‘அன்றாட அலுவல்களில் ஈடுபட்டிருக்கும்போதே எவ்வாறு நாமஜபம் செய்வது? நாம் பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது புத்திபூர்வமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போதோ நாமஜபம் செய்ய முடியுமா?’ போன்றவை நம்மிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளாகும்.
மேற்குறிப்பிட்ட கேள்விக்கு பதில் ‘முடியும்’ என்பதே. ஆனால் இது எப்பொழுது முடியும் என்றால், நாம் நமது ஆன்மீக பயணத்தில் முன்னேறி நாமஜபத்தின் மையம் நம் ஆழ்மனதில் நன்றாக பதிவாகி இருக்கும் நிலையை அடைந்தாலே இது சாத்தியமாகும். தொடர் நாமஜபம் எப்பொழுது இயலும் என்பதை புரிந்து கொள்வோம்.
பொதுவாக, நாம் ஒரே சமயத்தில் எட்டு விதமான விஷயங்களில் கவனம் செலுத்த முடியும். அவை என்னவென்றால் 1. காது, 2. சருமம், 3. கண்கள், 4.நாக்கு மற்றும் 5. மூக்கு எனக் கூறப்படும் ஐம்புலன்களும் 6. மனம், 7. ஆழ்மனம் மற்றும் 8.புத்தி என்று கூறப்படும் மூன்று அந்தக்கரணங்களும் ஆகும்.
கீழே குறிப்பிட்டுள்ள கட்டுரைகளைப் பார்க்கவும் :
இதை விவரமாக புரிந்து கொள்வதற்கு உதாரணமாக ஒரு பரபரப்பான சாலை ஒன்றை ஒரு பெண் எவ்வாறு கடந்து செல்கிறாள் என்று பார்ப்போம். ஐம்புலன்களாகிய ஐந்து புறக் காரணங்கள், மனம், ஆழ்மனம், புத்தி ஆகிய மூன்று அந்தக்கரணங்களும் ஒரே சமயத்தில் அதனதன் செயல்களை எவ்வாறு செய்கின்றன என்பதை அப்பெண்ணின் மூலம் பார்ப்போம். அந்தப் பெண்ணின் உடலை சுற்றி மனம், புத்தி ஆகிய அந்தக்கரணங்கள் சூழ்ந்திருப்பதை ஒரு ஒளிமண்டலம் மூலம் காண்பித்திருக்கிறோம். மனமும் புத்தியும் மூளையை போல் பௌதீக உறுப்பு அல்ல. அவை சூட்சுமமாக நம் கண்ணிற்கு புலப்படாது நம் உடலை சுற்றி சூழ்ந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்க.
அந்தப் பெண் தெருவை எப்பொழுது கடக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது நாலாபுறத்திலிருந்தும் பல்வேறு தாக்கு-தல்களை ஒரே சமயத்தில் ஐம்புலன்களின் மூலம் உணர்கிறாள். ஒரே சமயத்தில் அவள் வண்டிகளின் போக்குவரத்தைப் பார்க்கிறாள்; வாகனங்கள் செல்வதால் உண்டாகும் சப்தத்தைக் கேட்கிறாள்; அங்கு ஏதோ ஒரு வாசனையை மூக்கின் வாயிலாக உணர்கிறாள்; தன்னை யாரோ தள்ளுவதை உணர்கிறாள்; வாயிலிருக்கும் மிட்டாயின் இனிப்பையும் உணர்கிறாள்; இவை எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் உணர்கிறாள்.
அவளது ஐம்புலன்களும் ஒரே சமயத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், படத்தில் அவளை சுற்றி வெண்படலமாக காண்பித்திருக்கும் அந்தக்கரணங்கள் மூலம் தெருவைக் கடந்து செல்வதைப் பற்றி அவள் நினைகிறாள், புத்தி மூலம் முடிவெடுக்கிறாள், அதே சமயம் அவள் செய்ய வேண்டிய மற்றொரு வேலை குறித்தும் நினைவு கூர்கிறாள்.
மேற்கூறிய எல்லாவற்றையும் வாழ்க்கையில் பல செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது நாம் எல்லோரும் அவ்வப்பொழுது அனுபவித்திருப்போம்.
கடந்த சில வருடங்களாக அந்தப் பெண் ஆன்மீக பயிற்சியின் மூலம் இறைவனின் நாமஜபத்தை செய்கிறாள் என வைத்துக் கொள்வோம். மேற்கூறிய ஐந்து புறக்கரணங்கள், மூன்று அந்தக்கரணங்கள் ஆகிய எட்டு விஷயங்களை கவனித்துக் கொள்ளும் அதே சமயத்தில் அவளை அறியாமலேயே (இயல்பாகவே) நாமஜபத்திலும் அவள் மனம் ஈடுபடுகிறது.
இது எவ்வாறு இயலும் என்பதை பின்வருமாறு காணலாம் :
- எட்டுக் கரணங்களையும் ஒரே சமயத்தில் உபயோகித்து செயலாற்றும் திறன் ஒவ்வொருவரிடத்தும் உள்ளது. எல்லாக் கரணங்களும் அதனதன் வேலையை செய்யும்போது, புத்திபூர்வமாக ஒரு முக்கிய ஆவணத்தை கண்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே மனம் நாமஜபத்தில் ஈடுபட முடியும். ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது வாயும் புத்தியும் அந்த செயலில் ஈடுபட்டிருந்தாலும், மனம் சுதந்திரமாக நாமஜபத்தில் ஈடுபட முடியும்.
- எப்படி இருந்தாலும் ஒருமுறை ஆழ்மனதில் நாமஜப மையம் ஸ்தாபிக்கப்பட்டு விட்டால் நாம் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் இயல்பாக நாமஜபம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். ஒரு ஸாதகர் 50% ஆன்மீக நிலையை எட்டியபின் இது ஏற்படும். இது போன்ற நாமஜபம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் நாமஜபத்தின்போது, சுவாசத்தின்போது ஆனந்த அனுபவத்தைத் தர வல்லது. இந்நிலையின் வெளிப்புற அடையாளம் அந்த ஸாதகரின் எண்ணங்களும் நாட்டமும் உலக விஷயங்களிலிருந்து விலகி ஆன்மீக வளர்ச்சியிலேயே செல்லும். இந்த நிலையை ஒருமுறை அடைந்து விட்டால் உறக்கத்திலும் கூட நாமஜபம் தொடரும். அதாவது 24 மணி நேரமும் நாமஜபம் தொடர்ந்து நடைபெறுகிறது என்று பொருள். அந்த நபர் நாமஜபம் செய்ய வேண்டும் என்று தனி முயற்சி எடுத்துக் கொள்ளாமல் இருப்பதுடன் கூட, சில சமயங்களில் நாமஜபம் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதை அவர் அறியாமல் கூட இருக்கலாம்.
இந்த நிலையை அடையும்வரை நாமஜபம் மனதின் முயற்சியினாலேயே நடைபெற வேண்டும். இங்கு ஒரு நபர் நாமஜபம் செய்து கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்த நிலையிலேயே அவரது நாமஜபம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உள்ள நபர் புத்திபூர்வமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது அவரது நாமஜபம் நடைபெறாது. ஏனெனில் அவரது முயற்சியினால் நடைபெறும் நாமஜபம் தடைபட்டவுடன் அவரது ஆழ்மனதில் நாமஜப மையம் ஸ்தாபிக்கப்படாததால் நாமஜபம் இயல்பாக தொடர்வது இயலாமல் போய்விடுகிறது.