இந்தக் கட்டுரையை முழுமையாகப் புரிந்துகொள்ள, பின்வரும் கட்டுரைகளைப் படிக்கவும்
- சத்வ ரஜ மற்றும் தம – சூட்சும கூறுகள்
- கூந்தல் பராமரிப்பு மற்றும் சிகை அலங்காரங்கள் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி
- குண்டலினி என்றால் என்ன?
1. ஆன்மீகக் கண்ணோட்டத்தில் கொண்டை சிகை அலங்கார முறை பற்றிய ஒரு அறிமுகம்
பெண்கள் செய்யும் பலவகையான சிகை அலங்கார முறைகளுள் கொண்டையிட்டு கூந்தலை முடியும் முறை மிகவும் பிரபலமாக உள்ளது. ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், கூந்தலை கொண்டையிடுதல் ஆன்மீக ரீதியாக மிகவும் பயனுள்ள வழியாகும் என்பதை கண்டறிந்தோம். இருப்பினும் சரியான முறையில் கூந்தலை கொண்டையிடுவது மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறு சரியான முறையில் கூந்தலை கொண்டையிடாவிட்டால் ஆன்மீக பலன் குறையும் அல்லது சில சமயங்களில் அது பாதகமான விளைவை உருவாக்கலாம். இக்கட்டுரையில் ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் ஒருவரின் கூந்தலை எப்படி கொண்டையிட்டு முடிவது மற்றும் மிகவும் ஸாத்வீகமான கொண்டை சிகை அலங்காரம் பற்றிய நமது கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளோம்.
2. கொண்டை முறை சிகை அலங்காரம் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி
2.1 ஏற்புடைய கொண்டை சிகை அலங்கார முறையை சூட்சும ஞானத்தின் அடிப்படையில் வரைதல்
எங்கள் ஆன்மீக ஆராய்ச்சி குழுவில், மேம்பட்ட ஆறாவது அறிவு பார்வை கொண்ட ஸாதகர்கள் உள்ளனர். கடவுளின் அருளாலும், பல ஆண்டுகால தொடர் ஆன்மீக பயிற்சியினாலும் இந்த ஸாதகர்களால், நாம் ஸ்தூல பரிமாணத்தைப் பார்ப்பது போல் ஆன்மீகப் பரிமாணத்தையும் பார்க்க முடிகிறது. அத்தகைய ஒரு ஸாதகரான திருமதி பிரியங்கா லோட்லிகர் அவர்கள், ஒரு பெண் தனது கூந்தலை கொண்டையிடும் முறையை கண்டு அதிலுள்ள ஆன்மீக அதிர்வலைகளை தனது சூட்சும ஞானத்தின் மூலம் ஒரு ஓவியமாக வரைந்தார். சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடத்தின் மூலம், ஒரு பெண்ணின் கூந்தலை கொண்டையிடும் போது அவரைச் சுற்றி உருவாகும் ஆன்மீகப் பரிமாணத்தையும் ஆன்மீக நேர்மறைத்தன்மையையும் அவர் நமக்குக் காட்டுகிறார். சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட பிரியங்காவின் அனைத்து வரைபடங்களும் வெளியிடப்படுவதற்கு முன்பு சூட்சும துல்லியத்திற்காக பராத்பர குரு டாக்டர்.ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்பட்டது. சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடத்தின் துல்லியம் 80% ஆகும், இது சராசரி சூட்சும அல்லது ஞானதிருஷ்டி கொண்டு வரையும் கலைஞரின்(ஸாதகரின்) திறனை விட 10% மிகவும் மேம்பட்டதாகும்.
