாமையும் இருக்கிறது என்பதனை ஒப்புக்கொள்ள மிகவும் கடினமாக உள்ளது. சோம்பேறித்தனம், திட்டமிடலின்மை, பொறுப்பின்மை போன்ற குறைகளை விட பொறாமை, பேராசை மற்றும் காமம் போன்ற ஆளுமை குறைகளை ஒப்புக்கொள்வது கடினமாக உள்ளது.
சில சமயங்களில் ஒருவருக்கு தனது சுய மரியாதையை காப்பாற்றுவதில் கூடுதல் கவனம் இருப்பதால், இவ்வகையான தவறுகள் ஏற்பட்டு அவற்றை தெரிந்துகொண்டும் கூட அவற்றை எழுதாது விடுகிறார்.
5. தவறுகளை எழுதுவதை எளிதாக்கும் பிற குறிப்புகள்
- தவறுகளை எழுதும்போது தைரியம், தெளிவு, எளிமை மற்றும் நேர்மை போன்றவற்றை மனதில் கொள்ளவேண்டும்.
- ஒரே தவறு ஒரு நாளில் பல தடவைகள் ஏற்பட்டால் – அதனை ஒரு முறை எழுதி அது எத்தனை முறை நடந்தது என்பதை குறித்துக்கொள்ளவேண்டும். தவறின் தீவிர தன்மையினை உணர இது உதவும்.
- வழக்கமாக தவறுகளை எழுத முயற்சிக்கவேண்டும். இதற்காக வழங்கப்பட்டுள்ள ஆளுமை குறைகளை களையும் அட்டவணையை பயன்படுத்தி கொள்ளலாம். A பத்தியில் தேதியினை குறிப்பிட்டு B பத்தியில் ‘எனது தவறுகள்’ பகுதியில் தவறினை குறித்துக்கொள்ளலாம். இந்த முழு அத்தியாயமும் B பத்தியை எவ்வாறு நிரப்புவது என்பது பற்றியதாகும்.
- பொறாமை அல்லது பெருமை போன்ற எண்ணங்கள் சில சமயங்களில் மேலோட்டமாக ஏற்படும். ஒருவர் இதனை உடனுக்குடன் குறித்துக்-கொள்ளவேண்டும், இல்லையெனில் நாள் இறுதியில் தவறுகள் எழுதும்போது இவ்வகையான எண்ணங்கள் ஏற்பட்டதை மறக்க வாய்ப்புள்ளது.
- கைக்கடக்கமாக பேனா மற்றும் தாள் அல்லது கைத்தொலைபேசி மென்பொருள் போன்ற ஏதோ ஒன்றை தவறுகளை குறித்துக்கொள்வதற்காக எப்பொழுதும் வைத்துக்கொள்வது நல்லது.
- SSRF சத்சங்கங்களில் கலந்துகொள்வதன் மூலம் தவறுகளை தெரிந்து கொள்வது மற்றும் எவ்வாறு தவறுகளை இனங்காணுவதில் விழிப்புடன் இருப்பது, எவ்வாறு தவறுகளை எழுதிக்கொள்வது போன்ற விஷயங்களுக்கு உதவியினை பெற்றுக்கொள்ளலாம்.