என்ன ஆன்மீக ஸாதனை செய்ய வேண்டும் என்பதை செவிமடுத்துக் கேளாமை
நம் அன்றாட வாழ்வில், ஒரு சில பிரச்சனைகள் அல்லது சூழ்நிலைகளுக்கு தீர்வு காண நம்மால் இயலாது அல்லது நாம் கைதேர்ந்தவர்கள் இல்லை என்று உணரும் பொழுது, பிறருடைய ஆலோசனையை நாட வேண்டும் என்பதை பெரும்பாலும் உணருகிறோம்.
உதாரணத்திற்கு,
- நம் உடல்நலம் குன்றினால், நிவாரணம் பெற மருத்துவரையோ, மருத்துவத்துறையில் கைதேர்ந்தவரையோ அணுகுகிறோம். அவர் கூறும் அறிவுரையையும் கடைபிடிக்கிறோம்.
- நம்முடைய வாகனம் பழுதுபட்டால், ஒரு வாகனம் பழுது பார்ப்பவரின் உதவியை நாடி, எவ்வாறு வாகனத்தை பராமரிக்க வேண்டும் என்ற அறிவுரையையும் பெறுகிறோம்.
- நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நம்மை பெரிதாக தாக்கும் பொழுது, நாம் ஒரு வழக்கறிஞரை அணுகி அவரது ஆலோசனையை துல்லியமாக பின்பற்றுகிறோம்.
இவை யாவும் நாம் மற்றவர்களின் ஆலோசனையை அணுகுகிறோம் என்பதற்கான ஒரு சில உதாரணங்களாகும். நாம் ஒரு சில துறைகளில் கைதேர்ந்தவர்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு, மேலும் அந்தந்தத் துறைகளில் கைதேர்ந்தவர்களுக்கு பெரிய தொகையை செலுத்தி அவர்களின் அறிவுரையை பெறுவதற்கு தயாராகவும் இருக்கிறோம்.
மாறாக, நாம் பிறப்பதற்கு முக்கிய காரணமாக (விதியை அனுபவிப்பதை தவிர) இருக்கும் ஆன்மீகம் மற்றும் ஆன்மீக வளர்ச்சி என்று வரும்பொழுது, எது நமக்கு ஆன்மீக ரீதியாக சிறந்தது என்று நமக்குத் தெரியும் என்றே நாம் பெரும்பாலும் நினைக்கிறோம். என்ன ஆன்மீக ஸாதனையை செய்ய வேண்டும் என்பதை ஆர்வத்துடன் கேளாமை அல்லது ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாமை என்பது ஆன்மீக ஸாதனையில் மிகப்பெரிய தடையாகும். மேலும் அது நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகும்.
நாம் ஏன் ஆன்மீகப் பயிற்சிக்கான ஆலோசனைகளை ஏற்க மறுக்கிறோம்?
கீழ்வரும் சில காரணங்களால்:
- ஆன்மீகம் என்பது மிகவும் தனிப்பட்டது என்றும், மற்றவர்களால் நமக்கு வழிகாட்ட முடியாது என்றும் நினைத்தல்.
- யாருடைய அறிவுரையை கேட்க வேண்டும் என்று சரிவர தெரியாமல் இருத்தல்.
- நமக்கு எது சிறந்தது என்று நமக்கே தெரியும் என்று தாமாகவே நினைத்துக்கொள்ளுதல்.
இவ்வாறான தடைகளிலிருந்து விடுபட்டு, நம்முடைய செவிமடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள, கீழ்வரும் குறிப்புகளை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- எப்படி மற்ற துறைகளில் கைதேர்ந்தவர்கள் நமக்கு தேவைப்படுகிறார்களோ, அதேபோல் ஆன்மீகப் பாதையிலும் நமக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அவ்வாறு இல்லையென்றால் நாம் தவறான பாதையை தேர்ந்தெடுத்து நம் வாழ்நாளை வீணடித்துவிடுவோம். இதன் விளைவாக நம்முடைய ஆன்மீகப் பயிற்சியானது தேக்கமடைகிறது அல்லது முற்றிலும் சீரழிந்து விடுகிறது.
- ஒருவேளை இதை யாரிடம் கேட்பது என்பது உறுதியாக தெரியவில்லையென்றால், ஆன்மீகப் பயிற்சியின் அடிப்படை கோட்பாடுகளை பின்பற்றிக் கொள்வது, நம் வாழ்வில் ஒரு ஆன்மீக வழிகாட்டியை பெறும் வரை நமது வளர்ச்சியை எளிதாக்கும்.
- ஆன்மீகம் என்பது தனிநபரை பொருத்தது. மேலும் நாம் இறைவனை அடைவதற்கு ஒவ்வொருவரும் அவரவர்களின் தனித்துவமான வழியை தேர்ந்தெடுக்க வேண்டும். இருப்பினும் ஆன்மீகப் பயிற்சியில் நம்முடைய தேர்வுகளை முடிவு செய்வதற்கு ஆன்மீகக் கோட்பாடுகள் மற்றும் கட்டமைப்புகளைப் பற்றிய புரிதல் நமக்கு அவசியம். இதைக் கற்றுக்கொள்ள, ஆன்மீகப் பயிற்சியின் ஆறு அடிப்படைக் கோட்பாடுகளோடு தெரிந்தோ தெரியாமலோ ஒத்துப்போகும் ஆன்மீகப் பாதையில், ஏற்கனவே நடந்து சென்ற மற்றவர்களை நாம் கேட்க வேண்டும்.
- நாம் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற விருப்பமானது மிகவும் வலிமையாகவும் உண்மையானதாகவும், மற்றும் எவ்வித பாகுபாடின்றியும் இருக்குமேயானால், அந்த விருப்பமே இவ்வுலகில் நாம் எங்கிருந்தாலும் நம்முடைய ஆன்மீக வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒருவரிடம் நம்மை இட்டுச்செல்லும். “குருவை நாம் தேடி போகக்கூடாது, சிஷ்யன் அந்த தகுதியை பெறும்பொழுது குருவே அவனைத்தேடி வருவார்”, எனும் பழமொழி ஒன்றில் கூறுவதைப் போன்றாகும்.