மேலே உள்ள, சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடத்திலிருந்து, ஒரு பெண் தனது கூந்தலை கொண்டையிடும் போது அவளிடம் பலவிதமான நல்ல சக்திகள் தொடர்புபடுத்தப்படுகின்றன. கூந்தல், பாரம்பரிய முறையில் நேர்த்தியாக கொண்டையிட்டு கட்டப்பட்டால், அது ஆன்மீக ரீதியாக தூய்மையான அல்லது ஸாத்வீக அதிர்வலைகளை கிரகித்து வெளியிடும் திறனோடு இருக்கும். மேலும் அந்த பெண்ணின் தேவைக்கேற்ப சுற்றுச்சூழலில் இருந்து அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஸாத்வீக அலைகள் கிரகித்து வெளியிடப்படும். இது, தெய்வீக சைதன்யத்தை தேவைப்படும்போது பெண்ணின் தலையின் வெற்றிடத்திற்கு, தொடுதல் ஊடகத்தின் மூலம் கடத்துகிறது. இதன் வடிவம் தெய்வீக சைதன்யத்தை கிரகிப்பதற்கு உதவும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். மேலும் இது தெய்வீக சக்தியை கடிகார திசையில் நகர்த்துவதால், பெண்ணின் உடலில் சக்தியை தக்கவைத்துக்கொள்ளவும் செய்கிறது.
இதன் காரணமாக, பெண்ணின் உடல் ஸாத்வீக அதிர்வலைகளை கிரகிப்பதில் அதிக உணர்திறன் அடைகிறது, எனவே அது ஆன்மீக ரீதியில் தூய்மைப்படுத்தப்படுகிறது. ஒருவரின் கூந்தல் நீளமாக இருக்கும்போது, அதை கொண்டையிடுவதால், இந்த சக்தியை கிரகிக்கும் திறன் அதிகரிக்கும்.
2.2 கொண்டையை தலையில் எந்த இடத்தில் வைக்க வேண்டும்
குண்டலினி என்றால் என்ன? என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
ஆன்மீக கண்ணோட்டத்தில் தலையின் பின்புறத்தில் கொண்டையிடுவது சிறப்பாக கருதப்படுகிறது. மூன்று முக்கிய குண்டலினி நாடிகளான ஸுஷும்னா நாடி, சூரியநாடி மற்றும் சந்திரநாடி ஆகியவற்றின் சங்கமப் புள்ளிக்கு நேரடியாகப் பின்னால் இருப்பதுவே இதற்கு காரணம் ஆகும். மேலும் கொண்டையின் மையப் புள்ளியானது தலையின் வெற்றிடத்தில் இந்த சங்கமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றலை கிரகித்து தக்கவைத்துக் கொள்ள முடியும். பாரம்பரிய முறையில் கட்டப்படும் கூந்தல், ஆன்மீக சக்தியை குவிப்பதற்கு ஒரு சிறந்த ஊடகமாகும்.
2.3 நேர் வகிடு எடுப்பதின் முக்கியத்துவம்
ஒரு கொண்டையிடும் போது முன் தலையில் நேர் வகிடு எடுக்கவேண்டும் (மையப் பிரிவைச் செய்யவேண்டும்). இதனால், ஒரு பெண் தனது ஸஹஸ்ரார சக்கரத்தின் மூலமாக தெய்வீக சக்தியை பெறுகிறார். பின்னர் அது உடல் முழுவதும் பரவி, மற்ற அனைத்து சக்கரங்களுக்கும் நேர்மறைத்தன்மையை அளிக்க உதவுகிறது.
2.4 கொண்டையிடுவதால் ஏற்படும் பிற ஆன்மீக நன்மைகள்
கூந்தலை கொண்டையிடும் முறையினால் ஆன்மீக நேர்மறை அதிகரிப்பதுடன் பிற நன்மைகளும் உள்ளது.
- ஒரு முக்கிய நன்மை என்னவென்றால், தீய சக்திகளின் தாக்குதல்களில் இருந்து ஒரு பெண்ணைப் பாதுகாக்க நேர்மறை ஆற்றலை வழங்க உதவுகிறது.
- புத்தியைச் சுற்றியுள்ள எந்த சூட்சும கருப்பு சக்தியும் குறைக்கப்படுகிறது.
- கொண்டையிடும் முறையினால் ஒரு பெண்ணின் அறிவுக்கூர்மை அதிகரித்து, முதிர்ச்சியுடன் நடந்து கொள்கிறாள். இத்துடன் அவளது மனம் மேலும் நிலையானதாகி, அதிகப்படியான ஸாத்வீக எண்ணங்கள் உருவாகின்றன.
- அதைத் தொடர்ந்து, உலக வாழ்க்கையில் இருந்துகொண்டே அந்த பெண்ணால் தனது ஆன்மீகப் பயணத்தையும் தொடர இது உதவுகிறது.
2.5 ஆன்மீகக் கண்ணோட்டத்தில் சிறந்த கொண்டை சிகை அலங்கார முறைகள்
பாரம்பரிய கொண்டை முறை
பெண்கள் பல்வேறு வழிகளில் தங்கள் கூந்தலை கொண்டையிடுகிறார்கள். இருப்பினும், சுற்றுச்சூழலில் இருந்து தெய்வீக உணர்வை (சைதன்யம்) ஈர்க்கும் திறன் மேலே உள்ள படத்தில் உள்ளபடி முடிச்சுடன் கட்டப்பட்ட பாரம்பரிய கொண்டைக்கே அதிகம்.
மடிந்த பின்னலால் செய்யப்பட்ட கொண்டை சிகை அலங்கார முறை (இந்தியாவில் கோபா என்று அழைக்கப்படுகிறது)
இது நாம் மேலே விவரித்த பாரம்பரிய கொண்டை முறையை விட சிறந்த ஆன்மீக அதிர்வலைகளை வெளியிடும் மற்றொரு முறையாகும். இந்தியாவின் சில பகுதிகளில் கோபா என்று குறிப்பிடப்படுகிறது. இதை உருவாக்குவதற்கு, ஒருவரின் தலையில் நேர் வகிடு எடுத்து முடியை மூன்றாக பிரித்து பின்னலிட வேண்டும். அதன்பின் பின்னலை மேல்நோக்கி மடித்து, தலையினுள் சொருக வேண்டும் (கொண்டையிட வேண்டும்).
2.6 ஆன்மீகக் கண்ணோட்டத்தில் கொண்டையை எப்படி கட்டக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்
- மேலே விவரிக்கப்பட்ட முறைகளைத் தவிர வேறு எந்த விதத்தில் கூந்தலை கொண்டையிட்டாலும் அதன் ஆன்மீக தூய்மை அல்லது ஸாத்வீகத்தன்மை பாதிக்கப்படுகிறது. உண்மையில் கொண்டை மூலமாக ஆன்மீக தூய்மையை கிரகிப்பதற்கு பதிலாக ரஜ-தம அல்லது ஆன்மீக ரீதியாக தூய்மையற்ற அதிர்வலைகளை உடல் கிரகிக்கும்.
- கழுத்தின் முனையில் கொண்டையை முடிய வேண்டாம், ஏனெனில் அந்த இடம் ஆன்மீக சக்தியை கிரகிக்காது.
- கூந்தலை இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ பிரிப்பது(நேர் எடுப்பது) அல்லது நேர் எடுக்காமல் தூக்கி வாருவது கஷ்டம் தரும் சக்தியால் உண்டாகும் ஆவரணத்தை(படலத்தை) மிக எளிதாக உருவாக்குகிறது.
- கொண்டையின் உள்ளேயும் அதைச் சுற்றியும் கூந்தலை தேவையில்லாமல் முறுக்குவது(இருக்கி கட்டுவது) அதன் நேர்மறை ஆற்றலை கிரகிக்கும் திறனைக் குறைத்து தலையில் கனத்தை ஏற்படுத்துகிறது.
மேற்கூறிய காரணிகளின் விளைவாக, ஒரு நபர் கொண்டையிடுதல் மூலம் நேர்மறையாகப் பயனடைவதற்குப் பதிலாக ஆன்மீக இழப்பைச் சந்திக்க நேரிடும்.
3. கொண்டையிடுவது தொடர்பாக சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
கொண்டை சிகை அலங்காரம் ஒரு பெண்ணின் ஆன்மீக நேர்மறையை அதிகரிக்க உதவும். அதே வேளையில், கூந்தலை கொண்டையிடுவதில் ஆன்மீக முறையினின்று பிறழ்ந்து அவர் செய்யக்கூடிய சில விஷயங்கள் அதன் ஆன்மீக நன்மைகளை குறைக்கும்.
சில பெண்கள் தங்கள் கொண்டையை நிலைநிறுத்தி வைப்பதற்காக பல வண்ணங்களிலான நைலான் வலையை பயன்படுத்துவார்கள். இது தெய்வீக உணர்வு அல்லது சைதன்யத்தை சுற்றுச்சூழலில் இருந்து கிரகிக்கும் கொண்டையின் திறனைக் குறைக்கிறது. இதனால் தீய சக்திகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான சக்தியை வழங்கும் கொண்டையின் தன்மை குறைகிறது.
ஒரு கொண்டையை நாகரீகமாக மாற்ற முயற்சிப்பதில், பல வண்ண ஹேர்பின்கள் அல்லது கிளிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஸாத்வீகமானவை அல்ல, இவை ரஜ-தம அதிர்வலைகளை அளிக்கின்றன. இதன் விளைவாக அதை அணியும் பெண்களை நோக்கி எதிர்மறையான அதிர்வலைகள் ஈர்க்கப்படுகின்றன.
கூந்தலின் முனைகள்(நுனி) கொண்டையை ஒட்டி இருத்தல் கூடாது அவற்றை கொண்டையுனுள் செருகி விடுவதன் மூலம், அதிகபட்ச நேர்மறை ஆற்றல் தக்கவைக்கப்படுகிறது மற்றும் ஒரு பெண் சுற்றுச்சூழலில் உள்ள ரஜ-தம அம்சங்களிலிருந்தும் (அதிர்வலைகளிலிருந்தும்) பாதுகாக்கப்படுகிறாள்.
4. தீய சக்திகளின் மீதான விளைவு/தாக்கம்
ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையில் பல்வேறு வகையான பேய்களால் பீடிக்கப்படுதலை நாம் காண்கிறோம். படத்தில் காணப்படுவது போல் இந்த தீய சக்திகளின் ஆளுமை வெளிப்படும் போது, அவர்கள் விரும்புவதையும், விரும்பாததையும் நாம் எளிதாக உணர முடியும். மாறாக, இந்த தீயசக்திகள் எதை விரும்புகின்றன என்பதைக் கவனிப்பதன் மூலம் நமக்கு எது நல்லதல்ல என்பதை நாம் நேரடியாகப் புரிந்துகொள்கிறோம். ஏறக்குறைய எல்லா சந்தர்ப்பங்களிலும், பாதிக்கப்பட்டவர் தனது கூந்தலை ஒரு கொண்டையில் கட்டியிருந்தால், அவரிடம் வெளிப்படும் தீய சக்தி, கொண்டை சிகை அலங்காரத்தின் நேர்மறைத்தன்மையை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவற்றை அவிழ்த்துவிடும். அருகிலுள்ள படம் தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு நபரைக் காட்டுகிறது மற்றும் அவை வெளிப்பட்டபோது அது செய்த காரியங்களில் முதன்மையானது கொண்டையிடப்பட்ட கூந்தலை அவிழ்த்ததாகும்.
கட்டுரையைப் பார்க்கவும் – உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் பேய்களால் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை ஆற்றல்கள் போன்றவை) பாதிக்கப்பட்டுள்ளனர்?
5. சுருக்கமாக
பாரம்பரிய முறை படி கூந்தலை கொண்டையிடுவது ஆன்மீக நேர்மறையை மேம்படுத்துகிறது மற்றும் தீய சக்திகளால் தாக்கப்படும் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே எங்களின் பெண் வாசகர்கள் நடைமுறையில் உள்ள நாகரீகத்தால் திசை மாறிவிடாமல் பாரம்பரிய கொண்டை சிகை அலங்காரத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆன்மீக பயிற்சியைச் செய்யும்பொழுது ஒருவருக்கு கொண்டை சிகை அலங்காரத்தின் ஆன்மீகத் தூய்மையை உணரும் திறன் அதிகமாகிறது. இந்த தூய்மையை ஒருவர் உணர ஆரம்பித்தபின், கொண்டை சிகை அலங்காரத்தின் நன்மைகள் பற்றிய ஏட்டுக்கல்வி தேவையில்லை, ஏனெனில் அவர்களின் அனுபவமே அவர்களை கூந்தலை கொண்டையிட்டு கட்டுவதை ஊக்குவிக்கும்.
அடுத்த முறை உங்கள் கூந்தலை கொண்டையிட திட்டமிடும் போது, மேலே பார்த்த முறையில் அதைக் கட்டலாம். பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட கொண்டையிலிருந்து நேர்மறையை உங்களால் உணர முடிந்தால், உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், நாங்கள் உங்களிடமிருந்து அதை கேட்க ஆவலாக உள்ளோம்.